Thursday, November 05, 2009

பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!

தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.

பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.
என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.


மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.
எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.

அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.

உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.

கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.
ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.

சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.
உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!
அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!

உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!

"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!

ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!

காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...

கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!

"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".

"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.

மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.

மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.

"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.

ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)

"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.

"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!

இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!

இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
-சமா இளவரசன்
சென்சாருக்கு நன்றி!
ரிசர்வேசன் கோட்டாவில் படித்து வந்தவன் என்று கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு கணபதிராமும், மாணவிகளும் துருவனைப் பார்த்து கேலிசெய்யும் வசனங்களைப் பல இடங்களில் ஊமையாக்கி இருக்கிறது சென்சார் போர்டு. நீ எடுத்த மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டு, மாணவிகள் மத்தியில் மட்டம் தட்ட நினைக்கும்போதும், இவங்கள்லாம் காட்டுமிராண்டித் தனமாத் தான் நடந்துக்குவாங்க என்று சொல்லும்போதும் அடுத்தடுத்த வசனங் களை வெட்டியிருக்கும் சென்சார் போர்டுக்கு, அவ்வசனங்கள் எம்மக்களை இழிவுபடுத்தும் என்பதல்ல அக்கறை. அவற்றையெல்லாம் கேட்டு விட்டால் எங்கே மக்களுக்கு கோபம் வந்து விடுமோ என்பது தான் கவலை. அந்த வகையில் சென்சார் போர்டுக்கு நாம் நமது நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும். காரணம், அப்படியே வசனங்கள் வந்திருந்தால் கூட காதில் விழாமல் போயிருக்கலாம்; கவனம் பெறாமல் போயிருக்க லாம். கத்திரிபட்டதால் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளப் பட்டதாலும், அதை வெட்டியிருக்கிறார்களே என்ற கோபத்தாலும், திரையரங்குகளில் எதிர்க் குரல்களைக் கேட்க முடிகிறது.

'பராசக்தி'யில் "அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்; அது பேசாது- கல்" என்று முழுதாய் சொல்ல விட்டிருந்தால் சிவாஜி கணேசன் மட்டும் தான் சொல்லியிருப்பார். ஆனால் 'கல்' என்ற வார்த்தைக்கு மட்டும் வெட்டுக் கொடுத்து, படம் பார்த்த அனைவரையும் 'கல்' என்று சொல்ல வைத்த பெருமை எப்படி சென்சாரையே சாருமோ அப்படித்தான் இந்தப்படத்திலும்! 'சுரணையற்ற எங்கள் மக்களுக்கு திரையரங்கிலும் கோபம் வருமா?' வரவைத்த சென்சார் துறைக்கு நமது நன்றியைச் சொல்லாவிட்டால் நாம் நன்றி கொன்றவர்களாவோம்...!

Thursday, June 11, 2009

ஸ்லம்டாக் மில்லியனர்


ஊர் உலகமெல்லாம் பேசப்படும் பெயராகியிருக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர். கோல்டன் க்ளோப், பாஃப்டா என்று விருதுகளை அள்ளிக் குவித்த ரஹ்மான் அமெரிக்-காவின் உச்ச விருதான ஆஸ்கார் விருதுகளையும் இரு கைகளில் சுமந்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் ஆஸ்கார் கனவு ஒரு தமிழனால் நனவாகியிருக்கிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இருந்த அதே நேரத்தில் எதிர்ப்புகளும் இருந்தன. அவை இப்படத்தின் புகழை வைத்து தாங்கள் புகழடைய நினைத்தவர்களின் செயலாகவும், புகழ் பெற்ற நகரின் பெருமையைக் குலைக்கிறது என்ற புலம்பலாகவும் இருந்தது.
படத்தின் பெயரை மட்டும் கேட்டுவிட்டு, படம் என்ன சொல்ல வருகிறது என்றே தெரிந்து கொள்ளாமல் கூச்சலிடும் சிலரை நாம் கண்டிருக்கிறோம். ஹேராம் படத்துக்கு காந்தி எதிர்ப்பு என்றும், சண்டியர் படத்துக்கு ஜாதியப் பார்வை என்றும் படப்பிடிப்பு நடக்கும்போதே எழுந்த எதிர்ப்புகளைப் போலத்தான் இப்படத்துக்கும் தலைப்பினால் எதிர்ப்பு வந்தது. ஸ்லம்டாக் - சேரி நாய் என்று இழிவுபடுத்தியிருப்பதாக எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்லம் டாக் என்று இழிவாய்ப் பேசுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவது இழிவாகாது.

