Monday, October 16, 2006

பேஷிங் (Bashing)

வழக்கமான வாழ்க்கையை மேற்கொண்டு, அதையே கர்ம சிரத்தையாக நினைத்து வாழும் சமூகத்திற்கு, மாற்றத்தை வரவேற்கவோ புதிய சிந்தனையை ஆதரிக்கவோ செய்வது எளிமையான ஒன்றல்ல. ‘நமக்கேன் வம்பு’ என்ற எண்ணத்தில் நிலைத்து விட்ட சமூகம், தன்னைச் சுற்றிய அவலங்களையும், கோளாறுகளையும் கண்டு கொள்ளவே செய்யாது. அவ்வாறு எவரேனும் நினைப்பதையும் விரும்பாது.

இப்படிப்பட்ட மனங்களில் ‘புரட்சி’யல்ல; எதிர்ப்புக் குரல்கூட எழும்பாது.அதுவும் இயந்திரங்கள் தயாரித்து தயாரித்தே மனித இயந்திரமாகிவிட்ட சமூகமான ஜப்பான் போன்ற நாடுகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது.தன்னுள் ஒருவர் புதிய சிந்தனைகளோடு செயல்பட்டாலே, அவரிடமிருந்து அந்தச் சமூகம் விலகி நிற்கும்; அல்லது அவரை விலக்கி வைக்கும். தங்களுக்கான போராட்டமாகவே இருந்தாலும்கூட, வழக்கத்தை, அமைப்பை மாற்றும் பெருவெற்றியை நினைக்காமல், தொடக்கத்தில் ஏற்படும் சின்னத் தடங்கல்களைக் கண்டும் மாற்றத்தின் தடம் மிரண்டு போகும். பழைய நிலைமையே மேல் என்று தோன்றும்.
‘சூத்திரன் என்னும் இழிபெயரைச் சுமந்து கொண்டு இழிவான வாழ்க்கை வாழ்வதை விட, அந்த இழிவை ஒழிக்கும் போரில் சாவது மேல்’ என்று சொன்ன தந்தை பெரியாரைப் பின்பற்றும் சிந்தனையோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ கூட எவ்வளவு பேருக்கு இருந்தது? இவன் யார் அதைச் சொல்ல என்று வசை மாரியும், எதிர்ப்பும் கிளம்பியது சூத்திரர்களிடமிருந்தும்!
சாலையில் கண்ணெதிரே நடக்கும் அநீதி-யைத் தட்டிக் கேட்கவோ, சுட்டிக் காட்டவோ ஒரே ஒரு குரல் கொடுத்தால் கூட போதும், மாறிவிடும் என்ற நிலை இருந்தாலும், நூறு பேர் சூழ நிற்கும் இடத்தில் இருந்து சின்ன அசைவு கூட இருக்காது. அவ்வாறு குரல் எழுப்பினால், அந்தக் குரல் வந்த திசையில் நிற்பதற்குக் கூட துணிவு இருப்பதில்லை. இது மத்திய தர வர்க்கத்தின் ‘தன்பெண்டு, தன் பிள்ளை’ என்னும் பாதுகாப்பு நிலைப்பாடு அதையும் மீறி வரும் குரலுக்கு எதிராகக் கூட மொத்த கூட்டமும் திரும்பும் அபாயமுண்டு.
‘இரணியன்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் நிகழ்வது அதுதான். இதே போன்ற ஒரு உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு 2005-ல் ஜப்பானில் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ இயக்கிய படம்தான் பேஷிங்.
யூக்கோ, தற்கால ஜப்பானிய இளம்பெண். மத்திய கிழக்கு நாடுகளில் செவிலியர் பணிக்காகச் செல்கிறாள். பணியின்போது ஈராக்-கில் பணயக் கைதியாகக் கடத்தப்படுகிறாள். பின்னர் அரசுகளின் முயற்சியால் மீண்டு, ஜப்பான் வந்து சேர்ந்து விடுகிறாள். இந்தப் பின்னணியில் நடக்கிறது கதை.
