Saturday, October 16, 2010

பீப்லி லைவும் எந்திரனும்

உரிந்து தொங்கும் ஊடகங்கள்
பெருநகரங்களின் சாலைப் பணிகளைச் செய்யவும், கட்டிட வேலை செய்யவும் குறைந்த கூலிக்கு சாரைசாரையாக வடநாட்டிலிருந்து வந்து குவிகிறார்களே.. சென்னையின் உணவு விடுதிகள் தொடங்கி தனியார் பாதுகாப்புப் பணிகள் வரை நீக்கமற நிறைந்திருக்கும் இவர்களெல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தனர்? சித்தாள், கொத்தனார் என்று இதற்கு முன்பு பணி செய்த தமிழ்நாட்டுக்காரர்களெல்லாம் குறைந்து போய், இத்தனை பணிகளுக்கும் எங்கிருந்து இவர்கள் கொண்டு வரப்படுகின்றனர்? உலகமயம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் தொழிற்சாலை, அலுவலகங்கள் கட்டவேண்டியிருப்பதால், திடீரென்று பெருகிப்போன கட்டுமானத் தொழில் பணிகளுக்கென்றே திடீரென்று தோன்றியிருக்கும் சமூகமா? வர்ணாசிரமப் பிரிவினையில் இவ்வளவு பெரிய மக்கள் திரள் எத்தனையாவது சமூகம்- அல்லது ஏற்கெனவே இவர்களுக்கு இடப்பட்ட பணிகளை கிருஷ்ண பகவான் மாற்றிவிட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கு அவற்றிற்குள்ளேயே அடிப்படை பதில் இருக்கிறது, ஆம், உலகமயமாக்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை, கட்டுமானத்தொழிலை வளர்த்துவிட்டது... ஆனால் இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமான விவசாயத்தை அழித்துவிட்டது. விதர்பாவிலிருந்து வளமான வயநாடு வரை விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடைபெற்றது. பிரதமரால் துக்கம் விசாரித்து உதவித் தொகை தர மட்டும் தான் முடிந்தது. விவசாயிகள் தற்கொலைக்கான அடிப்படைக் காரணத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; அல்லது அவர் புரிந்து கொள்ள முயலவில்லை. எம்.பி.ஏ எக்கனாமிஸ்டுகளால் தொழில் வளர்ச்சி என்று பல்லவி பாடி முதலாளிகளிடம் தான் சரணம் தேட முடியும். விவசாயத்தின் மரணத்திற்கா காரணம் தேடமுடியும்?

இப்படி இருக்கும் சிக்கல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய ஊடகங்கள் என்ன செய்கின்றன? காய்கறிகளைக் கூடைகளில் சுமந்து போய் விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப்போல நின்ற இடத்திலிருந்து உலகம் முழுமைக்கும் நேரடியாக செய்தி சொல்ல வல்ல பெரிய தோசைக்கல் மாதிரி டிஷ் ஆண்டனாக்களுடன் கூடிய வசதியான வாகனங்களை வைத்துக்கொண்டு அலையும் ஊடகங்கள் என்றைக்காவது இத்தகைய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் அணுகியிருக்கின்றனவா? பெருகிப் போயிருக்கும் செய்தி ஊடகங்கள், எங்கேனும் ஒரு துரும்பு கிடைக்காதா அதை ஊதிப் பெரிதாக்கி ஓரிரு நாட்கள் செய்தியை ஓட்டலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் உண்மையான உயிர்நாடிப் பிரச்சினைகள் அவர்களின் கவனத்திற்கு வருவதில்லையா? அதெப்படி இருக்க முடியும்? கண்டிப்பாக கவனத்தில் வரும். ஆனால் மக்களின் கவனம் இதிலெல்லாம் போய்விடக் கூடாது என்பதில் அவர்களின் கவனம் இருப்பதால் ஷில்பா ஷெட்டிகளையும், அமிதாப், அபிஷேக், அய்ஸ்வர்யா வகையறாக்களையும் மட்டுமே தலையாய பிரச்சினைகளாக மக்கள் மூளையில் திணித்துவருகின்றன.


இதையெல்லாம் கடந்து சூடான பிரச்சினையாக விவசாயிகள் தற்கொலை அவர்கள் கண்ணில் அகப்பட்டால் என்னாகும்? என்ற கேள்விக்கான பதில் தான் ”பீப்லி (லைவ்)”. இந்திய ஊடகங்களின் உண்மைத் தன்மையை அவர்களின் சமுதாய அக்கறையை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம். இந்தித் திரையுலகின் மிக முக்கிய நடிகரும் நல்ல திரைப்படங்களை மக்களுக்குத் தரவேண்டுமென்கிற அக்கறை கொண்டவருமான அமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.