சற்சூத்ராய நமஹ என்று பார்ப்பனர்கள் சொன்னதற்கும், சூத்திர மக்களே சுரணை பெறுங்கள்! என்று நாம் சொல்வதற்கும் வேறுபாடு உண்டு.

கதை இதுதான்! விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விளையாடும்போது சேரி நாய்களே என்று போலீசாரால் விரட்டப்படும் சேரிச் சிறுவர்களில் ஒருவன், வளர்ந்து இளைஞனானபின் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலைச் சொல்லி வெற்றியின் விளம்பில் கோடீஸ்வரனாக நிற்கும்போதும், உனக்கெப்படி பதில் தெரியும்? என்று அடித்து நைத்து விசாரிக்கப்-படுகிற நிலையைத்தான் படம் பிடிக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர்.

கால் சென்டரில் தேநீர் கொடுக்கும் இளைஞனான ஜமால் எப்படி பலரும் வெல்லமுடியாத க்ரோர்பதி நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியும்? அவன் ஏதோ சூது செய்கிறான் என்று சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையிடம் அவனை ஒப்படைத்து முறைப்படி(!) விசாரணை நடக்கிறது. இந்தியாவின் ஆயிரம் ரூபாய் நோட்டு எந்த வண்ணத்திலிருக்கும் என்பது கூடத் தெரியாத ஓர் இளைஞன், எப்படி அமெரிக்காவின் 100 டாலர் நோட்டில் இருக்கும் படம் பெஞ்சமின் பிராங்க்ளின் என்று சரியாகச் சொல்ல முடியும்? இப்படி எழும் கேள்விகளோடு விசாரிக்கும் காவல் அதிகாரியிடம், தனது ஒவ்வொரு பதிலுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் தன் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறான் ஜமால். இதனூடாகப் பயணிக்கும் திரைக்கதை, ஜமாலின் சிறுவயது தொடங்கி, நிகழ்காலம் வரையிலான அவனது வாழ்வின் வழியாக முன்பின்னாக மாறி மாறிக் குழப்பமின்றி நுழைந்து செல்கிறது. விகாஸ் ஸ்வரூப் எழுதிய க்யூ அண்ட் ஏ என்ற நாவலைத் திரைக்கதையாக்கிய சிமன், படத்தை இயக்கிய டேனி போய்ல் இருவரும் மும்பை மாநகரத்தின் சேரிப் பகுதிகளையும், அம்மக்களின் வாழ்க்கையையும், ஆர்ப்பாட்ட-மின்றியும் வலிந்து திணிக்காமலும் எடுத்துக்-காட்டியிருக்கிறார்கள். (இருவருக்கும் ஆஸ்கர் கிடைத்திருப்பது கூடுதல் செய்தி).

ராமனின் வலதுகையில் என்ன ஆயுதம் இருக்கும்? - இஸ்லாமியனான ஜமாலிடம் இக்கேள்வி கேட்கப்படுகிறது. அவனது நினைவலைகள் அழைத்துச் செல்லும் இடம் - அவன் வாழ்ந்த சேரிப்பகுதி. தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த தன் அம்மா, இந்து பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு தன்னையும், அண்ண-னையும் விரைந்து செல்லுமாறு அனுப்பிய காட்சி அவன் முன் விரிகிறது. ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தாயை விட்டுவிட்டு, தப்பியோடும்போது, சேரியின் சந்து ஒன்றில் ராமன் வேடம் தரித்து நிற்கும் ஒரு குழந்தையின் கையில் வில்லும் அம்பும் இருந்ததைக் கண்ட நினைவு வருகிறது. அந்தக் கேள்விக்கான சரியான பதிலாக அது இருக்கிறது.

சூர்தாஸின் தர்ஷன் தோ கன்ஸ்யாம் பாடல் குறித்த கேள்வி சேரிச் சிறுவர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் கூட்டம் பற்றிய நினைவையும், முதல் வணிகத் துப்பாக்கி குறித்த கேள்வி- தன் தோழி லதிகாவை விபச்சார விடுதியிலிருந்து மீட்கும் காட்சியையும், 100 டாலர் நோட்டு பற்றிய கேள்வி- குருடாக்கப்பட்டு பிச்சைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பற்றிய காட்சியையும் நினைவூட்டுகிறது.