ஈராக்கில் அத்தியாவசியப் பணியாற்றி, அந்த மக்களுடன் ஒன்றிப் பழகிவிட்ட யூக்கோ, ஜப்பான் திரும்பியதும் தன்னைச் சுற்றியுள்ளோராலேயே வெறுக்கப்படுகிறாள். ஒட்டு மொத்த ஜப்பான் சமுதாயமும் அவளை எதிரிபோல் பாவிக்கிறது. சைக்கிளில் ஊர் சுற்றும் பழக்கமுடையவள் யூக்கோ. அவள் செல்லும் சாலைகளில் யாராலாவது அவமதிக்கப்படுவாள். அவளது சைக்கிளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, ஒருவன் தாக்குவான், வீட்டிற்குத் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் வரும். பணியிலிருந்து விலக்கப்படுவாள்.
யூக்கோ பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரன், இவருக்கு மட்டும் பொருள் தரமாட்டான். சண்டையிட்டு வாங்கிச் சென்-றாலும், சாலையில் ஒருவன் அதைப் பிடுங்கி எறிவான். நன்கு பழகிய தோழி இவளை கண்டும் காணாமல் செல்வாள். இத்தனைக்கும் மேல், யூக்கோவில் காதலனும் அவளைப் பிரிவான்.யூக்கோவுக்கு இருக்கும் ஆதரவு அவளது தந்தையும் குடும்பமும்தான். தாயின் பணியிடத்திலும், தந்தையின் பணியிடத்திலும் அதிகார மட்டத்திலிருந்து தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு, ஒரு கட்டத்தில் தந்தை பணியிலிருந்து விரட்டப்படுகிறார். கட்டுக்கடங்காத மிரட்டல்களும், தொல்லைகளும் விரக்தியின் எல்லைக்கே யூக்கோவின் குடும்-பத்தைக் கொண்டு செல்கிறது.
இத்தனைக்கும் காரணம் வேறொன்றுமில்லை. ஜப்பானிய அரசினால் தடுக்கப்பட்டும் கூட மீறி, ஈராக் சென்று அங்கு மனித நேயப் பணியாற்றியதன் விளைவு. அங்கிருந்து கடத்தப்பட்டு, பணயக் கைதியானவுடன் யூக்கோவுக்குக் கிடைத்த உலக அறிமுகம் அவள் மீட்கப்பட்டு வந்தவுடன் அதற்கான எதிர்வினை மக்களிடமிருந்து கிளம்புகிறது. சாதாரண வாழ்க்கை வாழாமல் ‘உனக்கேன் இந்த வேலை’ என்னும் சிந்தனை, வெறுப்பின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. “ஜப்பான் அரசு தடை சொல்லியும் அதை மீறி ஈராக் செல்ல வேண்டிய அவசியமென்ன? ஈராக்குக்கு அவள் சென்றிடாவிடில், கடத்தப்பட நேர்ந்திருக்காது அல்லவா? அவளுக்கேன் இந்த வேலை?” இவைதான் அவர்களின் வெறுப்பிற்கான பிரதான காரணங்கள். மீண்டும் மீண்டும் வரும் இந்தக் கேள்விகளும், எதிர்ப்புகளும், யூக்கோவின் ஒரே ஆதரவான தந்தை-யையும் குடிகாரனாக்கி, அவளிடமிருந்து பிரித்து விடுகிறது.கோபமும், குரோதமும் நிறைந்த முகங்களால் சூழப்பட்ட இந்த வாழ்க்கை, யூக்கோவை ஒரு நிம்மதியான இடத்தை, தன்னை நேசிக்கும் மனிதர்களுடனான வாழ்வைத் தேட வைக்கிறது. மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் குழந்தைகளை நோக்கிச் செல்ல முடிவெடுக்கிறாள். தன் வாழ்வை நிறைவு செய்யும் இடத்தைத் தேடி, இனிப்புப் பண்டங்களோடு செல்கிறாள்.
இன்றும்கூட, காரணம் இல்லாமல் வெறுப்பை வளர்க்கும் விதைகள் காற்றில் கலக்கப்படுகின்றன. பார்த்தீனியத்தை விட நச்சு நிரம்பிய இந்த விதைகள் யாரையும் உடனேயே வெறுக்க வைத்து விடுகிறது. அன்பின் சுவடுகளை சின்னாபின்னப்படுத்தி ஆக்ரோஷ-மாக வளர்கிறது வெறுப்பு.இதன் உண்மை நிகழ்வைப் பற்றிய இணையப் பதிவு ஒன்றில், ‘கடத்தப்பட்ட பெண் திரும்பி வரவேண்டும் என்று ஜப்பானிய மக்கள் விரும்பியதையும், ஜப்பானிய அரசு அதற்கான முழு முயற்சியெடுத்து மீட்டு வந்ததையும் பற்றிக் கிடைக்கிறது. அதன் பிந்தைய ஊடகங்களின் செய்திகளாலும் விவாதங்களாலும் ‘இவளுக்கேன் இந்த வேலை’ என்ற சிந்தனை, வெறுப்பாக விதைக்கப்பட்டதையும் பற்றிக் குறிப்பிடுகிறார் அந்தப் பதிவர்.
