Thursday, September 06, 2007

ஓசாமா(OSAMA)

மதம் தன் கொடிய கரங்களை முதலில் பெண்கள் மீதுதான் தாராளமாக நீட்டுகிறது... அது எந்த மதமாக இருந்தாலும்! சூத்திரனை விடத் தாழ்ந்த பிறவியாகப் பெண்ணைப் பார்க்கும் இந்து மதமாக இருந்தாலும் சரி, இலங்கையில் அரசு மதமாகி அகிம்சைக்கு இம்சை செய்யும் புத்தமதமாக இருந்தாலும் சரி. கலவரம், யுத்தம் என்றால் தாக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். அதிலும் பெண்கள் மீதான அதீத கட்டுப்பாடுகள் நிரம்பிய மற்றொரு மதம் இஸ்லாம். அதன் பெயரால் ஆட்சிக் கட்டில் ஏறி அராஜகம் புரிந்த தாலிபான் காலத்து ஆப்கானிஸ்தான் தான் ஒசாமாவின் களம்.

வேலை செய்யும் உரிமை கேட்டு வீதியிலிறங்கி போராட்டம் நடத்தும் பெண்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கேமரா. அதன் முன்னர் வந்து சாம்பிராணி போடும் சிறுவன் எஸ்பான்டி, அது எதற்கான கூட்டம் என்று சொல்லிவிட்டு அதற்கு ஈடாக பணம் (டாலர்) பெறுகிறான். அவ்வழியே செல்லும் ஒரு தாயையும் மகளையும் வழிமறித்து அவர்களுக்கும் சாம்பிராணி போட்டு பணம் கேட்கிறான். ஊர்வலம் கேமராவை நெருங்குகிறது. தாலிபான்கள் துப்பாக்கிகளோடு வருகிறார்கள். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்படுகிறது. தாயும் மகளும் ஓடி தங்கள் வீட்டில் ஒளிகிறார்கள். கேமராவில் படம் பிடித்தவர் தாக்கப்படுகிறார். ஊர்வலத்தில் வந்த பெண்கள் சிலர் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.

அந்தத் தாய் பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் தாலிபான்கள் வெளிநாட்டுப் பெண் யாரும் உள்ளே இருக்கிறார்களா எனச் சோதனை செய்கிறார்கள். தான் மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கும் பெரியவரின் மகனைத் தன் கணவன் எனச் சொல்லி தப்பிக்கிறாள் தாய். வெளியிலிருந்து வந்திருக்கும் என்னிடம் உன் மனைவி பேசுகிறாள். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறாயே. உனக்கு வெட்கமாயில்லை என்று திட்டிவிட்டு செல்கிறான் அந்தத் தலிபான். வெளிநாட்டுப் பெண் அந்த மருத்துவமனையில் சிக்கியதும் அதை மூட உத்தரவிடுகிறார்கள். அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையைக் காலி செய்ய, பெரியவர் மற்றும் அவரது மகனுடன் சேர்ந்து குளுக்கோஸ் பாட்டிலையும் அதன் தாங்கியையும் (stand) தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் தாயும் மகளும்.

தங்களை வீட்டில் விட்டு விட்டு வருமாறு வேண்டுகிறாள் தாய். அவன் அழைத்துச் செல்கிறான். வழியில் தடுக்கும் தலிபான்கள் உன் மனைவியை வைத்து சைக்கிளில் அழைத்துச் செல்கிறாயே மற்ற ஆண்களுக்கு ஆசை வராதா? பாதங்களை முழுமையாக மூடிக் கொள்ளச் சொல் என்று மிரட்டி அனுப்புகிறார்கள்.

மறுநாளும் என்னை இதுபோல் காப்பாற்றுவீர்களா? என்று அந்தத் தாய் கேட்டதும் அவன் மறுத்துவிடுகிறான். மறுநாள் பெரியவருக்கு மருத்துவ ஊழியம் பார்க்க வருகிறார்கள். பெரியவர் இறந்துவிட்டதால் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி விடுகிறான் பெரியவரின் மகன். குளுக்கோஸ் பாட்டிலையும் தாங்கியையும் தூக்கிக் கொண்டு திரும்பி விடுகிறார்கள்.

பெண்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்று தலிபான் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கணவனை காபூல் போரிலும், சகோதரனை ரஷ்யப் போரிலும் இழந்துவிட்டு புலம்பும் தாய்க்கு பாட்டி யோசனை சொல்கிறாள். 12 வயது மதிக்கத்தக்க பேத்தியை ஆண் பிள்ளையாக மாற்றி வேலைக்கு அனுப்பலாம் என்கிறாள். தாலிபான்களுக்குத் தெரிந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என மிரளும் பேத்திக்கு தைரியமூட்ட பழங்கதை ஒன்றையும் சொல்கிறாள் பாட்டி. கதை கேட்டபடியே தூங்கிவிட, தூக்கத்திலேயே அவளது தலை முடி வெட்டப்படுகிறது.

காலை எழுந்ததும் வெட்டப்பட்ட தன் தலை முடியைப் பார்க்கிறாள் சிறுமி. அவளிடம் தாய், வெட்டப்பட்ட சடையைத் தர, அதை ஒரு தொட்டியில் இட்டு மண் நிரப்பி, குளுக்கோஸ் பாட்டிலிருந்து சொட்டு சொட்டாய் நீர்விட்டு வளருமா என்று பார்க்கிறாள் அவள்.

தலையில் குல்லாய் அணிவித்து, தன் கணவருடன் பணியாற்றிய முன்னாள் இராணுவத்தவர் ஒருவரின் கடையில் வேலைக்குச் சேர்த்து விடுகிறாள். சிறுமி சாலையில் செல்வதை பார்க்கும் தாலிபான் ஒருவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளைப் பின் தொடர்கிறான். சந்தேகப்படும் படி நீ ஏன் நடந்து கொண்டாய் என தாய் கடிந்து கொள்கிறாள்.

மறுநாள் ஊரிலுள்ள சிறுவர்களை யெல்லாம் தாலிபானின் முல்லாக்கள் வந்து இழுத்துச் செல்கின்றனர். இந்தச் சிறுமியும் சிறுவனாகக் கருதப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறாள். அந்தக் கூட்டத்தில் தனக்குத் தெரிந்த சாம்பிராணிப் புகை போடும் சிறுவனிடம் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? என்று கேட்கிறாள். ஒசாமாவின் படையில் நம்மை சேர்க்கப் போகிறார்கள் என்று சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அனைவருக்கும் குர்-ஆன் பயிற்றுவிக்கப்படுகிறது. பின்னர் அனைவரும் தங்கள் உடலை இஸ்லாமிய முறைப்படி சுத்தம் செய்து கொள்வது எப்படி என்பதை ஒரு முல்லா விளக்குகிறார்.

முதலில் வலது பக்க உடலில் தண்ணீரை ஊற்று! பின் இடப் பக்க உடலில்! பின் தலையில் என்று சொல்லிக் கொண்டு, வருபவர் உங்களின் ஈரமான கனவுகளின் பின்னால் உடலை சுத்தப்படுத்துவதை சொல்லித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, துண்டை உடலில் சுற்றிக் கொண்டு கட்டிவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு, மடியை எப்படி சுத்தம் செய்வது என்று விளக்குகிறார். பின்னர் வெதுவெதுப்பான நீர் நிரம்பிய அண்டாவில் அமர்ந்தபடி அனைத்துச் சிறுவர்களும் மேலாடையின்றி துண்டு கட்டியபடி உடலைச் சுத்தம் செய்கிறார்கள். இதை ஒளிந்து கொண்டு பார்க்கும் சிறுமியைக் கண்டுபிடித்து விடுகிறார் முல்லா.

அவளையும் இதேபோல் செய்யச் சொல்ல, அவள் சின்ன தயக்கத்துடன் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீருக்குள் செல்கிறாள். இவளிடம் பெண் தன்மை அதிகமிருக்கிறது என்கிறார் அவர்.

மறுநாள் பையன்களெல்லாம் கூடி நின்று கிண்டல் செய்யும் போது, அவளை அவர்களிடமிருந்து காக்கிறான் எஸ்பான்டி. அப்படியானால் அவள் பெயர் என்ன? என்கிறார்கள். ஒசாமா என்கிறான் அவன்.