இப்படியே போட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் விவரிக்கும் காட்சிகள் காவல் அதிகாரியைக் கரைத்துவிடுகிறது. கடைசிக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ள அவன் எடுக்கும் முயற்சி தொலைபேசியைப் பயன்படுத்துவது தன் அண்ணனுக்காக அவன் விடுக்கும் அழைப்பு, காதலி லதிகாவை அவன் சேர வழியமைத்துத் தருகிறது. வெற்றியைப் பற்றி கவலையில்-லாமல், மனப்போக்கில் அவன் சொல்லும் பதிலே வெற்றியைத் தந்து 2 கோடி பரிசை வெல்லச் செய்கிறது.இதே வேளையில் தமிழில் வந்திருக்கும் நான் கடவுள் படத்தின் மய்யக் கருத்தும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மக்கள் திரளைப் பற்றியதாக இருப்பதையும், சமூகத்தின் இருண்ட பக்கங்களின் மேல் கொஞ்சம் வெளிச்-சமிட்டுக் காட்டுவதையும் ஒரு தற்செயலான ஒற்றுமையாகக் காண முடிகிறது.

படிப்பறிவு அற்றவனாக இருந்தாலும், அவன் வாழ்வில் கண்டதும், கேட்டதும்தான் அவனுக்கு பதில்தர உதவுகின்றன. கேள்வி அறிவுதான் அவனை வெற்றிபெற வைக்கிறது. இதை அனைவர் மதியிலும் பதிய வைக்கிறார் இயக்குநர்.

அனல் பறக்கும் ஒரு திரைக்கதையில் இந்தியாவின் அவலத்தைப் பதிவு செய்ததுதான் ஸ்லம் டாக் மில்லியனரின் வெற்றி. இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கும் படத்திற்கும் நிறைய தொடர்பு.

அவரையொத்த கதாபாத்திரம் தான் அனில்கபூர் ஏற்றிருப்பது. அது மட்டுமல்லாமல் ஷன்ஷீர் படத்தின் நாயகன் யாரென்ற கேள்விக்குப் பதிலும் அவரே! அதைப்பற்றி ஜமால் யோசிக்கும் போது அமிதாப்பிடம் கையொப்பம் வாங்கிய நினைவு வருகிறது. மலம் கழித்துக் கொண்டிருக்கும் போது சேரிப் பகுதியில் நடக்கும் படப்-பிடிப்புக்கு வந்திருக்கும் அமிதாப்பைப் பார்ப்பதற்காக அவசர அவசரமாக மலக் குவியலுக்குள் விழுந்து எழுந்து, அதனுடனே ஓடிச்சென்று அமிதாப்பச்சனிடம் கையொப்பம் வாங்கும் காட்சி, அம்மக்களின் வாழ்க்கை எத்தகையது என்பதைக் கொஞ்சமும் மறைவின்றி நமக்குப் புரிய வைக்கிறது.

அமிதாப்பின் தொடர்பு அத்தோடு முடியவில்லை. மும்பையில் காட்டுவதற்கு இவர்களுக்கு இடமாயில்லை. முன்னேறிய நாடுகளுடன் நாம் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவை ஏழ்மை தலைவிரித்தாடும் ஒரு மூன்றாம்தர நாடாகக் காட்டியிருக்கிறார்கள் என்று படம் குறித்த தன் அதிருப்தியை வெளியிட்டியிருக்கிறார். அதுவும் ஒரு வெள்ளைக்காரரல்லவா உரித்துக் காட்டிவிட்டார் - என்ன செய்வது? இது அமிதாப்பின் கருத்து மட்டுமல்ல. பளபளப்புச் சாலைகள், பளிங்குக் கட்டடங்கள் என பன்னாட்டு மக்கள் உலவும் வீதிகளையே உலகுக்குக் காட்டி பெருமை கொள்ள நினைக்கும் உலகம் இருட்டானதென்று கண்ணை மூடிக் கொண்டு பூனைகளாய்த் திரியும் மக்களின் கருத்தாகும்.