இன ரீதியான ஒடுக்குதல் இல்லை; இது, குண ரீதியான ஒடுக்குதல். இதனைத் தன் கதையில் வெகு நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ‘மசாகிரோ கொபயாஷி’ ‘யூக்கோ’வாக நடித்திருக்கும் ‘உரேபே புசாகோ’, கொந்தளிக்கும் தன் பாத்திரத்தை உணர்ந்து வெளிப்-படுத்தியிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் ‘பிரான்ஸிஸ் ட்ருஃபாட்’டிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ‘மசாகிரோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

- சமா.இளவரசன்
நன்றி: உண்மை

Sunday, October 08, 2006

பல அவதாரமெடுத்த பன்னாட்டுக் கடவுள்

கடந்த மாதம் வரை தமிழ்ப்படம் பார்க்க திரையரங்கம் சென்றவர்களெல்லாம், சட்டையில் இரத்தக்கறை இல்லாமல் திரும்பி வந்திருக்க முடியாது. அவ்வளவு, வன்முறை...
திரையைக் கிழித்துக் கொண்டு வந்து நம் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு வன்முறை.வன்முறையாளர்கள், கூலிப்படையினர்தான் கதாநாயகப் பாத்திரங்கள். அவர்கள் நாயகர்களாகக் கூடாது என்பதல்ல.. வன்முறையாளர்களின் வாழ்க்-கைமீது அப்படியென்ன தமிழ் சினிமாக்காரர்களுக்கு திடீர் பாசம் என்று மக்களுக்குப் புரியவில்லை.“ஒன்றா, இரண்டா... எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்று கட்டபொம்மன் வசனம் பேசி-விடலாம். சந்து பொந்துகளில் இருந்தவர்களெல்லாம் கையில் அரிவாளையும், துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு தேடி வந்துவிட்டார்கள்.
சினிமா சுவரொட்டிகளெல்லாம் ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட நிறம், தொடர்ந்து இந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு. நம்மைச் சுற்றியும் நாலு பேர் துப்பாக்கியுடன் திரிவது போன்றே பிரமை ஏற்பட்டிருந்தது. தமிழகம் ரத்தச் சகதியில் மிதப்பதாகத்தான் தோன்றும் ‘என்ன இப்படியெல்லாம்’ என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் தமிழ் சினிமாக்காரர்களை ஊர்ந்து கூர்ந்து நோக்குபவர்களாயிருந்தால், தெரிந்திருக்கும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படம் இத்தளத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று. அப்படி இருந்தால் தான் எல்லோரின் மூளையிலும் ஒரே நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும்.
இவை Godfather படத்தின் தாக்கமோ என்று சந்தேகம் இருந்தது. (அதை ஏற்கனவே ‘சுயம்பு’ மணிரத்னம் ‘நாயகன்’ ஆக்கிவிட்டார். இந்தியில் ‘sarkar’ என்று வெளிவந்துவிட்டது).ஆனால் ஹாலிவுட் படங்களெல்லாம் தமிழ்ப் பேசிக் கொண்டு திரையில் வரத் தொடங்கியிருப்-பதால், அவற்றிலிருந்து... தாக்கம் (inspiration) பெற்றுப் படம் எடுப்பது தமிழ் திரையுலகிற்கு சிரமம். ஆகையால் உலக சினிமாக்களை நோக்கி இவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
Mission Impossible (ஹாலிவுட் படம்) பார்த்து ‘என் சுவாசக் காற்றே’யில் சில காட்சிகள் எடுத்தாலும் கண்டுபிடிக்க முடிந்து விடுகிற தமிழ் சினிமா ரசிகர்களால், ‘Ameros Perros-ன் (ஹாலிவுட் அல்லாத உலக சினிமா) திரைக்கதை வடிவத்தை மணிரத்னம் எடுத்துக் கொண்டு ‘ஆய்த எழுத்து’ படமெடுத்தால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் வெற்றி!