ஆனாலும் ஓசாமாவின் மீது மாணவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. மறுநாள் மேலும் தொல்லைப் படுத்துகிறார்கள். நீ ஆணானால் இந்த மரத்தின் மேலேறிக் காட்டு என சவால் விடுகிறார்கள். மரத்தில் வேகமாக ஏறிவிட்ட ஒசாமா. கீழே இறங்க பயப்படுகிறாள். எஸ்பான்டி அவளை இறக்கிவிடுகிறான். அவளுக்கு தைரியம் வரவழைக்க கயிற்றில் கட்டி சுற்றி கிணற்றில் இறக்கி விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து மேலே தூக்கி பார்க்கும் போது, அவள் பருவமடைந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதை வைத்து முல்லா அவள் பெண் என அறிவிக்க, பதறிப்போகும் ஒசாமா ஓடுகிறாள்; சிறுவர்கள் துரத்துகிறார்கள். ஒசாமா கைது செய்யப்பட்டு அவளுக்கு பர்தா அணிவிக்கப்படுகிறது. அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.

மறுநாள் விசாரணையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுகிறார். மருத்துவமனையில் பிடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணை கழுத்தளவு தரையில் புதைத்து கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனைக்கு ஆணாக வேடமிட்ட ஒசாமாவுக்கு தண்டனை வழங்கும் நேரம் வருகிறது.

முல்லா சென்று பஞ்சாயத்துக்காரரின் காதில் ஏதோ சொல்கிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்தக் கிழட்டு முல்லாவுக்கு ஒசாமா கட்டி வைக்கப்படுகிறாள். அம்மாவைத் தேடும் அவளின் அழுகையைக் கவனியாமல் அழைத்துச் செல்லும் முல்லா தன் அந்தப்புரத்தில் உள்ள மனைவிமார்களோடு அடைத்துவிடுகிறான்.

அவர்கள் தங்கள் சோகக் கதையைப் பகிர்ந்து கொண்டவாறு கிழவனை சபித்தபடி ஒசாமாவை சிங்காரிக்கின்றனர். இரவானதும் கிழவர் வருகிறார். அறை அறையாய்த் தேடுகிறார். பதுங்கு குழிக்குள் ஒளிந்திருப்பவளை எழுப்பி அவளுக்கு எந்தப் பூட்டு வேண்டுமென பூட்டுகள் செய்து விடப்பட்ட சரமாலையைக் காட்டுகிறார். அதில் உனக்கு எதுவும் பிடிக்கவில்லையா? என்றபடி பெரிய பூட்டு ஒன்றை எடுத்து உனக்காகவே இது என்று காட்டுகிறார்.

ஒசாமாவை அழைத்துக் கொண்டு ஏணிப் படியேறி மாடிக்கு செல்கிறார். மற்ற மனைவிகள் ஜன்னல் திறந்து பார்க்கின்றனர். கிழவர் பெரிய கதவு வழியாக மாடியிலிருந்து வெளிப்பட்டு பால்கனியில் கொதிக்க வைக்கப்பட்டிருக்கும் நீரில் அமர்ந்து தன்னை சுத்தம் செய்து கொள்கிறார். சிறைக் கம்பிகளின் சத்தமும் ஒசாமா ஸ்கிப்பிங் ஆடும் காட்சியும் புலப்படுகிறது. படம் வலியைத் தந்தபடி நிறைவடைகிறது.

ஒசாமாவின் குழந்தைத் தனத்துக்கு அவ்வப்போது அவள் ஆடும் ஸ்கிப்பிங்கைக் காட்டி, பின் அதனையே துயரத்தை வெளிப் படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சிறப்பு. பெண்களை சிறையிலடைக்கும்போது வரும் கோழிகளின் சத்தம், பின்னணியில் சின்ன சின்ன இசை சேர்ப்புகளில் அதிர்வு என ஒளிப்பதிவுக்கு இணையானது முகமது ரேஷா தர்வாஷியின் இசையும் ஒலிச் சேர்ப்பும்! கொண்டாட்ட வீடு தாலிபான் வரவுக்காக சாவு வீட்டைப் போல் மாறுகிறது.

அவர்களின் அழுகைச் சத்தத்தோடு அடுத்து காட்சியின் குர்-ஆன் ஓதுதல் தொடங்குகிறது. தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தன் முதல் முழு நீளப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநர் சித்திக் பர்மக் தலிபான் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்டவர். அவர்களின் ஆட்சி முடிந்ததற்குப் பிறகு வந்து 2003இல் ஆப்கானிலேயே எடுத்த படம் ஒசாமா.

பார்வைகளிலேயே பயத்தைப் பிரதிபலிக்கும் கண்கள் ஒசாமாவாக நடித்த மரினா கொல் பஹாரியினுடையது. அத்தனை அர்த்தம் அந்தக் கண்களில். எஸ்பான்டியாக நடித்த ஆரிப் ஹெராட்டி, அம்மாவாக நடித்த சுபைதா சாகர் அனைவரும் அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெண் தன் மீது சுமத்தப்பட்ட உடை, அலங்காரம் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறி, ஆணைப்போல வசதியாக வாழப் பழக வேண்டும் என்றார் தந்தை பெரியார். ஆனால் கண்ணாடியில் படிந்த நீராவியில் சடையுடன் கூடிய சிறுமியை வரைந்து பார்க்கும் ஒசாமாவின் மாற்றம் அவள் விரும்பி ஏற்றதல்ல. அவள் தாய் செய்ததும் ஆசைக்காக, அலங்காரத்திற்காக அல்ல.

வாழ வழிதேடி பால் மாறிவேடமிட்டவளை ஆணாதிக்கம் நிறைந்த மதம் நசுக்குகிறது. மீண்டும் பெரியார் சொன்னதுதான்: எலிகளால் பூனைக்கு விடுதலை கிடைக்குமா? ஒருவேளை கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது.

Tuesday, July 17, 2007

அபோகலிப்டோ

உலகிலேயே மனித இனம் ஒன்றுதாள் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பண்புடையது.. இன்று பொருளுக்கும் பணத்துக்கும் மதத்துக்கும் நாட்டுக்கும் அடித்துக் கொண்டு மரித்துப் போகும் மனித இனம் தன் ஆரம்ப நாள்களிலும் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டது. காடுகளும் இயற்கையும் அழியாமல் இருந்த காலத்தில் காடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்திருந்தனர். இத்தகைய குழுக்களின் தொகுப்புக்கென தனித்ததொரு நாகரிகமும் இருந்தது. அத்தகைய தொன்மையான நாகரீகங்களில் ஒன்று மாயன் நாகரிகம்.

இயற்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டு விடாமல் கற்கருவிகளை அதிகம் பயன்படுத்திய காலத்தில் நடக்கிறது கதை. காட்டுப் பன்றியை வேட்டையாடும் தீவிரத்தோடு தொடங்கும் படம் இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) நகர்கிறது. உணவுக்கான வேட்டை-யாடுதலில் பன்றியைப் பங்கிடும் கதாநாயகன் கருஞ்சிறுத்தை பாதம் (Jaguar paw) அதன் இருதயத்தையும் பிற உறுப்புகளையும் அறுத்தெடுத்து பிரித்துக் கொடுக்கும்போது தோன்றும் முதல் அருவருப்பு போகப் போக விறுவிறுப்-பாகி விடுகிறது. உணவும் இனப்-பெருக்கமும் மட்டுமே முக்கியத் தேவை-களாயிருந்த காலத்தில் வாழ்ந்த அந்தக் கூட்டத்தின்மீது மற்றொரு கூட்டம் நடத்தும் திடீர்த் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் உடல் வலுவானவர்கள் மட்டும் பிடிக்கப்பட்டும் விற்பனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடவுளுக்கு பலியிடுவதற்காக வாங்கப்படும் அவர்கள் ஒவ்வொருவராக நரபலியிடப்படுகின்றனர்.

இவர்களை அழைத்துச் செல்லும்போதே உயரிய மேடையின் படியில் ஏதோ உருட்டி விடப்படுவது காட்டப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் மேலே அழைத்துச் சொல்லப்பட்டபின்தான் உருட்டி விடப்பட்டவை பந்துகளோ கற்களோ அல்ல தலைகள் என்ற உண்மை நம்மை உறைய வைக்கும். பலியிடப்படுபவர் உடலிலிருந்து ஒரே குத்தில் இருதயம் உருவப்படும்போது முதலில் பன்றிக்கு நிகழ்ந்தது நம் நினைவுக்கு வந்து விடுகிறது.