முக்கிய பிரதேசத்தின் பீப்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி நத்தாவைச் சுற்றி நடக்கிறது கதை. சொந்த நிலத்தை அடகு வைத்து வாங்கியிருக்கும் கடன் தொடர்பாக வங்கியிலிருந்து அழைப்பு வந்ததால், நத்தாவும், அவரது அண்ணன் புட்டியா-வும் வங்கிக்குச் சென்று திரும்புவதில் தொடங்குகிறது படம். நிலத்தை வங்கி எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற கேள்வி நிறைந்த கவலையோடு வீடு திரும்புகிறார்கள் இருவரும். நிலையை எடுத்துச் சொன்னதும், திட்டி வெளியே அனுப்புகிறாள் நத்தாவின் மனைவி. என்ன செய்வது என்ற கவலையோடு, உள்ளூர் அரசியல்வாதியின் உதவியை நாடிச் செல்கின்றனர் இருவரும். இடைத்தேர்தல் பணிகளில் இருக்கும் ஆளும் சமந்தா கட்சி அரசியல்வாதியும் அவரது அல்லக்கைகளும், ‘தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு 1 லட்சம் உதவித் தொகை தருவதாக யாரோ சொன்னதாக’ச் சொல்லி, அப்படி வேண்டுமானால் குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்று கிண்டலடிக்க, அதை உண்மையென்று நம்பி தற்கொலை செய்தாவது குடும்பத்தைக் காப்பது என்று முடிவுக்கு வருகிறார்கள் சகோதரர்கள். ”நான் செய்கிறேன்; நான் செய்கிறேன்” என்று இருவரும் மாறி மாறிப்பேசி, இறுதியில் தம்பியான நத்தா தற்கொலை செய்வதென்று முடிவாகிறது.

மற்றொருபுறம் வியாபாரப் போட்டி காரணமாக டி.ஆர்.பி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் அய்டிவிஎன் மற்றும் பாரத் லைவ் ஆகிய தொலைக்காட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் நத்தாவின் தற்கொலை முடிவை இவர்கள் டீக்கடையில் பேசுவதைக் கேட்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ராகேஷ், இச்செய்தியை நாளிதழில் வெளியிடுகிறார்.  இதனைப் பார்த்து அய்டிவிஎன்-ன் நட்சத்திர செய்தியாளர் பீப்லி கிராமத்திற்கு வந்து நத்தாவைப் பற்றி செய்தி வெளியிடுகிறார். அடுத்தடுத்து அனைத்து தொலைக்காட்சிகளும் பீப்லி கிராமத்தில் குவிந்து நத்தா தற்கொலை செய்து கொள்ள இருப்பதை வெளியிடுவதில் மும்முரமாகின்றன. இதன் மூலம் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சிகள் குவியக் குவிய திருவிழாக் கோலம் காண்கிறது பீப்லி.


நேரடி ஒளிபரப்பு மூலம் நத்தாவின் இரவு பகல் அத்தனை நிகழ்வுகளையும் ஒளிபரப்புகின்றன சேனல்கள். அரசுக்குப் பாதிப்பாகப் போய் இடைத்தேர்தல் முடிவு பாதிக்கப்படலாம் என்பதால் இதைத்தடுக்க ஆளுங்கட்சி முயல, அதே நேரம் இதை வைத்தே ஆதாயம் பெற எப்படியாவது நத்தா தற்கொலை செய்துகொண்டுவிட வேண்டும் என்று காய் நகர்த்துகிறது எதிர்க்கட்சியான ’அப்னாதளம்’. நிறுவவதற்கான செலவுத்தொகை தராமல் வெறும் அடி பம்பு ஒன்றினை அரசு வழங்கிச் செல்ல, வண்ணத்தொலைக்காட்சி ஒன்றினை வழங்கிச் செல்கிறார் மற்றொரு வேட்பாளர்.