சென்னை, பாரிமுனை டிவிடி கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள் யாரென்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர்களின் பெயர் வரும். எந்தப் படம் எந்தப் படத்தின் தழுவல் என்ற ‘பட்டியல்’ அவர்களிடம் இருக்கும். மணிரத்னத்திற்குப் பிறகு, அவரைப் போலவே சினிமாவில் யாரிடமும் பணியாற்றாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சுயம்பு’ செல்வராகவன் வரை எந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொந்தமாகச் ‘சிந்தித்து’ எடுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
தெலுங்கிலிருந்து படத்தின் உரிமையை, உரிய பணம் கொடுத்து வாங்கி, படம் எடுக்கும் ஜெயம் கம்பெனியின் படங்களைவிட, நூறு ரூபாய்க்கு டிவிடி வாங்கி அப்படியே கதையை உருவி விடும் இந்தப் படைப்பாளிகள் எவ்விதத்தில் உயர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
சரி, இந்தத் தொடர் வன்முறைப் படங்களுக்கு மூலம் எது? பிரேசிலில் ரியோடி ஜெனராவில் எடுக்கப்பட்ட "City of God" “இந்தக் கடவுள் தான் பல அவதாரம் எடுத்து தமிழகத்தில் இத்தனைப் படங்களாக வெளி வந்திருக்கிறார்” என்றார் அவதாரம் ஒன்றின் தயாரிப்பாளர். நாளை, பட்டியல், தலைநகரம், டான் சேரா, தூத்துக்குடி, புதுப்பேட்டை, கொக்கி... இன்னும் எண்ணிலடங்கா படங்கள் வருவதற்கு இப்படமே அடிப்படை.‘சிட்டி ஆஃப் காட்’ நகரில் வாழும் நிழல் உலக மாந்தர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள், அவர்களின் பல்வேறு குழுக்களிடையே நிகழும் போட்டிகள், வன்முறைகள் என்று களேபரமாக நகர்கிறது படம்.
சிறுவர்கள் எப்படி குழுக்களுக்குள் இணைகிறார்கள், அடுத்தடுத்த பரம்பரை எப்படி உருவாகிறது என்பதை அந்த நாட்டின் சூழலுக்குள் பொருந்தி எடுக்கப்பட்ட படம். இதைத்தான் தமிழ்நாட்டு சூழலுக்குள் பொருத்தி எடுத்திருக்கிறார்கள், இத்தனைப் படங்களிலும்.
இவற்றிலெல்லாம் அப்படத்தின் அதிகபட்ச சாயல் அப்படியே தொனிப்பது செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’யில் தான். இதுவரை அவர் எடுத்த படங்களின் காட்சிகளும் நறுக்குகளும் கூட தாய்லாந்து படங்களின் சாயலில் இருப்பது இப்போது தெரிய வருகிறது. சம்சாரா, ஜான்டாரா போன்ற படங்களின் சிற்சில பதிவுகள் இவர் படங்களில் காணப்படுகிறது (இதற்குத்தான் அடிக்கடி பேங்காக் போய் வருகிறாரோ என்னவோ?)
தழுவல் இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகளை எல்லாம் விரும்பி வரவேற்கும் சமூகம், ஏன் தழுவல் படங்களைப் பார்த்து நகைக்கிறது என்று யோசித்தால், திருடி வளர்த்த பிள்ளையை என் பிள்ளை என்று உரிமை கொண்டாடினால் சமூகம் நகைக்கத்தானே செய்யும்?