கதாநாயகன் வெட்டப்பட இருக்கும்போது தோன்றும் சூரியக் கிரகணத்தால் கடவுளின் அணை என்று கூறி அவனையும் அவன் தொடர்ந்தோரையும் விட்டு விடுகிறார்கள். விற்பனைக்கு அழைத்து வந்தவர்களை வீணாக அனுப்ப முடியுமா குறி பார்த்து எறிந்து பழகி விளையாடுகிறார்கள் அழைத்து வந்தவர்கள். மற்றவர்கள் மாண்டு விட தப்பிச் செல்லும் நாயகன் இவர்களின் தொடர் வேட்டையையும் தாண்டி தான் மறைத்து வைத்துவிட்டு வந்த மனைவியையும் குழந்தையையும் தேடிச் செல்கிறார்.மாயன் நாகரிக மக்களின் மொழி புரியத் தேவையில்லை; என்னும் அளவுக்கு இயற்-கையின் பிரம்மாண்டத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் காட்சியில் உணர்த்துகிறார் இயக்குநர் மெல்கிப்சன். வரலாற்றுக் கதைகளை தொடர்ந்து எடுத்து வரும் மெல் கிப்சனின் இந்தப் படம் 2006 இறுதியில் அமெரிக்காவில் வெளியானாலும் இந்தியாவில் இந்த மாதம்தான் வெளியிடப்படுகிறது.

உரிய ஆய்வுக்குப் பிறகே எடுக்கப்பட்டிருப்-பதாக சொல்லப்பட்டாலும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வருகின்றன. கணிதத்திலும் வானியலிலும் சிறந்திருந்த மாயன் நாகரித்து மக்களை காட்டுமிராண்டிகளாகவும் ரத்த வெறி பிடித்தவர்களாகவும் காட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் பொங்குகிறார்கள். அமாவாசை அன்றுதான் சூரிய கிரகணம் வரும் என்பதுகூட தெரியாமல் சூரியகிரகணம் தோன்றிய அன்றே முழு நிலவு தோன்றுவதாக காட்டப்படும் அளவுக்கு தெளிவற்ற படம் என்றும் கொலம்பஸ் வருகைக்கு முந்திய மக்களின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.

கதை நிகழும் காலத்தில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையெனப்படுகிறது. ஏனெனில் முந்தைய மாயன் நாகரிகத்தில்தான் பிடுமிடு போன்ற அமைப்புடைய கட்டடம் இருந்தது. நாடு தேடிப் புறப்பட்ட கப்பல்கள் வந்து சேர்ந்தது பிந்தைய மாயன் காலத்தில் இரண்டும் காட்டப்படுவதால் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது.

பள்ளத்துக்குள் மனைவியும் குழந்தையும் ஒளிந்திருக்க மழை கொட்டி பள்ளம் நிரம்பத் தொடங்குகிறது. நிறைமாதக் கர்ப்பிணியான அவள்தன் மகனைக் காக்க அவனைத் தோளில் தூக்கியபடி இருப்பவருக்கு பிரசவ வலி வருகிறது. முக்கி முனகும் பெண் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடியே குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி ஒரு நிமிடம் நம்மை ஆட்டி விடுகிறது.

கதையின் நிறைவுக் காட்சிகளில் கதாநாயகனை எதிரணியினர் இருவர் துரத்தி வருகின்றனர். மூவரும் எதிரில் ஏதோ புதிதாய் ஒன்று இருப்பதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள். எதிரில் கப்பல் ஒன்று வந்து நிற்கிறது. கப்பலை அது வரை பார்த்தறியாத எதிரணியினரும் மிரண்டு நிற்க நாயகன் மீண்டும் தப்பி மனைவி குழந்தைகளை அடைகிறான். பின்னர் அது என்னவென்று கேட்கும் மனைவியிடம் "என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதில் மனிதர்கள் வந்திறங்கினார்கள் என்கிறார் நாயகன். நாம் அதை நோக்கிப் போகலாமா எனக் கேட்கும் மனைவியிடம் `வேண்டாம். நம் காட்டை நோக்கி சென்று புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று மீண்டும் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான்.

அந்தக் கப்பல் அவர்களை மட்டுமல்ல தங்கள் ஒட்டு மொத்த தங்கள் இனத்தையே அழிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே!