காலைக்கடன்களை முடிக்க கொல்லைக்குச் சென்றாலும் பாதுகாப்புக்கு போலீஸ், தொடர்ந்து படம் பிடித்து தொல்லைதரும் தொலைக்காட்சிகள் என நத்தாவின் வாழ்க்கை வேறுவகையாகிவிடுகிறது. திடீரென அவர் ஆளுங்கட்சியில் உள்ளூர் அரசியல் வாதியால் கடத்திவைக்கப்பட்டுவிட, நத்தாவைத் தேடத் தொடங்குகின்றன அனைத்து ஊடகங்களும். கடைசியாக நத்தா ’கக்கா’ போனது இங்குதான் அதற்கான அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது என்கிற ரீதியில் தொலைக்காட்சி சேனல்கள் அலசுகின்றன. நத்தா இருக்கும் இடத்தை அறிந்து அய்டிவின்-இன் செய்தியாளருடன் அவ்விடத்திற்கு ராகேஷ் போக, அரசு இயந்திரமும், அனைத்து ஊடகங்களும் அங்கு விரைய, கடத்தி வைத்தவர்கள் தப்பிக்க முயல, நிகழும் களேபரத்தில் தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து போகிறார். இறந்தவர் நத்தா தான் என அரசு உறுதிப்படுத்திவிட, அனைத்து ஊடகங்களும் மூட்டை கட்டிவிடுகின்றன. உள்ளூர் செய்தியாளர் ராகேஷ், தனது செல்பேசியை எடுக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டு அய்டிவிஎன் செய்தியாளரும் சென்றுவிட, சில மாதங்கள் கழிந்த பின்னரும் நத்தாவின் குடும்பத்திற்கு உதவித் தொகைகள் எதுவும் கிடைக்கவில்லை.


காரணம், நத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை; விபத்தில் இறந்ததால் உதவித் தொகை கிடையாது என்று அரசு கைவிரித்துவிட்டதாக, நத்தாவின் மனைவியிடம் புட்டியா சொல்கிறார். நத்தாவின் குடும்ப நிலை இப்படி இருக்க.. இவர்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு நகரத்தின் கட்டுமானப் பணியாளர்களில் ஒருவராக கையில் மண்வெட்டியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நத்தா. ’ஜோலா மாண்டிக் கேரா’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் 1991-2001க்கிடையில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு சென்றிருப்பதாக சென்சஸ் அறிக்கை தகவல் குறிப்புடன் படம் முடிகிறது.

படத்தின் இயக்குநர் அனுஷா ரிஷ்வி என்டிடிவி-யில் செய்தியாளராகப் பணியாற்றிய பெண். ஊடகத்தின் உச்சபட்ச நோக்கத்தினை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ரிஷ்வி. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். இயல்பான அவர்களது பங்களிப்பை நடிப்பு என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தொழில்மயமாக்கல் தான் விவசாயிகளின் சிக்கலுக்குத் தீர்வு என்று கருத்து சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர், எந்தத் திட்டத்தையாவது சொல்லி தான் தப்பிக் கொள்ளப் பார்க்கும் முதலமைச்சர், கோர்ட் முடிவுக்குக் காத்திருக்கிறோம் என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லும் அய்.ஏ.எஸ் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் செவிட்டில் அறைவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் கரித்துக் கொட்டும் கிழவி, உயிருடன் இருப்பவர்களுக்கு எதுவும் தராமல் செத்தபின்தான் அரசு உதவும் போலும் எனக் கிண்டலடிக்கும் டீக்கடைக்காரர் என சின்னச் சின்ன இடங்களிலும் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

’விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு மாறவே கூடாது; வர்ணாசிரமம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் வேறு தொழிலுக்கு போய்விடக் கூடாது; வயல்வெளிகளிலேயே கிடந்து உழல வேண்டும்; கிராமங்கள் அழிந்துவிடக் கூடாது’ என்பதல்ல நமது விருப்பம். குலத் தொழிலிருந்து வெளியே வாருங்கள்; கிராமங்களை மறந்து நகரங்களுக்கு வாருங்கள்; கிராமங்களை நகரங்களாக்குங்கள் என்றழைத்தவர் பெரியார். ஜாதிக் கட்டுமானத்திற்கு அடிப்படையாக கிராமச்சூழல் விளங்குகிறது என்பதால் அவற்றிலிருந்து வெளியேறவும் தாங்கள் விரும்பும் தொழிலைச் செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் தான் அதன் அடிப்படை. அவர்கள் விரும்புவது விவசாயமாக இருக்கும் நிலையில், அடிமைகளாக இல்லாமல், தத்தமது சொந்த நிலங்களில், அல்லது மேம்பட்ட பணியாளர்களாகவோ இருக்கும் உரிமையும் அவர்களுக்கு வேண்டும்.