இந்நிலையில்தான் நமக்கும் ஜமாலைப் போல பழைய நினைவு ஒன்று வருகிறது. இதே குரல் சரியாக 82 ஆண்டுகளுக்கு முன்பும் ஒலித்தது. இது சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை என்று காந்தியார் உள்ளிட்ட அனைத்து தேசியவாதிகளாலும் முத்திரை குத்தப்பட்ட மிஸ்மேயோவின் மதர் இந்தியா வுக்கெதிரான குரல்தான் அது.

ஜாதிக் கொடுமை, பெண்ணடிமை, கோயில்களின் இழிநிலை, குழந்தைத் திருமணம் என உண்மை இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டிய மேயோமீது பாய்ந்தவர்களைக் கடிந்து கொண்ட பெரியார், சாக்கடை இருப்பதால் தானே சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை வருகிறது. சாக்கடையைச் சரி செய்யாமல் ஆய்வாளரை நொந்து கொள்வதா? என எள்ளி நகையாடினார். கோவை அய்யாமுத்து எழுதி உண்மை விளக்கப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மேயோ கூற்று மெய்யா? பொய்யா? நூலில் இடம் பெற்றிருக்கும் தந்தை பெரியாரின் முகவுரை - ஸ்லம் டாக் மில்லியனருக்கும் எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். அன்றைய அமிதாப்களின் ஆதங்கத்திற்கு பதில் இதோ பெரியார் தருகிறார்:

சாதாரணமாக ஒரு இந்திய மனிதன் மிஸ் மேயோ புத்தகத்தில் இந்தியர்களைப்பற்றிக் கூறியிருக்கும் குறைகளை அடியோடு மறைத்தும், மறுத்துப் பேசியும், அவ்வம்மையை சில இழிமொழிகளால் வைதும்விட்டு சும்மா இருந்து விடுவதினால் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்த வீரனாகிவிடுவானா? அல்லது அப்புத்தகத்தில் உள்ள குறைகளில் உண்மையானவற்றைத் தைரியமாய் ஒப்புக் கொண்டு அவைகளை இந்திய மக்களுக்கு நன்றாய் விளக்கிக் காட்டி, அக்குறைகளை ஒழிக்க முற்படுபவன் உண்மையாகத் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டைச் செய்த வீரனாவானா? என்பதே இப்பொழுது ஒவ்வொருவரும் யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.

- நன்றி: உண்மை மார்ச் 1-15, 2009

Friday, March 13, 2009

நான் கடவுள்

மனநிலை பாதிக்கப்பட்டோர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர், பிணம் எரிக்கும் தொழில் செய்பவர், பிழைப்புக்காகக் கஞ்சா விற்கும் பெண் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கில்லாமல் படம்பிடித்துக் காட்டுவன இயக்குநர் பாலாவின் படங்கள்.

இம்முறை அவர் கோயில், குளம், சர்ச், மசூதி என்று சகல கடவுள் கடைகளின் முன்பும் தட்டேந்தியபடி தர்மம் கேட்கும் பிச்சைக்காரர்களோடு வந்திருக்கிறார். ஊர்விட்டு ஊர் வந்து, மாநிலம் விட்டு மாநிலம் வந்து தங்கள் பாவங்களைப் போக்கிப் புண்ணியம் பெறக் கடவுளைத் தரிசிக்கும் கூட்டத்தில் யாருக்கும் புரிவதில்லை வாசலில் வரிசை கட்டி அமர்ந்திருக்கும் யாருக்கும் கடவுள், தன் கடைக்கண் பார்வையை வீசி, கருணை காட்டவில்லை என்பது! இதை மண்டையிலடித்துப் புரியவைக்கிறார் பாலா.
ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு, தனது மகனை 14 ஆண்டுகள் காசியில் ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டுப் போனபிறகு மறந்தும் காசிப்பக்கம் தலைவைத்தும் படுக்காத ருத்ரனின் தந்தை (அழகன் தமிழ்மணி), காசியில் தர்ப்பணம் பண்ணும் பார்ப்பனர் உதவியுடன் கங்கைக் கரைகளில் சாமியார்கள் மத்தியில் தேடுகின்றார். எரிந்து கொண்டிருக்கும் சிதைக்கு ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கும் ருத்ரா (ஆர்யா)வைப் பார்த்து, இவனே தன் மகன் என அடையாளம் காட்டுகிறார் தந்தை. 'அகோரி' எனும் சாமியார் கூட்டத்தைச் சேர்ந்தவன் ருத்ரா என்றும், அவனைப் போலிருக்கும் சாமியார் கூட்டத்தவர் உறவை அறுத்தவர்கள் என்றும் ருத்ரனின் தந்தையிடம் விளக்குகிறார் பார்ப்பனர். பின்னர் ருத்ராவின் குருவைச் சந்தித்து நிலைமையை விளக்கி தென்தமிழ்நாட்டின் மலைக்கோவில் நகரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர் ருத்ராவை! "எப்போது என்னிடம் திரும்பிவர வேண்டும் என்பது உனக்கே தெரியும். நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை உணர்ந்தவன் நீ. உனக்கிருக்கும் உறவுகளை அறுத்து எறிந்துவிட்டு வா" என்று வழியனுப்பி வைக்கிறார் குரு.
தொடர்வண்டியில் தமிழகம் வரும்போதும் வீட்டினுள் நுழைந்தபின் விநோதமாய்ப் பாக்கும் தாயை அலட்சியப்படுத்தி விட்டும் தன் போக்கில் பூஜைசெய்துவிட்டு கஞ்சா அடித்து நேரடியாகக் கடவுளாக மாறிவிடுகிறார் ருத்ரா.