- சமா.இளவரசன்,

Tuesday, July 03, 2007

மூடநம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி

இதுவரை வெளிவந்த ரஜினி படங்களைப் போலல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகவும், இது ரஜினி படமல்ல, ரஜினியும் நடித்திருக்கும் படமாகவும் பத்திரிகைகளாலும் ஊடகத்தினராலும் அறிமுகப்படுத்தப்படுகிற படம் ‘சந்திரமுகி’. ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு ‘சந்திரமுகி’ என்று பெண் பெயர் வைக்கப்பட்டபோதே, தனது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் பெயராக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டிருந்தவரிடம் ஏற்பட்ட மாற்றமாகவும் கருதப்பட்டது. மேலும், தொடர்ந்து தன்னைச் சார்ந்தவர்களின் பெயரில் தானே தயாரிப்பாளராகவும் இருந்து வசூலை மூட்டை கட்டிய ரஜினி, சிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில் நடிக்க, தானே முன் வந்து ஏற்பாடு செய்ததும் வியப்பாகப் பேசப்பட்டது.
கஷ்டப்படும் சிவாஜி குடும்பத்திற்கு கை கொடுக்கும் முகமாகத்தான் இந்த உதவியை ரஜினி செய்கிறார் என்ற கருத்தும் காற்று வாக்கில் கலந்துவிடப்பட்டது. ஆனால் இத்தனை செய்திகளுக்கும் பின்னணியில் இருப்பது, ‘பாபா’ படம் கண்ட மாபெரும் தோல்வி மற்றும் எதிர்ப்பு என்பதை மக்களும் உணராமல் இல்லை.
தன் சொந்த பேனரில் படத்தைத் தயாரித்தால் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்புமோ என்ற எண்ணம் தான், சிவாஜி குடும்பத் தயாரிப்பு என்னும் பெயரில் படம் செய்யக் காரணம். அதுவும் ‘கஷ்டப்படும்’ சிவாஜி குடும்பம் என்ற அடைமொழியையும் கொடுத்து பரிதாப உணர்ச்சியை பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மேலும் அவர்கள் கூறும் பழைய நிகழ்வு ஒன்று உதவிக் கரம் நீட்டும் சந்திரமுகத்தாரின் மற்றொரு முகம் காட்டுகிறது. படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த சிவாஜி, அதே போல் தங்கள் தயாரிப்பில் ரஜினியும் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது (கமல்ஹாசனுக்கு தேவர் மகனில் நடித்துக் கொடுத்து, ‘கலைஞன்’ படத்தை தங்கள் தயாரிப்பில் தயாரித்ததுபோல) தனது அடுத்த படத்தின் தயாரிப்பில் ஈடுபடும் பத்துபேரில் ஒருவராக சேர்ந்துகொள்ளுமாறு ரஜினி தந்த பதில் கேட்டு, சிவாஜி வாயடைத்துப் போனார் என்கிற பழைய பத்திரிகைக் குறிப்புகளையும் காட்டுகிறார்கள் அவர்கள்.திரைப்படத்தை விமர்சித்து விட்டுப் போகாமல் பின்னணிகளைப்பற்றி ஆராய வேண்டியதற்கும் ஒரு பின்னணி உண்டு. மேற்கண்ட செய்திகளெல்லாம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் சரியானதா என்பதுதான் அது. ‘மணிச்சித்திரத்தாழ்’ மற்றும் சில படங்களின் தழுவல். ‘பஞ்ச்’ டயலாக் இல்லாத படம் என்றெல்லாம் கூறப்படும் விமர்சனங்களைப் போலன்றி நாம் கவனம் செலுத்தப்போவது மனோதத்துவ இயல் நிபுணராக வந்து ‘ஆவி’ விரட்டும் பணியில் ஈடுபடும் ரஜினியின் சரவணன் கதாபாத்திரம் பற்றித்தான்.
தன்னைப் படிக்க வைத்து வளர்த்த செந்தில்நாதன் (பிரபு) குடும்பத்தார் புதிதாக வாங்கியிருக்கும் வேட்டையன் ராஜாவின் அரண்மனை பற்றிய வசந்திகளைப் பற்றிப் படித்து தெளிந்து விட்டு, அவர்கள் அங்கே தங்க அனுமதி தருகிறார் சரவணன். பூஜை புனஸ்காரங்களுக்குப் பிறகு வேட்டையபுரம் அரண்மனையில் குடியேறுகிறார்கள் பிரபுவும், ஜோதிகாவும் (கங்கா).
வேட்டையன் ராஜா, தன் ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ஆடற் கலை நாயகிதான் சந்திரமுகி. சந்திரமுகியோ மற்றொரு ஆடற் கலைஞன் குணசேகரனை விரும்புவது தெரிந்த வேட்டையன் சந்திரமுகியின் கண்முன்னே காதலனைக் கொன்றுவிட்டு, ‘லக்க லக்க லக்க’ சொன்னபடியே சந்திரமுகியையும் உயிரோடு எரித்துக் கொன்று விட்டு, பின்னர் சில காலத்தில் மடிந்து விட்டதாக அந்த அரண்மனையின் கதை விவரிக்கப்படுகிறது. அவளது ஆவி அந்த அரண்மனையில் உள்ள பின் மாடியின் தெற்கு அறையில் உலவுவதால் அங்கே யாரும் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஆனாலும் குறும்புக்காரப் பெண்ணான கங்கா (ஜோதிகா) அந்த ரகசியத்தை அறிய பழைய ‘பெரியவர்களின்’ பேச்சையும் மீறி அவ்வப்போது உள் நுழையத் தலைப்படுகிறார்.
ரஜினி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் சந்திரமுகியின் அறைக்குள் நுழைந்துவிடுகிறார் ஜோதிகா. அது முதல் தொடங்குகிறது நிறைய பிரச்சினைகள். பிரச்சினைகளைத் தீர்க்க சரவணா (ரஜினி) தோன்றுகிறார்; துப்பறிகிறார்; அங்குள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களோடு விளையாடுகிறார்; வடிவேலுவை பயமுறுத்துகிறார்.
ரஜினியின் ஆதரவோடு நாசர் மகளுக்கும், எதிர் வீட்டு ஆடற்கலைஞனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நிகழ்வின் முடிவில் வினித் (ஆடற்கலைஞன்) ஜோதிகாவிடம் தவறாக நடக்க முயல்வதாகப் பிடிபடும்போது, தவறு ஜோதிகா மேல்தான் என்று ரஜினி உண்மையைத் தெரிவிக்க, கோபம் கொள்ளும் பிரபு உள்ளிட்ட வீட்டுக்காரர்கள் வழக்கமான ரஜினி படம் போல அவரை விரட்டுகிறார்கள். அப்போது அதைத்தடுத்து உண்மையை விளக்குகிறார், ஏற்கெனவே அழைத்து வரப்பட்ட மந்திரவாதி. ஒரு தலையில் 10 மூளை கொண்டவரும், உலகின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணரின் முதன்மைச் சீடருமான இவரையா (ரஜினியை) விரட்டுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்திருக்கும் ரஜினியின் தியாக சொரூபத்தை அனைவருக்கும் காட்டுகிறார். ரஜினியும் தன் தியாக முகத்தை அனைவருக்கும் காட்டுகிறார்.
சிறுவயது முதலே பல்வேறு நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது மனநிலை குழம்பியவராக வாழ்ந்து, அதை மறக்க, குறும்புக்காரராக மாறிவிடுகிற ஜோதிகா, சந்திரமுகி அறைக்குள் நுழைந்து அவளால் கவரப்பட்டு, தன்னை சந்திரமுகியாக நினைத்து, சந்திரமுகியாக நின்று, சந்திரமுகியாக மாறிவிடுகிறார். இதற்கு Spilit personality என்று அறிவியல் பெயர் என்றும், அந்த சந்திரமுகியாக மாறுகிற ஜோதிகா எதிர்வீட்டு வினித்தை தன் காதலன் குணசேரகரனாகப் பார்க்கிறார். அதற்குத் தடையாக இருப்போரைக் (மாளவிகா, பிரபு) கொல்ல முயற்சிக்கிறார். வேட்டையன் ராஜாவாக ரஜினியை நினைத்து, துர்காஷ்டமி அன்றைக்கு ரஜினியைக் கொன்று பழிதீர்க்க சந்திரமுகியாக மாறிவிட்ட ஜோதிகா துடிக்கிறார். தான் அழிந்தால்தான் சந்திரமுகி ஜோதிகாவிடமிருந்து விடுபடுவார் என்று முடிவு சொல்லும் ரஜினி, தான் தியாகம் செய்யத் தயாராகவும், அதே சமயம் ஜோதிகாவை விடுவிக்க Psychosis-லிருந்து புதிய முறையைக் கையாளப் போவதாகவும் கூறிவிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு பழைய ‘பரட்டை’ காலத்து ரஜினியாக மாறிவிடுகிறார். இறுதியில் ரஜினிக்கு பதில் வேட்டையன் ராஜாவின் பொம்மையை ஆள்மாற்றம் செய்து எரித்து, சந்திரமுகியின் கோபத்தைத் தணித்து, ஜோதிகாவை விடுவிக்கிறார்.
“Slowly you are getting conscious” என்று இப்போது தன் மனோதத்துவ மருத்துவப் பாணியைக் கையாண்டு வெற்றி பெறுகிறார். தன் ஜோடியோடு பழையபடி ‘Repeat’ பாடலைப் பாடிக்கொண்டு விடைபெறுகிறார். சரி, வருவோம். சந்திரமுகியின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு ஜோதிகா Spilit personality-க்கு ஆளாகிறார் என்றால், விடுவிக்கப்பட வேண்டியது ஜோதிகாவா? இல்லை ஜோதிகாவிடம் இருந்து சந்திரமுகியா? ஜோதிகா தானே விடுவிக்கப்பட வேண்டியவர். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து அவரை ஜோதிகா உடலிலிருந்து விடுவிக்கவே போராடுகிறார் ரஜினி.
மந்திரவாதி, என்னால் முடியாததை மனோவியல் மருத்துவர் ரஜினி செய்ய முடியும் என்று சொல்கிறார். ரஜினியோ மந்திரவாதியின் பக்கபலமும் அவசியத் தேவை என்று துணைக்கழைக்கிறார். சந்திரமுகியின் ஆசையைத் தீர்த்து, ஆவியை வழியனுப்பி வைக்கும் பழைய ‘டெக்னிக்’குக்கு மனோவியல் என்று புதிய முலாம் பூசுகிறார்கள். அப்படியானால் மந்திரவாதி என்ன செய்கி றார்? தனது சிஷ்யர்களை வைத்து பெரிய ரங்கோலிக் கோலம் போட்டு அதன் நடுவில் சந்திரமுகியாகத் துள்ளும் ஜோதிகாவைப் பிடித்து அமுக்குகிறார். மந்திரவாதிக்கே உரிய தோரணையோடு “யார் நீ?” என்று மிரட்டலாக கேள்வி கேட்கிறார். சரி, மந்திரவாதி முயற்சியால்தான் ஜோதிகா விடுவிக்கப்படுகிறார் என்றால், ரஜினியோ மனோதத்துவ நிபுணரின் தோரணையோடு, “உன் பெயர் என்ன?” என்று அமைதியாகக் கேட்கிறார்.
எதனால் விடுவிக்கப்பட்டார் ஜோதிகா? தெளிவில்லை. ‘என்னதான் அறிவியல் என்றாலும் மந்திரங்களெல்லாம் வேண்டும்’ என்கிற பழைய பல்லவியைத்தான் ‘Repeat’ செய்கிறார்கள். பாபா - நாத்திகம் பேசி ஆத்திகனானார். சரவணன் - அறிவியல், மருத்துவம் பேசி மந்திரத்தை நாடுகிறார். வழக்கமான ரஜினிபோல், “எனக்கா தெரியாது?” என்று வரிந்துகட்டி ‘தத்திந்தோம்’ என்று சங்கீதம் பாடுகிறார். பெண்களைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் மனதைப் படிக்கிறார் (Mind Reader) . அவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பு பாவமாகக் காட்சி தருகிறார் (வழக்கம்போல). இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். பார்க்கும் பெண்களையெல்லாம் வலையில் விழ வைக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். என்னதான் புதுசாக செய்திருக்கிறார்? வழக்கம்போல ரஜினியின் ராசிக்காக ‘பாம்பு’ ஒன்று வந்து போகிறது 30 அடியில். எக்ஸ்ட்ரா பிட்டங்கா, ஆங்காங்கே pshyco, pshycic என்று ஆங்கில வசனம் பேசுகிறார். வேறு புதிதும் இல்லை. புதுமையும் இல்லை. பெண் வில்லியாக அகிலாண்டேஸ்வரி வருகிறார். எதற்கென்று கடைசி வரை தெரியவில்லை.
“எந்தத் தொழில் செய்தாலென்ன

செய்யும் தொழில் தெய்வமென்று”
பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னதை repeat செய்திருக்கிறார் ரஜினி. நாமும் ஒரு பட்டுக்கோட்டையார் பாடலை repeat செய்வோமா?

“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க - அந்த
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே”
- என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
ரிப்பீட்டு!