- இளையமகன்
நன்றி: உண்மை

ஹயாத் (Hayat)

லகத் திரைப்படங்களில் ஈரானிய சினிமாக்களுக்கு தனி வரவேற்பு உண்டு. கட்டுப்பாடுகளுக்குள் இருந்து கிளர்ந்தெழும் எதற்குமே ஒரு மரியாதை இருக்கும். ஈரானியப் படங்கள் கவனிக்கப்பட்டது அப்படியாகத் தானிருந்திருக்கும். கடும் தணிக்கை நடைமுறைகள் அமலில் உள்ள நாடு ஈரான். படத்தை எடுத்தபிறகு தணிக்கை என்பது நம் நாட்டுமுறை. படத்தின் திரைக்கதைப் பிரதியை (script) தணிக்கை செய்யும் முறை ஈரானிலிருக்கிறது. இதனால் ஈரானிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் மதக் கருத்துகளுக்கு எதிராகக் கருதப் படுபவை வெளியாவதே இல்லை. எனவேதான் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மெக்மல் பஃப் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
“அரசின் கட்டுப்பாடுகளையும் விளக்கெண்ணெய் ஊற்றிய கண்களையும் தாண்டி, மதத்தை நையாண்டி செய்யும் படங்களும் ஈரானில் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டும் இருக்கிறது” என்று கூறும் ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, “When I became a woman” என்ற படத்தை மேற்கோள் காட்டினார். “தன் தம்பியுடன் விளையாடிக் கொண்டி ருக்கும் சிறுமியைக் கண்டிக்கிறாள் தாய். ஏன் விளையாடக் கூடாது என்று சிறுமி கேட்க, பெரிய பிள்ளையாயிட்டா விளையாடக் கூடாது என்று பதில் சொல்கிறாள் தாய்.“நான் எப்போதிலிருந்து பெரிய பிள்ளை” என்று சிறுமி கேட்கும் கேள்விக்கு, ‘இன்று பகல் 12 மணியிலிருந்து நீ பெரியபிள்ளை’ என்று தாய் சொல்ல, “இப்போது மணி 10:20, இன்னும் 1 மணி 40 நிமிடங்கள் இருக்கின்றதே அதுவரை நான் விளையாடுகிறேன்” என்று சொல்கிறாள் சிறுமி.பகல் 12 மணி என்பதைப் பார்க்க கையில் குச்சியுடன், உச்சிக்கு வரும் சூரியனிலிருந்து குச்சியின் நிழால் விழாத நேரம் வரை விளை யாட விரும்பும் குழந்தையின் மூலம் மதத்தின் கட்டுப்பாட்டை எள்ளி நகையாடி இருப்பார் இயக்குநர்” என்றார் திருநாவுக்கரசு.
ஈரானின் தணிக்கை விதிகளின்படி, பெண்க ளின் முகம், கைகள், பாதங்கள் தவிர மற்ற பாகங்களைத் திரையில் காட்டக்கூடாது. அதே போல், காதல் காட்சிகளும் தடைசெய்யப்படு கின்றன. இவற்றால், ஈரானிய இயக்குநர்கள் குழந்தைகளை நோக்கித் தங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்.
சென்ற ஆண்டு கோவா திரைப்பட விழாவில் ‘ஹயாத்’ என்ற ஈரானிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்கு நிறைந்த கூட்டத்தில் திரைக்கு வெகு அருகில் தரையில் அமர்ந்து... தலை தூக்கிப் பார்க்கும் கட்டாயம். அந்த வலியையும் மறக்க வைத்தது படத்தின் விறுவிறுப்பு. விறுவிறுப்பு என்றதும், துண்டாடப்பட்ட காட்சிகளோடு வில்லனை கதாநாயகன் துரத்தும் காட்சியோ என்று எண்ணிவிடவேண்டாம்.
ஹயாத், 12 வயது நிரம்பிய பள்ளி மாணவி. ஈரானின் அழகிய கிராமம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து, பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். தன் பள்ளியில் நடக்கப்போகும் தேர்வுக்காகத் தன்னை ஒரு மாதமாகத் தயார்படுத்தி வருகிறாள். தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ஹயாத்தின் தந்தைக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட, அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுகிறார். தாயும் உடன் சென்றுவிட, தனது குட்டித் தங்கையை (கைக்குழந்தை) பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஹயாத்துக்கு வருகிறது.
தனக்குத் தெரிந்தவர்களிடம் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு பள்ளிக்குச் செல்லத் துடித்தாலும், உதவும் நிலையில் யாரும் இல்லை. பால் கணக்கு சொல்ல வரும் பாட்டி, பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் தம்பி, குழந்தை, தேர்வு இத்தனை சூழல்களுக்கும் மத்தியில் ஹயாத் துடிக்கும் துடிப்பு நம்மையும் பற்றிக் கொள்கிறது.
யாரிடமும் ஒப்படைக்க முடியாத நிலையில், குழந்தையைத் தூங்க வைத்து வீட்டில் பூட்டிவிட்டு தேர்வுக்குச் செல்கிறாள் ஹயாத். வழியிலேயே ‘குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ’ என்ற அச்சத்தில் மீண்டும் ஓடிவந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். இதனிடையே, அக்காவுக்கு உதவுவதற்காக, பள்ளியிலிருந்து, தான் தன் கால் சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு வரும் தம்பியின் பாசம் பிஞ்சுகளின் வெள்ளை உள்ளத்தை படம் பிடிக்கிறது.
தேர்வுக்கு இன்னும் சில நொடிகள்... இதோ தொடங்கிவிட்டது. இன்னும் ஹயாத் வரவில்லை. ஹயாத்தின் தோழிகள் அவளின் வருகையை எதிர்நோக்குகிறார்கள். குழந்தையையும் பார்த்துக் கொள்ளவேண்டும். தேர்வும் எழுதவேண்டும். ஈரானிய பெண்குழந்தைகளின் கல்விக்கு அங்கு கொடுக்கப்படவேண்டிய அவசியம் படத்தில் உணர்த்தப்படுகிறது. முதிர்ந்த பெண்கள் கல்விக்கு அலட்சியம் காட்டுவதையும், வளரும் தலைமுறை அதை முக்கியமாகக் கருதுவதையும், பால் கணக்கு பாட்டி, ஊனமுற்ற தோழி என கதாபாத்திரங்கள் காட்டுகின்றன.
தேர்வு நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற நினைப்பே பதற்றம் தருவது. தேர்வு விடுமுறைக் காலங்களில் வரும் கனவுகளில் ‘தேர்வு தாமதம்’ பற்றி யவைதான்
அதிகமாக இருக்கும். இச்சூழலை எதிர்கொள்கிறாள் ஹயாத். தேர்வு அறைக்குப் பக்கத்தில் வாய்க்கால் அருகில் அமைந்த மரத்தில் தூளிகட்டி தொங்கவிட்டு அங்கிருந்து கயிறு இழுத்து தேர்வு அறைக்குள் தெரியாமல் நுழைத்து, சுற்றி வந்து பள்ளிக்குள் தாமதமாக நுழைந்து தேர்வெழுதத் தொடங்குகிறாள் ஹயாத்.குழந்தை அழாமல் இருக்க, தோழிகள் ஆசிரியருக்குத் தெரியாமல் கயிறைப் பிடித்து ஆட்டி தூங்க வைக்க முயல, அதையும் மீறி குழந்தை அழ, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. ஹயாத்தின் ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியரே கயிற்றைப் பற்றிக் கொண்டு ஆட்ட, ஆனந்தம் தவழ்கிறது குழந்தை முகத்தில்.
கதை நிகழும் நேரம் ஒன்றரை மணிக்கும் அதிகம் இருக்காது. அதை சுவாரசியமாகக் கொடுத்திருப்பவர் இயக்குநர் ‘கோலம்-ரெஸா-ராமேஸானி’. தனது முந்தையை நாடகத்தைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் ராமேஸானி. ஹயாத்தின் பரபரப்பை நம்மீது தொற்ற வைத்தவர் திரைக்கதை ஆசிரியர் ‘மொஜ்தாபா கோஷக் தாமன்’.சிறுமி ஹயாத் வேடத்தில் நடித்திருக்கும் ‘காஸலே பர்சாஃபர்’ மிகுந்த பாராட்டுக்குரியவர். படத் தொகுப்பாளர் ‘சையத் ஷாசவாரி’ன் பங்கு இப்படத்தில் முக்கியமானது.
படம் முடிந்து வெளிவந்ததும், இந்திய குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் இயக்குநரிடம் கேட்கப்பட்டது. “இப்படத்தை இந்திய மொழியில் வெளியிடுவீர்களா?” என்று. ஆனால், பார்ஸி மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை இந்தப்படம் பார்க்க! மொழி புரியாமலே நாம் ‘ஹயாத்’துடன் ஒன்றி விடுகிறோம். இந்திய கிராமங்களின் சூழலுக்கும் ஈரானிய கிராமங்களின் சூழலுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டில் இத்தகைய படங்கள் வெளிவருமா? மொழிமாற்றப் படங்களால் தங்கள் வியாபாரம் பாதிப்ப தாகக் கூறும் சினிமா வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் இத்தகைய சினிமாக்களை மக்களுக்குத் தருவார்களா? தரும்வரை மொழி மாற்றத்திற்கான தேவை குறையாது.
- சமா.இளவரசன்
நன்றி: உண்மை
www.unmaionline.com