இன்னொரு பக்கம் ஊனமுற்றவர்கள், மன நிலை பிறழ்ந்தோர், கண் தெரியாதவர்கள் என மனிதர்களை தட்டிக்கொட்டி உருப்படிகளாகத் தயார் செய்து பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் 'முதலாளி தாண்டவன்' மற்றும் அவன் கீழ் இருக்கும் சில்லறை ஏஜென்டுகள். இவர்களுக்கு பாதுகாப்பும் ஆள் சப்ளையும் செய்யும் காவல்துறை. இதில் ஒரு சில்லறை ஏஜென்டான முருகனின் (கிருஷ்ணமூர்த்தி) கண்ணில் பாட்டுப்பாடிப் பிச்சையெடுக்கும் நாயகி அம்சவள்ளி (பூஜா) பட, தனது உருப்படிகளுக்குள் ஒன்றாக்கிக் கொள்கிறான். கஞ்சா தேடி சாமியார்கள் உலவும் இந்த மலைக் கோயிலுக்கு வந்து அங்கேயே குடி கொண்டுவிடுகிறார் ஆர்யா. அதே மலையில் இருக்கும் மாங்காட்டுச் சாமியாரிடம் தினப்படி தன் பாவக்கணக்கைத் தீர்க்க மனறாடியபடி, தன் தொழிலைத் தொடர்கிறான் முருகன்.

இந்நிலையில் காவல்துறை ஆய்வாளரின் அறிமுகத்தோடு மொத்தமாக பிச்சைக்காரர்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள வருகிறான் சபரி மலையின் பிச்சைக் குத்தகைதாரான மலையாளி ஒருவன். அவன் சொல்லும் யோசனை நல்லதாய்ப்பட முருகனின் கூட்டத்திலிருந்து வேண்டிய உருப்படிகளை அள்ளிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிடுகிறான் தாண்டவன். ஒன்றாய்க் குடும்பம்போல இருந்து பிச்சையெடுக்கும் கூட்டத்திலிருந்து பகுதிபேர் பிரித்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு, தான் பார்த்த குருட்டுப் பெண்ணான அம்சவள்ளிக்கு பத்து லட்ச ரூபாய்க்கு வியாபாரம் பிடித்து வருகிறான் மலையாளி. மிகக் கொடூரமான முகஅமைப்பு கொண்ட ஒருவருக்கு விற்பதற்காக அம்சவள்ளியை அனுப்பத் தாண்டவன் முடிவு செய்கிறான். அது தெரிந்த முருகன் அம்சாவை இழுத்துச் சென்று மாங்காட்டுச் சாமியிடம் விட்டுச்செல்ல, அவன் 'நான் கடவுள் இல்லை; மேலே ஒருத்தன் இருக்கிறான்' என்று ருத்ராவிடம் அனுப்புகிறான்.மலையாளியைக் கொன்று இழுத்துச்சென்று அந்த நேரத்தில் அம்சாவை விடுவிக்கிறான் ருத்ரா. பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ருத்ரா காவலில் வைக்கப்பட்டு, தாண்டவன் பழிவாங்க வேண்டும் என்ற தூண்டுதலால் வழக்கிற்கும், ருத்ராவுக்கும் தொடர்பில்லை என்று விடுவிக்கப்படுகிறான். இதற்கிடையில் விற்பனைக்கு இணங்க மறுத்து வியாபாரத்தைக் கெடுத்த அம்சவள்ளியின் முகத்தைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி, அங்கஹீனப்படுத்துகிறான் தாண்டவன். வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவரும் ருத்ரா தாண்டவனுக்கு தண்டனை கொடுக்கிறான். தனக்கு இப்பிறவியிலிருந்து விடுபட வாய்ப்புக் கேட்கும் அம்சவள்ளியின் கழுத்தை அறுத்து, எரித்து விடுதலை தருகிற ருத்ரா, இறுதியில் தன் குருவை வந்தடைகிறான்.