ஒத்தை ஆள் ஓட்டப்பந்தயம் - பவானந்தி

‘அதோ வர்றார்’ ‘இதோ வர்றார்’ என்று இவர்களும், ‘நான் எப்ப வருவேன்; எப்படி வருவேனெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தக்கு கரெக்டா வருவேன்னு’ அவரும் அள்ளி விட்டுக்கிட்டு இருக்க, ‘அப்போ வரும், இப்போ வரும்’-ன்னு இழுத்துக்கிட்டு இருந்த படமும் வரப்போகுதாம்.அடாடாடா! இந்தப் பத்திரிகைகாரனுங்களுக்குப் பொறுக்க முடியலைப்பா!
சிவாஜி மொட்டை போட்டிருக்காரு.... சிவாஜி கொட்டை போட்டிருக்காரு... சிவாஜி-ல 6 பாட்டு, 7 பைட்டு (அடப் பண்ணாடைங்களா, எல்லா எழவு படத்திலயும் ‘அது தாண்டா இருக்கு’) 72 குட்டிகளோட வெளிநாட்டுல டான்ஸ்-ன்னு தினம் தினம் செய்தி. சந்திரமுகி படத்தில வந்த லாபத்தில நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கில அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ச்சு கோடி ரூபாய் கொடுத்துட்டு, ஏதோ தனக்காக வெறும் 23 கோடி மட்டும் தான் எடுத்துக்கிட்டாருன்னு சேதி வருது. பாபா-வுல ஏற்பட்ட பயத்தில தான் சிவாஜி குடும்பத்தின் பெயரில படம் பண்ணா, பிரச்சனை இருக்காதுன்னு முடிவு செஞ்சு செய்ததுதான் ‘சந்திரமுகி’ங்கிறது ஊரறிஞ்ச ரகசியம். அதிலயும் பிரச்சினை வந்துடக் கூடாதுங்கிறதுக்காகத் தான், சிவாஜி குடும்பத்துக்கு உதவுற நோக்கத்தில பண்ணதுன்னு ஒரு செய்தியப் பரப்புனதே! (ஏதோ சிவாஜி புள்ளைங்களை தவிக்கவிட்டுப்போனது மாதிரியும், இவரு தூக்கி நிறுத்தினது மாதிரியும் ஒரு பில்டப்) அவரு உதவுனது எப்படின்னு பிரிச்ச லாபத்திலயே தெரியுதே!.
அதே மாதிரி சரிஞ்சு போன ஏ.வி.எம்.-மைத் தூக்கி நிறுத்தத்தான்னு இந்தப் படத்துல நடிக்கிறார்னு சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது.
படம் 150 கோடிக்கு வித்திருக்கு... 200 கோடிக்கு வித்திருக்கு... 600 பிரிண்ட் போட்டிக்கு... ஜேம்ஸ்பாண்ட் படத்தை விட அதிகமா மொத்தம் 4,500 தியேட்டரில ஓடப்போகுது... தலைவரின் உலக சாதனை.அப்படின்னு தெருக்கோடில நின்னு செ.கு.செ. அனுப்பிச்சிட்டிருக்கான் நம்ம பய. கோடியில புரள்ற இவுங்க படத்தை வித்துட்டு பக்காவா இருக்க, இந்தப் பத்திகைக்-காரனுக பக்கம் பக்கமா செய்தி போட்டு பரப்பரப்புன்றானுங்க.மோர் அபிஷேகம், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், டிக்கெட் வாங்கப் பெரிய கியூ. இதுக்கெல்லாம் எட்டுக் காலத்துக்கு செய்தி! ‘சிவாஜி’ டிக்கெட் வாங்கி சாதனை செஞ்சவங்க டிக்கெட்டோட போஸ் கொடுக்கிற மாதிரி போட்டோ கால் பக்கத்துக்குன்னு ஒரே அலப்பறையைக் குடுக்கறானுங்க.படத்தைப்பத்தி ரகசியத்தை வெளியிட்டுட்டாராம் ரஜினி. படம் ‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறது பத்தியாம்’. ‘யப்பா... வாயால சிரிக்க முடியலப்பா....’ கருப்புப் பணத்தைப் பத்தி யார் பேசுறது.. ரஜினியும், ஷங்ரும், ஏ.வி.எம்.முமா?
அப்படின்னா சங்கராச்சாரி ஒழுக்க வாழ்வைப் பத்தியும், ஜார்ஜ் புஷ் கம்யூனிசத்தைப் பத்தியும், ஆர்.எஸ்.எஸ். அகிம்சையப் பத்தியும் பேசினாலும் நம்ம கேக்கத்தான் வேணுமா? அடப்பாவிங்களா.சரி, படம் இத்தனை கோடி, அத்தனை கோடிங்கிறாங்களே, வருமான வரித்துறையென்ன வரிசையிலயா நிக்குது டிக்கெட் வாங்க?
கோடம்பாக்கத்தில மத்த படத்தோட நிமையையெல்லாம் என்னன்னு பார்த்தா, நல்ல தியேட்டர்களை இவங்க மொத்தமா எடுத்தக்கிட, வேற தியேட்டர் கிடைக்காம, எடுத்த படமெல்லாம் பெட்டியில தூங்குது. இந்தா விடுறேன், அந்தா விடுறேன்னு புதுப்படங்களை மிரட்டி 2 மாசமா வேற படத்தையே வரவிடாமப் பண்ணதில, வட்டிக்கு வாங்கி படம் பண்ணவனெல்லாம் பொட்டிய வச்சுகிட்டு புலம்பியபடி நிக்கறாங்க.
அப்படியும் யாராவது பெரிய படத்தை ரிலீஸ் பண்ணப்போனா ‘சிவாஜி’ சமயத்தில விட்டா மத்த படம் ஓடாதுன்னு அல்லக்கை பத்திரிகைகளை எழுதவச்சு நிறுத்திப்புட்டாங்க.கூட ஓடுறவனையெல்லாம் தடுத்து நிறுத்தி ஓரங்கட்டிப்புட்டு, ஒத்தை ஆளா பந்தயத்தில ஓடி, ‘நான் ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன். என்னைய அடிக்க எவனுமில்லை’ன்னு கத்துற ‘இந்தப் பொழப்புக்கு......’ வேணாம்வுடுங்க!

நன்றி: 1.உண்மை - மாதமிருமுறை இதழ்
2.மூட நம்பிகையை வளர்க்கும் சந்திரமுகி -உண்மை

Sunday, March 11, 2007

குரு - முதலாளித்துவ பாடம்நடத்தும் மணிரத்னம்

"இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம் 'உ' போடு. அதென்ன 'ஒ'வுக்குப் பதிலாக 'உ. அதுதான். உண்மை - உழைப்பு உயர்வு. இந்த மூன்று 'உ'வையும் தூக்கிக் கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.மக்கள் எவரும் போராட்டம் புரட்சி போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள் தமது வெற்றிக்கான படிக்கட்டுகளை. 'நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.இதுபோதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று 'உ'க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான். உழைப்பால் உயர்ந்த உத்தமர்.
-பாமரன்

மணிரத்னத்தின் குரு படத்தை இந்தப் பட்டியலிலெல்லாம் சேர்த்துவிட முடியாது. அவர்தான் படத்தின் தொடக்கத்திலேயே 'இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் முதலியன யாரையும் குறிப்பன அல்ல என்று போட்டு விடுகிறாரே! இருந்தாலும் 'குருபாய்' என்று அழைக்கப்படும் குருநாத் தேசிகனையும் திருபாய் அம்பானியையும் சேர்த்து வைத்து ஏன்தான் இந்தப் பத்திரிகைகளெல்லாம் எழுதுகின்றனவோ தெரியவில்லை.


இந்திய சினிமாவை நிமிர்த்தியே தீருவதென கடப்பாரையோடு திரியும் மணிரத்னத்தை பாராட்ட சுஜாதாவின் கை மட்டுமே வேலை செய்கிறது. உலகத் தரத்தில் ஒரு இந்திய சினிமாவாக இதைப் பார்ப்பதாக சுஜாதா வரிந்து கட்டி எழுதினாலும் அதையும் தாண்டி சாதாரண திரைப்பட ரசிகனுக்குத் தெரிந்து போகிறது -இது 'நாயகன்' படத்தைச் அச்செடுத்த நகல் என்று! அதன் திரை வடிவம் மார்லன் பிராண்டோவின் 'காட் பாதர்' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் உங்களுக்கு இன்ஸ்பிரேசனுக்கும் காப்பியடித்தலுக்குமான வித்தியாசம் புரியவில்லை என்று பொருள். (மற்றவர்கள் செய்தால் காப்பி; மணிரத்னம் செய்தால் மட்டும் இன்ஸ்பிரேசன் என்பது தான் வித்தியாசம்)


சரி, நாம் இப்போதைய 'குரு'வுக்கு வருவோம். குர்தாவும் கோட்டும் குல்லாவும் வலப்பக்க மாராப்புமாய் வடஇந்திய மக்கள் வாழும் திருநெல்வேலி மாவட்ட இலஞ்சியூர் கிராமத்திலிருந்து (!) (மொழி மாற்றுப்படம் என்பதால் மன்னித்து விடுவோம்) 'துருக்கிக்கு வேலைக்குப் போகிறார் குருநாத் தேசிகன். அங்கு பெட்ரோல் டின் விற்பனையில் பணியாற்றி நுணுக்கமான தன் அறிவாற்றலால் வளர்ந்து பதவி உயர்வும் அதிக ஊதியமும் பெறப் போகும் சூழலில் 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாகச்' சொல்லி விட்டுச் சொந்த ஊருக்கு வருகிறார் குரு. வியாபாரத்தில் தோற்று பின் ஆசிரியராகப் பணியிலிருக்கும் தந்தை வியாபாரத்திலிறங்க குரு எடுத்திருக்கும் முடிவை எதிர்க்கிறார்.