தமிழகத்தின் சூழலுக்கு பீப்லி லைவ் கதை பொருந்தாமல் போகலாம். 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2 ஏக்கர் நிலம், இலவச மின்சாரம், இலவச பம்ப் செட் என்றெல்லாம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திட்டங்களை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் அரசின் சாதனைகளால் இந்தியா முழுமையும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழகம் தப்பியது, ஆனால் இதைப் போன்ற உயிர்நாடிப் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அவற்றில் கவனம் செலுத்தும் திரைப்படங்களும் தமிழில் வராமல் இல்லை. இந்தித் திரையுலகில் அமீர்கான் போன்றோர் செய்யும் இப்பணியை தமிழ்நாட்டிலும் இனவுணர்வும், திரைக் காதலும் கொண்ட பலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அத்தகைய திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் எத்தகைய வரவேற்பை, விளம்பரத்தை அளித்திருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

கடந்த சில நாட்களாக திரும்பும் இடமெல்லாம் ஒரே ஒரு படத்தைத் தூக்கிவைத்து பேசிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள். இவை உருவாக்கியிருக்கும் பிம்பத்தினால், ஒருவேளை இப்படத்தைப் பார்க்காவிட்டால் நம்மை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்களோ என்று கருதும் மனநிலைக்கு வந்திருக்கிறான் சராசரித் தமிழன். சும்மா ’சூப்பர் ஸ்டார்’ தும்மினாலே அட்டைப்படத்தில் போடும் நமது பத்திரிகைகளுக்கு மத்தியில், நாளிதழ்கள், வார இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பெரும் ஊடகங்களைத் தம் கையிலும், எஞ்சியவற்றைத் தம் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முயலும் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளராக இருந்துவிட்டதால் நிலையை சொல்லத் தேவையில்லை. சந்தேகமில்லாமல் தொல்லையின் உச்சத்தில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் அந்தத் திரைப்படத்தின் பெயர் ’எந்திரன்’ என்று சொல்லி மீண்டும் உங்களை அலர்ஜிக்கு உட்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறோம்.

ஒன்றா இரண்டா? எத்தனைப் படங்களிலிருந்து திருட்டு? பை செண்டினல் மேன் படத்தின் கதை என்று ஒரு பக்கம்.




எனது கதையைத் தான் படமாக்கியிருக்கிறார்கள் என்று ஆர்னிகா நாசர் என்ற தமிழ் அறிவியல் சிறுகதை எழுத்தாளர் ஒரு பக்கம். இன்னும் பார்க்கப் பார்க்க நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்கள் நினைவுக்கு வருகின்றன. பின்னணியில் இருக்கும் ஒரு ரோபோட் படத்தைக் கூட, ஒரு கணினி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து திருடியிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் அம்பலப்பட்டுவருகிறார்கள்.

 

இவர்கள் தான் திருட்டு டிவிடி-க்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்கிறார்கள். எளிய திரைப்படங்களைக் காப்பாற்ற திரைத்துறை விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், டிக்கெட் விலைக் கட்டுப்பாடுகள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, ஊடக முற்றுரிமையை உருவாக்கியதைப் போன்ற இந்தப் படத்திற்கு மற்ற ஊடகங்களும் ஜால்ரா தட்டி வரவேற்கின்றன என்பது எவ்வளவு கேவலம்?


ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் வாயில் போட்டு மீண்டும் மீண்டும் மென்று, அரைத்து, குதப்பித் துப்பிய அரதப் பழசான கதையைத் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்குக் கோடிக் கணக்கில் செலவு செய்து, உச்சநட்சத்திரங்களைக் கொண்டு நிரப்பி, ’இப்படம் பார்க்கவில்லையென்றால் நீ மனிதனாகப் பிறந்ததே வேஸ்ட்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்; அதை அனைத்து ஊடகங்களும் வெட்கமில்லாமல் வரிந்துகட்டி ஆதரிக்கிறார்கள் என்றால் தமிழர்களை மடையர்களிலும் கேடான மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா  பொருள்? நாம் எத்தகைய படங்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம் மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொள்ளுதல் நல்லது.

பீப்லி லைவ் ஊடகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது என்றால், எந்திரன் படத்தின் மூலம் ஊடகங்கள் தாங்களே நிர்வாணப்பட்டு நிற்கின்றன என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது.