Sunday, March 11, 2007

குரு - முதலாளித்துவ பாடம்நடத்தும் மணிரத்னம்

"இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம் 'உ' போடு. அதென்ன 'ஒ'வுக்குப் பதிலாக 'உ. அதுதான். உண்மை - உழைப்பு உயர்வு. இந்த மூன்று 'உ'வையும் தூக்கிக் கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.மக்கள் எவரும் போராட்டம் புரட்சி போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள் தமது வெற்றிக்கான படிக்கட்டுகளை. 'நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.இதுபோதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று 'உ'க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான். உழைப்பால் உயர்ந்த உத்தமர்.
-பாமரன்

மணிரத்னத்தின் குரு படத்தை இந்தப் பட்டியலிலெல்லாம் சேர்த்துவிட முடியாது. அவர்தான் படத்தின் தொடக்கத்திலேயே 'இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் முதலியன யாரையும் குறிப்பன அல்ல என்று போட்டு விடுகிறாரே! இருந்தாலும் 'குருபாய்' என்று அழைக்கப்படும் குருநாத் தேசிகனையும் திருபாய் அம்பானியையும் சேர்த்து வைத்து ஏன்தான் இந்தப் பத்திரிகைகளெல்லாம் எழுதுகின்றனவோ தெரியவில்லை.


இந்திய சினிமாவை நிமிர்த்தியே தீருவதென கடப்பாரையோடு திரியும் மணிரத்னத்தை பாராட்ட சுஜாதாவின் கை மட்டுமே வேலை செய்கிறது. உலகத் தரத்தில் ஒரு இந்திய சினிமாவாக இதைப் பார்ப்பதாக சுஜாதா வரிந்து கட்டி எழுதினாலும் அதையும் தாண்டி சாதாரண திரைப்பட ரசிகனுக்குத் தெரிந்து போகிறது -இது 'நாயகன்' படத்தைச் அச்செடுத்த நகல் என்று! அதன் திரை வடிவம் மார்லன் பிராண்டோவின் 'காட் பாதர்' என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் உங்களுக்கு இன்ஸ்பிரேசனுக்கும் காப்பியடித்தலுக்குமான வித்தியாசம் புரியவில்லை என்று பொருள். (மற்றவர்கள் செய்தால் காப்பி; மணிரத்னம் செய்தால் மட்டும் இன்ஸ்பிரேசன் என்பது தான் வித்தியாசம்)


சரி, நாம் இப்போதைய 'குரு'வுக்கு வருவோம். குர்தாவும் கோட்டும் குல்லாவும் வலப்பக்க மாராப்புமாய் வடஇந்திய மக்கள் வாழும் திருநெல்வேலி மாவட்ட இலஞ்சியூர் கிராமத்திலிருந்து (!) (மொழி மாற்றுப்படம் என்பதால் மன்னித்து விடுவோம்) 'துருக்கிக்கு வேலைக்குப் போகிறார் குருநாத் தேசிகன். அங்கு பெட்ரோல் டின் விற்பனையில் பணியாற்றி நுணுக்கமான தன் அறிவாற்றலால் வளர்ந்து பதவி உயர்வும் அதிக ஊதியமும் பெறப் போகும் சூழலில் 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாகச்' சொல்லி விட்டுச் சொந்த ஊருக்கு வருகிறார் குரு. வியாபாரத்தில் தோற்று பின் ஆசிரியராகப் பணியிலிருக்கும் தந்தை வியாபாரத்திலிறங்க குரு எடுத்திருக்கும் முடிவை எதிர்க்கிறார்.


பின்னர் தன் நண்பனின் அக்காவும் காதலில் தோற்றவளும் தன்னை-விட மூத்தவருமான அய்ஸ்வர்யாராயை 15 ஆயிரம் ரூபாய் வரதட்சணைப் பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்கிறார் குரு. தான் ஏற்கனவே வைத்திருக்கும் 15 ஆயிரம் ரூபாயுடன் வரதட்சணைப் பணத்தையும் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்க பம்பாய் செல்கிறார். பருத்தி வியாபாரத்தில் புதியவர்கள் இறங்கத் தடையாயிருக்கும் 'கான்ட்ராக்டர் என்னும் முதலாளியை எதிர்க்கத் துணிகிறார். அதைப் பத்திரிகையில் எழுதி அவனுக்குப் பெரும் உதவி செய்கிறார் 'சுதந்திரமணி' நாளிதழ் ஆசிரியராக வரும் நானாஜி (மிதுன் சக்ரவர்த்தி).


யாரும் முதலீடு செய்யாத பாலியஸ்டர் துணியில் முதலீடு செய்து பின்னர் அதை பொதுப் பங்கு நிறுவனமாக்கி உற்பத்திக்கு தொழிற்சாலையை உண்டாக்கி `சக்தி குடும்பம் என்ற பெரும் நிறுவனத்தின் அதிபராக வளர்கிறார் குரு.ஆனாலும் எப்போதும் தான் ஏழை வியாபாரி என்றும் `சக்தி குடும்பம் மொத்தத்துக்கும் உரிய சொத்து இது என்றும் சொல்லியபடி வாழ்க்கைப் படியேறுகிறார். திருபாய்... மன்னிக்கவும் குருபாய். அவரது அபரிமித வளர்ச்சியையும் அதற்காக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பணத்தால் வளைப்பதையும் தெரிந்து கொண்ட 'சுதந்திர-மணியின் ஆசிரியர் தன் நம்பிக்கைக்குரிய இளைய செய்தியாளர் மாதவனை அழைத்து 'குரு'வைப் பற்றிய உண்மைகளை எழுதச் சொல்கிறார் மிதுன்.


'பெர்மிட் ராஜ்' 'லைசென்ஸ்' என்று அன்றைக்கிருந்த கட்டுப்பாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன என்று கருதும் 'குரு' இங்கிருந்து ஏற்றுமதி செய்வதாகப் போலி கணக்குக் காட்டி அதன் மதிப்புக்கு இறக்குமதி செய்து கொள்கிறார். மேலும் 6 இயந்திரங்கள் வாங்குவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு உதிரி பாகங்கள் என்னும் பெயரில் இறக்குமதி செய்து அதை இயந்திரமாக்கி 12 இயந்திரங்-களில் உற்பத்தி செய்கிறார் குரு.


இப்படிச் செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியில் மோசடி உரிம அளவுக்கு மேலான உற்பத்திக்கு உரிமப் பணத்தை குறைத்தல் அதில் உற்பத்தியான பொருள்-களை கள்ளச் சந்தையில் விற்றல் அதற்குரிய ஆயத் தீர்வை வரிகளைக் கட்டாதிருத்தல் விற்ற பொருள் மூலம் கிட்டிய பணத்துக்கு வருமான வரி கட்டாதிருத்தல். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் குருவின்மீது சாட்டப்பட்டு அவரது நிறுவனங்களை மூடும் சூழல் உருவாகிறது. இந்த அதிர்ச்சியில் குருவுக்கு பக்கவாதம் வந்து சுருண்டு விழுகிறார். இதுவரை நம்பியிருந்த 'சக்தி குழும' உறுப்பினர்களும் இப்போது நம்பாமல் போனது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்மீது விசாரணைக் கமிஷன் வைக்கப்-படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் விசாரணைக்கு வருகிறார் குரு. ரகசிய விசாரணை நடக்கும் 5 நாள்களில் பதில் சொல்லாமல் தன் மனைவியை பேச வைத்த குரு மக்கள் முன் ஊடகங்களின் முன் விசாரணை என்று அறிவிக்கப்படும் நாளில் வழங்கப்பட்டிருக்கும் அய்ந்து நிமிடங்களில் பேசுகிறார்.


"ஒரு ஏழை வியாபாரியா நான் இந்த ஊருக்கு வந்தபோது எனக்கு வியாபாரத்துக்குக் கதவு திறக்கலை. அது சில பணக்காரங்களுக்கு மட்டும்தான் திறந்தது. சில இடத்தில் சலாம் போட்டால் திறந்தது சில இடத்தில் எட்டி உதைச்சாதான் திறந்தது. நான் ரெண்டையும் செஞ்சேன். எனக்குப் பின்னாடி இருந்த 30 லட்சம் குடும்பங்களுக்காக உழைச்சோம். ஒரு கிராமத்து வியாபாரிக்கு உங்களோடு சட்டம் வரி கணக்கு இதெல்லாம் தெரியலைங்க. நாங்க உழைச்சோம். இன்னிக்கு இந்த தேசம் வேகமா முன்னேறிக்கிட்டிருக்கு. இதோட வளர்ச்சியை உங்க சட்டம் கட்டுப்பாடு இதனாலெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த நடுத்தர வர்க்கமும் ஏழை மக்களும் வளர்ந்தது பணக்காரக் கூட்டத்துக்கு பிடிக்கலை. அதுதான் எங்களுக்கெதிரா எல்லா வேலையும் செய்யுது. இந்த தேசமும் மக்களும் கொஞ்ச காலத்தில எங்கேயோ போகப் போறாங்க. அன்னைக்கு எங்க வளர்ச்சி தெரியும். இப்படித்தான் 40 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் சட்டத்தை மீறினார் அவராலதான் நாம இன்னிக்கு சுதந்திரமா இருக்கோம். காந்தி செஞ்ச போராட்டமும் அன்னைக்கு இருந்த சட்டத்தை மீறினதுதான். அது மூலமா நம்ம இன்னைக்கு புது சட்டம் எழுதியிருக்கோம். நீங்க என்ன தீர்ப்புத் தந்தாலும் நான் மக்களோட சேர்ந்து உழைச்சிட்டே இருப்பேன். அதைத்தானா தப்புங்கறீங்க. நீங்க குடுத்த 5 நிமிசத்தில நான் சொல்ல வேண்டியதை நாலரை நிமிசத்தில சொல்லிட்டேன். 30 விநாடி எனக்கு லாபம். இதுதான் நான் வளர்ந்த விதம்" என்று தேசத்தின் அடிமட்ட மக்களுக்காக உழைக்கும் தன்னுடைய தியாக(!) மனப்பான்மையைப் பற்றி விலாவாரியாக விளக்கியதும் 'இதுக்கென்ன தூக்குத் தண்டனையா கொடுக்க முடியும்? என்று தங்களுக்குள் விவாதிக்கும் விசாரணை அதிகாரிகள் 63.5 லட்சம் அபராதத் தொகையோடு 29 வழக்குகளில் இரண்டு தவிர மற்றவற்றைத் தள்ளுபடி செய்கின்றனர்.


தொடக்கக் காட்சியில் வெற்று மைதானத்தில் 'சக்தி குடும்பத்தின்' வளர்ச்சி பற்றி கருப்பு வெள்ளையில் பேசிக் கொண்டிருந்த அதே காட்சி திரும்ப வண்ணத்-தில் வருகிறது. அவரை ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் மைதானத்தில் மொத்த கூட்டமும் நிறைந்திருக்கிறது (சக்தி குழுமத்தின் பங்குதாரர்கள் கூட்டமாம்!) அவர்களிடையே குரு நம்பிக்கையுடன் பேச படம் முடி-வடைகிறது.

இதில் குருநாத் தேசிகனை - திருபாய் அம்பானியாகவும் சுதந்திரமணியை (The Independent) தினமணி (The Indian Express) யாகவும் மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருக்கும் `நானாஜி கதாபாத்-திரத்தை ராம்நாத் கோயங்காவாகவும் மாதவனை (ஷ்யாம்) அருண்ஷோரியாகவும் `சக்தி குடும்பத்தை `ரிலையன்ஸ் குழுமமாகவும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளக் கூடாது என்பதற்குத்தான் முதலிலேயே எச்சரிக்கை போட்டு விட்டார்கள் இது கற்பனைக் கதை என்று! அபிஷேக்பச்சனை 'குரு'வாக கற்பனை செய்து கொள்ளும் உரிமை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதே மாதிரி குருவை நாயகனாகவும் தேசிகரை நாயக்கராகவும் மல்லிகா ஷெராவத் ஆடும் ஆட்டத்தை குயிலி ஆடும் நிலா அது வானத்து மேலேவாகவும் நிருபர் மாதவனை இன்ஸ்பெக்டர் நாசராகவும் மாதவன் காதலியும் குருவின் மகளைப் போன்றவருமான வித்யாபாலனை நாசரின் மனைவியும் நாயகனின் மகளுமான கதாபாத்திரத்துடனும் நீங்கள் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குத் தான் படத்தின் பெயர் 'குரு' என்று போடுகிறார்கள். விசாரணைக் காட்சியைப் பார்த்துவிட்டு லியோனார்டோ டிக்காப்ரியோ நடித்த ஏவியேட்டர் என்றும் நீங்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதற்காகத்தான் தமிழ்ப் படம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


சரி காப்பியடிக்கும் இன்ஸ்பிரேசனெல்லாம் போகட்டும் இதில் மணிரத்னம் என்னதான் சொல்ல வந்திருக்கிறார். நாலு பேருக்கு நல்லது பண்ணால் எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் '30 லட்சம் பேருக்கு லாபம் கிடைச்சா 80 கோடி பேரை ஏமாத்துறது தப்பே இல்லை என்று வாதிடுகிறார். 'அடுத்தவருக்காக உழைக்காமல் தனக்காக உழைக்கப் போவதாக' துருக்கியிலிருந்து கிளம்பியவர் விசாரணைக்கு வந்ததும் சொல்கிறார் 'நான் 30 லட்சம் பேருக்காக உழைத்தேன் என்று'! நம்புங்கள்.


முறையாகக் காட்டிய கணக்கில் பங்குதாரர்களுக்குப் பங்கு.. சரி! முறையில்லாமல் நடத்திய வியாபாரத்திற்கு அதிகாரப்பூர்வ கணக்கு ஏது அதில் பெற்ற லாபம் எல்லாம் எத்தனைப் பேருக்குப் போய்ச் சேர்ந்தது. பாவம் காந்தி அவர் செத்து 58 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது போராட்டத்தை இப்படியும் கொச்சைப்படுத்த வேண்டுமா?


தேசம், தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் முதலாளித்துவம் எப்படியெல்லாம் பசப்பு மொழி பேசி ஏமாற்றுகிறது பாருங்கள். தன்னை நடுத்தர வர்க்கம் ஏழை வியாபாரி என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காததையும் பார்ப்பனீயம் தன்னை ஏழை சமூகமாகக் காட்டிக் கொண்டு சமூக நீதியை எதிர்ப்பதையும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.கடுமையாக உழைப்பதனால் மட்டுமே சட்டத்திற்கு புறம்பாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற (மணிரத்னத்தின்) குருவின் வாதத்திற்கு வலுவூட்ட மாதவனின் பாத்திரப் படைப்பு. நியாயத்திற்குப் புறம்பாக குரு செய்யும் வியாபாரத்தைத் தோலுரிக்க பம்பாயிலேயே இரண்டு பேருக்கு ஷேக் வேசம் போட்டு துபாய் போலக் காட்டி மோசடிப் புகைப்படம் எடுத்து பிரசுரிக்கிறார் மாதவன்.


மேலும் நல்லவராகவும் அனுதாபத்துக்குரியவராகவும் குருவைக் காட்ட கிளைமாக்சுக்குமுன் பக்கவாத நோய்! சரி இத்தனைப் பொருளாதாரப் பிரச்சனைகள் பேசுமிடத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சிறிய பாத்திரம்கூட இல்லையா? சேச்சே... அது எப்படி? ஒரு கதாபாத்திரம் தந்திருக்கிறார். ஆரம்பத்தில் அய்ஸ்வர்யாராய் தன் காதலனோடு ஓடிப் போவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி இரயிலேறும் நேரத்தில் பயந்து கொண்டு உடன் வராமல் ஏமாற்றுகிற கோழை இருக்கிறானே. அவன்தான் செங்கொடி பிடித்தபடி வீராவேசமாக வீதிகளில் வளைய வரும் கம்யூனிஸ்ட். (இதை காட்சிகளில் காட்டாமல் மிக லாவகமாக அய்ஸ்வர்யாராயின் தந்தை கதாபாத்திரத்தின் மூலம் பேச வைத்திருக்கிறார் மணிரத்னம்)

லாபம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் சட்டத்தையும் மீறுங்கள் வரிப் பணத்தை ஏமாற்றுங்கள் என்று முதலாளித்துவத்தைப் படிக்கும் இன்றைய எம்.பி.ஏ. மாணவர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் தன் பாணியில் காட்சி ஊடகத்தில் முதலாளித்துவப் பாடம் நடத்தியிருக்கிறார் மூத்த எம்.பி.ஏ. பட்டதாரியான மணிரத்னம்.