முதல் பாதி வரை கதாபாத்திர அறிமுகம், பின்னர் யார் வில்லன் என்று அடையாளப்படுத்தும் போதே, கடைசியில் அவன் கொல்லப்படுவான் என்பது தெரிந்துவிடுகிறது.

'அஹம் பிரம்மாஸ்மி' என்கிறார்; சமஸ்கிருத மந்திரங்கள், பூஜைகள், மண்டையோட்டு மாலை, மனிதனைத் தின்னும் அகோரி வகை சாமியார்கள், இம்மையிலிருந்தும், மறுமையிலிருந்தும் விடுதலை கொடுப்பதாக சொல்கிறார்கள் என்றெல்லாம் நாம் குழம்ப வேண்டியதேயில்லை. இதெல்லாம் கதாநாயகனுக்கான பின்புலமே தவிர, கதை அதுவன்று.

தனது காலடியிலேயே கர்ணகொடூரமாகச் சிதைக்கப்பட்டு, இழிநிலையாக்கப்பட்டு, பிச்சையெடுக்க வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதது கடவுளா? நெற்றி நிறைய விபூதியுடன், கடவுள் படங்களுக்கு பக்கத்திலேயே அமர்ந்தபடி மனிதர்களை உருப்படிகளாகக் கணக்குப் பண்ணும் தாண்டவன் பக்தன்தானே? பழமும் தேங்காயும் தந்து வழிபட்டு தன் பாவக் கணக்கை பைசல் பண்ண ஏங்கி நிற்கும் முருகன் கதாபாத்திரத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்? இத்தனைக் கொடுமையையும் அனுபவிக்கும்படி தங்களைப் படைத்ததுதான் கருணையே வடிவான கடவுளா என்று அம்சவள்ளி கேட்கும் கேள்விக்கு என்ன பதில்? இவைதான் மக்கள் மனதில் பதியும் செய்திகள்.

கதாநாயகன், நாயகியை அகோரமாகக் காட்டியதுவும், அவர்களுக்கு காதல் பாடல் வைக்காததும் திரைத்துறையில் துணிச்சலான செய்திகள் என்றால், கதாநாயகியைவிட பிச்சையெடுப்போரைக் கண்காணிக்கும் திருநங்கையை அழகானவராகக் காட்டியதும், அவரை அக்கா என்று கதாநாயகியை அழைக்க வைத்ததும் உண்மையில் பாராட்டுக்குரியவை. பண்பாட்டிற்குரியவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி வேடமிட்டு பிச்சையெடுப்போரை வைத்து, காவல்துறை, சமூகம், இன்றைய சினிமா என்று சமூக விமர்சனம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு. அதே வேளையில் கடவுள் வேடமிட்டுப் பிச்சையெடுக்கும் முருகனின் உருப்படிகள் செய்யும் விமர்சனத்தின் கடவுள் உருவங்கள் காணாமல் போகின்றன. 'முக்குமுக்கென்று முக்கி மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க' என்று பாடுபவரைக் கிண்டலடிப்பதில் தொடங்கி, முருகன், சிவன், பார்வதி என்று கடவுளரைக் கிண்டலடிக்கும்போது அரங்கம் அதிர்கிறது.

"இங்க பாரு, இந்தப் பயல நம்பவே கூடாது, சின்ன வயசிலேயே உள்பாவாடையக் களவாண்டு போன பய" என்று கிருஷ்ணனை அறிமுகப்படுத்த, "அவன்தான் இன்னிக்கு இளம்பெண்களுக்கு ஹீரோ" என்று ஒரு குத்தல் வேறு!

"இவன வச்சு ஆட்சியையே புடிச்சிட்டாங்க" என்று இராமனை அறிமுகப்படுத்திவிட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு இலாகா என்று ஒதுக்கும் பட்டியலில் முதலில் அய்யனாருக்கு காவல் துறையும், பின்னர் குடிச்சே அழியட்டும் என்று டாஸ்மாக் துறையும் ஒதுக்கப்படுகிறது. இப்படி வெளிப்படையான நக்கல் தமிழ்த்திரையில் இதுவரை வந்ததேயில்லை எனும் அளவிற்கு, கடவுளரைக் கண்டந்துண்டமாக்கும் இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைத்தட்டல் பிளக்கிறது.

"எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டுதான் இருக்கான்" என்பவரிடம் ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் "பார்த்துகிட்டு புளுத்தினான்.... தேவடியாப் பய" என்று வெளிப்படையாகத் திட்டும்போது அரங்கத்திலிருந்து வரும் ஆதரவு, மக்கள் மனநிலையைக் காட்டுகிறது.

"சடை வச்சவனெல்லாம் சாமின்னு சொல்லிட்டு அலையுறான்"

"கல்லைக் கண்டாலும் சாமி; கை கால் இல்லைன்னாலும் சாமி; பேசினாலும் சாமி; பேசாட்டாலும் சாமி - எவன்டா சாமி"

"நாங்களே போலீசுக்குப் பயந்து சாமியார் வேசத்திலே திரியுறோம்"

"இவங்கள மாதிரிதான் ஒருத்தன் வடநாட்டில் இருந்துகிட்டு சி.எம்.மோட தலையைக் கொண்டு வான்னு சவால் விடுறான்" என்று கடவுள்களையும், சாமியார்களையும் சுளுக்கெடுக்கும் வசனங்கள் நறுக்கென்று ஆங்காங்கே தைக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்த்து, "அண்ணே நீங்க பாடுனது எல்லாம் ரசிச்சு ஓட்டைத்தானே போட்டான். ஒருத்தனும் திருந்தலையே" என்று சிவாஜி வேடமிட்டவர் கேட்பதில் தொடங்கி, "அம்பானின்னா யாருடா?" என்பவனிடம், "செல்போன் விக்கிறவங்க... உனக்குத் தெரியாது" என்று விளக்கம் சொல்லும் இடம்வரை ஒவ்வொரு வசனமும் அழுத்தம். வசனம் ஜெயமோகன் என்று தலைப்பில் வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். காரரா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்படைய வேண்டும். காசு கொடுத்தால் கடவுள் இல்லை; கடவுள் இல்லை என்று சுமங்கலி படத்தில் பாட்டெழுதவும் முடியும் என்று காட்டிய வாலியைப் போல ஜெய மோகனும் எழுத்து வியாபாரிதானே! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

"அநியாயத்தைத் தட்டிக்கேட்க மேலே இருந்தா ஒருத்தன் இறங்கி வருவான். அப்படிக் கேட்கிற நீதான் கடவுள்; அவதாரம்" என்று நந்தா படத்தில் பாலா வைத்த வசனத்தின் விரிவு தான் நான் கடவுள். மற்றபடி அஹம் பிரம்மாஸ்மியெல்லாம் ஒட்டிக்கொண்டவைதான். எவனைக் கூப்பிட்டாலும் கடைசியில் மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இறுதியில் அவர் சொல்வது!

கடுமையான சித்ரவதையால் சிதைக்கப்பட்ட அம்சவள்ளிக்கு கழுத்தையறுத்து ருத்ரா விடுதலை தருவது சரியா? - வாழவழியற்றோருக்கு மரணம்தான் பரிசா? என்னும் கேள்வி கருணைக்கொலை சரியா? தவறா? என்பதைப் போல சூழலைப் பொறுத்து விடை தரவேண்டிய கேள்வியாகும்.

படத்தின் வெற்றிக்கு அடிப்படையான அற்புத நடிப்பை வழங்கிய ஆர்யா, பூஜா, தண்டவனாக நடித்தவர், பிச்சைக்காரர்கள் வேடமேற்ற அனைத்து நடிகர்கள். இசையில் நம்மை படத்தோடு ஒன்றச் செய்த இளையராஜா அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பாலாவிடம் நாம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது; ஏனெனில் சமூகத்தில் இன்னும் அழுக்கு நிறைய இருக்கிறது.