பின்னர் தன் நண்பனின் அக்காவும் காதலில் தோற்றவளும் தன்னை-விட மூத்தவருமான அய்ஸ்வர்யாராயை 15 ஆயிரம் ரூபாய் வரதட்சணைப் பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்கிறார் குரு. தான் ஏற்கனவே வைத்திருக்கும் 15 ஆயிரம் ரூபாயுடன் வரதட்சணைப் பணத்தையும் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்க பம்பாய் செல்கிறார். பருத்தி வியாபாரத்தில் புதியவர்கள் இறங்கத் தடையாயிருக்கும் 'கான்ட்ராக்டர் என்னும் முதலாளியை எதிர்க்கத் துணிகிறார். அதைப் பத்திரிகையில் எழுதி அவனுக்குப் பெரும் உதவி செய்கிறார் 'சுதந்திரமணி' நாளிதழ் ஆசிரியராக வரும் நானாஜி (மிதுன் சக்ரவர்த்தி).


யாரும் முதலீடு செய்யாத பாலியஸ்டர் துணியில் முதலீடு செய்து பின்னர் அதை பொதுப் பங்கு நிறுவனமாக்கி உற்பத்திக்கு தொழிற்சாலையை உண்டாக்கி `சக்தி குடும்பம் என்ற பெரும் நிறுவனத்தின் அதிபராக வளர்கிறார் குரு.ஆனாலும் எப்போதும் தான் ஏழை வியாபாரி என்றும் `சக்தி குடும்பம் மொத்தத்துக்கும் உரிய சொத்து இது என்றும் சொல்லியபடி வாழ்க்கைப் படியேறுகிறார். திருபாய்... மன்னிக்கவும் குருபாய். அவரது அபரிமித வளர்ச்சியையும் அதற்காக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பணத்தால் வளைப்பதையும் தெரிந்து கொண்ட 'சுதந்திர-மணியின் ஆசிரியர் தன் நம்பிக்கைக்குரிய இளைய செய்தியாளர் மாதவனை அழைத்து 'குரு'வைப் பற்றிய உண்மைகளை எழுதச் சொல்கிறார் மிதுன்.


'பெர்மிட் ராஜ்' 'லைசென்ஸ்' என்று அன்றைக்கிருந்த கட்டுப்பாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன என்று கருதும் 'குரு' இங்கிருந்து ஏற்றுமதி செய்வதாகப் போலி கணக்குக் காட்டி அதன் மதிப்புக்கு இறக்குமதி செய்து கொள்கிறார். மேலும் 6 இயந்திரங்கள் வாங்குவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு உதிரி பாகங்கள் என்னும் பெயரில் இறக்குமதி செய்து அதை இயந்திரமாக்கி 12 இயந்திரங்-களில் உற்பத்தி செய்கிறார் குரு.


இப்படிச் செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியில் மோசடி உரிம அளவுக்கு மேலான உற்பத்திக்கு உரிமப் பணத்தை குறைத்தல் அதில் உற்பத்தியான பொருள்-களை கள்ளச் சந்தையில் விற்றல் அதற்குரிய ஆயத் தீர்வை வரிகளைக் கட்டாதிருத்தல் விற்ற பொருள் மூலம் கிட்டிய பணத்துக்கு வருமான வரி கட்டாதிருத்தல். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் குருவின்மீது சாட்டப்பட்டு அவரது நிறுவனங்களை மூடும் சூழல் உருவாகிறது. இந்த அதிர்ச்சியில் குருவுக்கு பக்கவாதம் வந்து சுருண்டு விழுகிறார். இதுவரை நம்பியிருந்த 'சக்தி குழும' உறுப்பினர்களும் இப்போது நம்பாமல் போனது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்மீது விசாரணைக் கமிஷன் வைக்கப்-படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் விசாரணைக்கு வருகிறார் குரு. ரகசிய விசாரணை நடக்கும் 5 நாள்களில் பதில் சொல்லாமல் தன் மனைவியை பேச வைத்த குரு மக்கள் முன் ஊடகங்களின் முன் விசாரணை என்று அறிவிக்கப்படும் நாளில் வழங்கப்பட்டிருக்கும் அய்ந்து நிமிடங்களில் பேசுகிறார்.


"ஒரு ஏழை வியாபாரியா நான் இந்த ஊருக்கு வந்தபோது எனக்கு வியாபாரத்துக்குக் கதவு திறக்கலை. அது சில பணக்காரங்களுக்கு மட்டும்தான் திறந்தது. சில இடத்தில் சலாம் போட்டால் திறந்தது சில இடத்தில் எட்டி உதைச்சாதான் திறந்தது. நான் ரெண்டையும் செஞ்சேன். எனக்குப் பின்னாடி இருந்த 30 லட்சம் குடும்பங்களுக்காக உழைச்சோம். ஒரு கிராமத்து வியாபாரிக்கு உங்களோடு சட்டம் வரி கணக்கு இதெல்லாம் தெரியலைங்க. நாங்க உழைச்சோம். இன்னிக்கு இந்த தேசம் வேகமா முன்னேறிக்கிட்டிருக்கு. இதோட வளர்ச்சியை உங்க சட்டம் கட்டுப்பாடு இதனாலெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த நடுத்தர வர்க்கமும் ஏழை மக்களும் வளர்ந்தது பணக்காரக் கூட்டத்துக்கு பிடிக்கலை. அதுதான் எங்களுக்கெதிரா எல்லா வேலையும் செய்யுது. இந்த தேசமும் மக்களும் கொஞ்ச காலத்தில எங்கேயோ போகப் போறாங்க. அன்னைக்கு எங்க வளர்ச்சி தெரியும். இப்படித்தான் 40 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் சட்டத்தை மீறினார் அவராலதான் நாம இன்னிக்கு சுதந்திரமா இருக்கோம். காந்தி செஞ்ச போராட்டமும் அன்னைக்கு இருந்த சட்டத்தை மீறினதுதான். அது மூலமா நம்ம இன்னைக்கு புது சட்டம் எழுதியிருக்கோம். நீங்க என்ன தீர்ப்புத் தந்தாலும் நான் மக்களோட சேர்ந்து உழைச்சிட்டே இருப்பேன். அதைத்தானா தப்புங்கறீங்க. நீங்க குடுத்த 5 நிமிசத்தில நான் சொல்ல வேண்டியதை நாலரை நிமிசத்தில சொல்லிட்டேன். 30 விநாடி எனக்கு லாபம். இதுதான் நான் வளர்ந்த விதம்" என்று தேசத்தின் அடிமட்ட மக்களுக்காக உழைக்கும் தன்னுடைய தியாக(!) மனப்பான்மையைப் பற்றி விலாவாரியாக விளக்கியதும் 'இதுக்கென்ன தூக்குத் தண்டனையா கொடுக்க முடியும்? என்று தங்களுக்குள் விவாதிக்கும் விசாரணை அதிகாரிகள் 63.5 லட்சம் அபராதத் தொகையோடு 29 வழக்குகளில் இரண்டு தவிர மற்றவற்றைத் தள்ளுபடி செய்கின்றனர்.


தொடக்கக் காட்சியில் வெற்று மைதானத்தில் 'சக்தி குடும்பத்தின்' வளர்ச்சி பற்றி கருப்பு வெள்ளையில் பேசிக் கொண்டிருந்த அதே காட்சி திரும்ப வண்ணத்-தில் வருகிறது. அவரை ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் மைதானத்தில் மொத்த கூட்டமும் நிறைந்திருக்கிறது (சக்தி குழுமத்தின் பங்குதாரர்கள் கூட்டமாம்!) அவர்களிடையே குரு நம்பிக்கையுடன் பேச படம் முடி-வடைகிறது.

இதில் குருநாத் தேசிகனை - திருபாய் அம்பானியாகவும் சுதந்திரமணியை (The Independent) தினமணி (The Indian Express) யாகவும் மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருக்கும் `நானாஜி கதாபாத்-திரத்தை ராம்நாத் கோயங்காவாகவும் மாதவனை (ஷ்யாம்) அருண்ஷோரியாகவும் `சக்தி குடும்பத்தை `ரிலையன்ஸ் குழுமமாகவும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளக் கூடாது என்பதற்குத்தான் முதலிலேயே எச்சரிக்கை போட்டு விட்டார்கள் இது கற்பனைக் கதை என்று! அபிஷேக்பச்சனை 'குரு'வாக கற்பனை செய்து கொள்ளும் உரிமை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதே மாதிரி குருவை நாயகனாகவும் தேசிகரை நாயக்கராகவும் மல்லிகா ஷெராவத் ஆடும் ஆட்டத்தை குயிலி ஆடும் நிலா அது வானத்து மேலேவாகவும் நிருபர் மாதவனை இன்ஸ்பெக்டர் நாசராகவும் மாதவன் காதலியும் குருவின் மகளைப் போன்றவருமான வித்யாபாலனை நாசரின் மனைவியும் நாயகனின் மகளுமான கதாபாத்திரத்துடனும் நீங்கள் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குத் தான் படத்தின் பெயர் 'குரு' என்று போடுகிறார்கள். விசாரணைக் காட்சியைப் பார்த்துவிட்டு லியோனார்டோ டிக்காப்ரியோ நடித்த ஏவியேட்டர் என்றும் நீங்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதற்காகத்தான் தமிழ்ப் படம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


சரி காப்பியடிக்கும் இன்ஸ்பிரேசனெல்லாம் போகட்டும் இதில் மணிரத்னம் என்னதான் சொல்ல வந்திருக்கிறார். நாலு பேருக்கு நல்லது பண்ணால் எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் '30 லட்சம் பேருக்கு லாபம் கிடைச்சா 80 கோடி பேரை ஏமாத்துறது தப்பே இல்லை என்று வாதிடுகிறார். 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாக' துருக்கியிலிருந்து கிளம்பியவர் விசாரணைக்கு வந்ததும் சொல்கிறார் 'நான் 30 லட்சம் பேருக்காக உழைத்தேன் என்று'! நம்புங்கள்.


முறையாகக் காட்டிய கணக்கில் பங்குதாரர்களுக்குப் பங்கு.. சரி! முறையில்லாமல் நடத்திய வியாபாரத்திற்கு அதிகாரப்பூர்வ கணக்கு ஏது அதில் பெற்ற லாபம் எல்லாம் எத்தனைப் பேருக்குப் போய்ச் சேர்ந்தது. பாவம் காந்தி அவர் செத்து 58 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது போராட்டத்தை இப்படியும் கொச்சைப்படுத்த வேண்டுமா?


தேசம், தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் முதலாளித்துவம் எப்படியெல்லாம் பசப்பு மொழி பேசி ஏமாற்றுகிறது பாருங்கள். தன்னை நடுத்தர வர்க்கம் ஏழை வியாபாரி என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காததையும் பார்ப்பனீயம் தன்னை ஏழை சமூகமாகக் காட்டிக் கொண்டு சமூக நீதியை எதிர்ப்பதையும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.கடுமையாக உழைப்பதனால் மட்டுமே சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற (மணிரத்னத்தின்) குருவின் வாதத்திற்கு வலுவூட்ட மாதவனின் பாத்திரப் படைப்பு. நியாயத்திற்குப் புறம்பாக குரு செய்யும் வியாபாரத்தைத் தோலுரிக்க பம்பாயிலேயே இரண்டு பேருக்கு ஷேக் வேசம் போட்டு துபாய் போலக் காட்டி மோசடிப் புகைப்படம் எடுத்து பிரசுரிக்கிறார் மாதவன்.


மேலும் நல்லவராகவும் அனுதாபத்துக்குரியவராகவும் குருவைக் காட்ட கிளைமாக்சுக்குமுன் பக்கவாத நோய்! சரி இத்தனைப் பொருளாதாரப் பிரச்சனைகள் பேசுமிடத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சிறிய பாத்திரம்கூட இல்லையா? சேச்சே... அது எப்படி? ஒரு கதாபாத்திரம் தந்திருக்கிறார். ஆரம்பத்தில் அய்ஸ்வர்யாராய் தன் காதலனோடு ஓடிப் போவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி இரயிலேறும் நேரத்தில் பயந்து கொண்டு உடன் வராமல் ஏமாற்றுகிற கோழை இருக்கிறானே. அவன்தான் செங்கொடி பிடித்தபடி வீராவேசமாக வீதிகளில் வளைய வரும் கம்யூனிஸ்ட். (இதை காட்சிகளில் காட்டாமல் மிக லாவகமாக அய்ஸ்வர்யாராயின் தந்தை கதாபாத்திரத்தின் மூலம் பேச வைத்திருக்கிறார் மணிரத்னம்)

லாபம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் சட்டத்தையும் மீறுங்கள் வரிப் பணத்தை ஏமாற்றுங்கள் என்று முதலாளித்துவத்தைப் படிக்கும் இன்றைய எம்.பி.ஏ. மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் தன் பாணியில் காட்சி ஊடகத்தில் முதலாளித்துவப் பாடம் நடத்தியிருக்கிறார் மூத்த எம்.பி.ஏ. பட்டதாரியான மணிரத்னம்.

Tuesday, February 27, 2007

கார்ப்பரேட் (CORPORATE)

முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கும் “கார்ப்பரேட்”

“மாற்று சினிமாவுக்கான முயற்சிகளும், சமூக சிந்தனையுள்ள படங்களும் இந்தித் திரையுலகிலும் உண்டு என்றால் நம்ப மறுப்பவரா நீங்கள்! நானிருக்கும் வரை அந்த முடிவை ஒத்தி வையுங்கள்” என்கிறார் இயக்குநர் மதூர் பண்டார்கர். ஏற்கெனவே தான் எடுத்த ‘மூன்றாம் பக்கத்’தின் (Page 3) மூலம் இந்தியத் திரையுலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். கடந்த ஆண்டு அவர் இயக்கி வெளியிட்ட படம் ‘கார்ப்பரேட்’ (Corporate). 2006 கோவா திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது.

2005ஆம் ஆண்டு திரைப்பட விழாவின் விவாத அரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது பண்டார்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “ஏன் எதையெடுத்தாலும் பிரச்சினைகளை நோக்கியே கொண்டு செல்கிறீர்கள். வணிக சினிமாவுக்கு வரும் எண்ணம் இல்லையா?” என்று “வணிக சினிமா என்றில்லை, நல்ல படங்கள் சமூக சிந்தனையுடையவை வெற்றி பெற்றால் அவையும் வணிகப் படங்கள்தான். அந்த வகையில் அய்ட்டம் நம்பர் வைக்காத, ஹீரோக்களை நம்பாத, கதையம்சத்தோடு கூடிய வணிகப் படங்களாக என் படங்கள் இருக்கும். கார்ப்பரேட்டும் அப்படித்தான். ‘கார்ப்பரேட்’ உலக மறு பக்கத்தைக் காட்டும்” என்று தெளிவாக பதில் தந்தார் மதூர்.

சீகல் குரூப் மற்றும் மார்வா குரூப் இரண்டுக்கும் இடையிலான தொழில் போட்டியில் நகர்ந்து செல்கிறது கதை. பாரம்பரிய பணக்காரரான மார்வா குரூப் முதலாளி தர்மேஷ் மார்வாவாக ராஜ் பாப்பரும், சீகல் முதலாளி வினய்சீகலாக ரஜத் கபூரும், தொழிலில் தோல்வியடைந்து லண்டனில் இருந்த இருந்து திரும்பிவரும் சீகலின் மைத்துனர் ரித்தேஷாக கே.கே.-மேனனும் நடித்துள்ளனர். கவர்ச்சிக்காவும், அய்ட்டம் நம்பராகவும் பயன்படுத்தப்பட்ட ‘பிபாஷா பாசு’ இப்படத்தின் அடித்தளமான கதாபாத்திரத்தில் ‘நிஷி கந்தா தாஸ்குப்தா’வாக பொருத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.

சீகல் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நிஷிகந்தாவும், ரித்தேஷும் முன்னாள் காதலர்கள்.மகாராஷ்டிராவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த குளிர்பான தொழிற்சாலை ஒன்றை விலைக்கு வாங்குவதில் சீகல் மற்றும் மார்வா நிறுவனங்கள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில், மாநில நிதியமைச்சருக்கு ரொம்பப் பிடித்தமான பாலிவுட் அய்ட்டம் நடிகையை ‘ஏற்பாடு’ செய்வித்து அத்தொழிற் சாலையை கைப்பற்றுகிறது ‘மார்வா’ நிறுவனம்.

இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து வணிகத்தில் தோற்றுத் திரும்பும் ரித்தேஷ் தன்னை நிரூபிக்க வேண்டியவராகிறார். அவருக்கு உதவவும், வணிகத்தை நிலை நிறுத்தவும் களமிறங்கும் நிஷி கந்தா, மார்வா நிறுவனத்தின் முக்கிய அலுவலர் ஒருவரை ஏமாற்றி,(அவரை மயக்க ஒரு பெண்ணை அனுப்பி) அவரிடமிருந்து ரகசியம் ஒன்றை திருடுகிறார். மாநில அரசிடமிருந்து வாங்கிய குளிர்பான தொழிற்சாலையில் ‘மின்ட்’ சுவையிலான கோலா பானம் ஒன்றினைத் தயார் செய்ய மார்வா நிறுவனம் தீட்டிய திட்டத்தை அதன்மூலம் தெரிந்து கொண்ட சீகல் நிறுவனம் வெகு விரைவில் அவர்களுக்கு முன்னதாகவே கோலா வகை பானத்தை ‘Just Chill’ என்ற பெயரில் வெளியிட முடிவு செய்து செயலாற்றுகிறது. அந்தப்பணி, ரித்தேஷ் மற்றும் நிஷி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் வென்று காட்டுவது என்ற முடிவோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வாண்டின் ‘சிறந்த தொழிலதிபர்’ விருதுக்காக பட்டியலிலும் மார்வாவும் சீகலும் மோதுகிறார்கள். பெரிய இடத்துக்கு ‘ஏற்பாடு’ செய்பவரின் மூலம் தனக்கு அந்த விருது கிடைக்க வழி பார்க்கிறார் சீகல். தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்க சத்தமில்லாமல் விருது பெறுகிறார் மார்வா. இதனால் கோபமடையும் சீகல், மறுநாளே தாங்கள் தயாரிக்கப்போகும் பானம் வெளியிடப்படும் தேதியை அறிவிக்கிறார்.

தங்களின் ரகசியத் திட்டம் அம்பலமானதை அறிந்து அதற்குக் காரணம் நிஷியின் சூழ்ச்சி வலையில் விழுந்த தம் குழும அதிகாரிதான் என்பதையறிந்து அவரை பணியிலிருந்து விரட்டுகிறது மார்வா குழுமம்.தன் நிறுமப் பங்குகளை வளைக்கவும், விரைவில் நிலையற்ற தன்மையை உண்டாக்கவும், சீகல் குழுமம் மேற்கொண்ட குறுக்கு வழிகளை திருப்பியடிக்கிறது மார்வா. பாரம்பரிய தொழிலதிபர் மார்வா ‘குருஜி’ எனப்படும் சாமியாரின் தீவிர பக்தர். சாமியார் சொல்லும் நிறத்தில் கல் மோதிரம் அணிவதிலிருந்து, தேதி குறிப்பது வரை அனைத்தும் செய்பவர் மார்வா. அதே குருஜியின் சீடர்களில் ஒருவர்தான் பங்கு வணிகச் சூதாடியாக ஏற்கனவே சீகலுக்காக உழைத்தவர். சாமியாரின் உதவியுடன் அவரை அணுகி தங்களுக்கு ‘உழைக்க’ வைக்கிறார். பொருளை வெளியிடும் காலம் நெருங்குகிறது. புதிய குளிர்பானத்தின் தரத்தை சோதனை செய்வதற்காக வரும் தரச்சான்று குழுவினர், குளிர்பானத்தில் பூச்சி மருந்துகளின் விகிதம் அதிகம் இருப்பதாக, அறிக்கை தருகின்றனர். இதனைக் கருவிலேயே அழிக்கிறார் சீகல். மக்களுக்குக் கேடான இந்த பானத்தை வெளிக் கொண்டுவருவது ஆபத்து என்று கூறி சீகல் நிறுவனத்தின் ஆலோசகர் பதவி விலகுகிறார். அதுபற்றிக் கவலைப்படாமல் புதிய பானம் அறிமுகமாகிறது.

பூச்சிக்கொல்லி கலந்திருப்பது மார்வா நிறுவனத்திற்குத் தெரியவர, அது மாநில அமைச்சர் மூலம் அதிரடி ரெய்டையும், தொண்டு நிறுவனங்களுக்குக் காசு கொடுத்து போராட்டத்தையும் ஊக்குவிக்கிறது. தங்களின் புதிய பானத்திற்கு ஏற்பட்ட சிக்கலை கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள் நிஷியும் ரிதேஷூம். சிக்கல் தீவிரமாகி அதற்காக சீகல் நிறுவன அதிபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை வர, தலைமைப் பொறுப்பில் ‘நிஷி’யை நிறுத்தி ‘பலிகடா’வாக அவளை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதற்கு ரிதேஷ் ‘தன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள் நிஷி’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான்.

மார்வா நிறுவனத்துடன் சமரசத்துக்கு வருமாறு சீகல் நிறுவனத்தை அழைக்கிறார்கள் மத்திய + மாநில நிதி அமைச்சர்கள். சமரசத்தில் இனி ஒருவர் வியாபாரத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் ‘நிஷி’யின் வழக்கை அப்படியே விட்டுவிடுகிறோம். இப்போது கவலையில்லை. தேர்தல் நேரத்தில் வழக்கை வாபஸ் பெற முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள் இதில் கோபமடையும் ரித்தேஷ் தனது மைத்துனரான வினய்-யிடம் “விரைவில் நிஷி வெளிவரவில்லையானால் ரகசியங்களை வெளியிட்டு விடுவேன்” என்று சீற, மறுநாள் காலை தனது வீட்டு மாடியிலிருந்து குடிபோதையில் விழுந்து ரிதேஷ் இறந்துவிட்டதாக, ரிதேஷ் கணக்கு வழக்கை ‘முடித்து’ விடுகிறார் சீகல்.

இப்படியாக சிக்கல் நிறைவுபெற, சீகல் தன் தொழிலும், மார்வா தன் தொழில் மற்றும் சாமியார் பக்தியிலும் மூழ்க, சீகலில் இருந்து விலகிய ஆலோசகர், தனது துறையில் முன்னேற, பலிகடாவாக்கப்பட்ட ‘நிஷி’ மட்டும் ‘பூச்சி மருந்து கலக்கப்பட்ட கோலாபானம்’ வழக்கில் தொடர்ந்து கோர்ட் படியேறிவருகிறார் தனது குழந்தையுடன்!

முதலாளித்துவம் தனது நோக்கத்தில் தெளிவாகவே இருக்கிறது. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். அதற்காகப் பயன்படும் யாரையும் பயன்படுத்திக் கொள்ளும். பின்னர் ஏறி மிதித்துக் கொல்லவும் தயாராகிவிடும். இன்றைய, கார்ப்பரேட் உலகம் என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகளின் மறுபக்கத்தை படம் பிடித்த மதூர் பண்டார்கரை என்ன பாராட்டினாலும் தகும். அதற்குள் பன்னாட்டு நிறுவனம், பொருளாதார வளம் என்னும் பெயரில் பஞ்சாயத்து பண்ணும் அரசு, பெப்சி, கோகோகோலா மனித அழிப்பு நடவடிக்கைகள் என அத்தனையையும் தோலுரிக்-கின்றது. நீ வளர வேண்டுமா, உனக்குப் பணம் வேண்டுமா, செய்யத் தயங்கக் கூடாதவை மூன்று என்கிறது முதலாளித்துவம்.

1. காட்டிக் கொடு
2. போட்டுக் கொடு
3. கூட்டிக் கொடு

உன் நிறுவன பணியாளனை தொடர்ந்து உறிஞ்ச வேண்டுமா? அவன் மனம் குளிரும்படி “ஊத்திக் கொடு, ஆடவிடு, கோர்த்துவிடு” என்று தன் லாபவெறியால் அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவம் என்னும் நவீன ‘கார்ப்பரேட்’.அத்தகைய புகழ் வெளிச்ச, பண உலகின் கரும் பக்கத்தை புரட்டிக் காட்டிய மதூர் பண்டார்கரின் ‘கார்ப்பரேட்’, இன்றைய இளைஞர்களால் அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, மேலாண்துறை, நிர்வாகத் துறைகளில் நல்ல சம்பளம் என்ற போதையில் தன்னிலை மறக்கத் துவங்கியிருக்கும் இளைய தலைமுறை கற்கவேண்டிய பாடம்!
நன்றி: உண்மை