Tuesday, July 08, 2008

பக்தியா? பகுத்தறிவா? (தசாவாதாரம் திரை விமர்சனம்)

திரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி ஒரு பக்கம். நடப்பதற்குக்கூட நவீன கருவிகள், கையில் செல்பேசி, பறக்கும் பைக் என விஞ்ஞானி கோவிந்த ராமசாமி ஒருபக்கம். என்ன சொல்ல வருகிறார் கமல்? படத்திற்கான விளம்பரம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிவிட்டது சந்தேகம். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் (படத்தைப் பார்க்காமலேயே) வைணவர்கள் மனம் புண்படும் படி இருக்கிறது என்று வழக்குப் போட்டு விட்டார்கள் வைகுண்டதாசர்கள். இப்படி சர்ச்சைகள் சூழப் பிறந்த தசாவதாரம் படத்தை பார்க்காமல் நாமும் அரைகுறைத் தனமாக பேசக்கூடாது என்பதால் முதலில் கதை...

கிருமி கண்ட சோழன் கோவிந்த ராமசாமியும், (விளக்கம் படத்தில் காண்க) சக விஞ்ஞானிகளும் கூடி விளையாடிய Bio Synthetic ஆயுத விளையாட்டு வினையாக மாற தொடங்கி, அதை பெரும் பணத்திற்கு விற்றுவிடத் துடித்துத் துரத்தும் வியாபாரக் கூட்டத்திடமிருந்து உலகைக் காக்க கி.க.சோ. எடுக்கும் முயற்சி தான் கதை.

இதில் எங்கே வந்தது சைவ, வைணவப் பிரச்சினை... ஆத்திக, நாத்திகப் பிரச்சினை... என்று யோசிப்பவர்கள் அடுத்துத் தாவ வேண்டியது திரைக்கதை மற்றும் வசனத்துக்கு! (படத்தில் பத்து வேடங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் கூடுதலாக எடுத்திருக்கும் அவதாரங்கள் கதை, திரைக்கதை, வசனம் இவை மூன்றும். எனவே சர்ச்சைகள் சகஜம் தான்.)
கமலின் குரலிலேயே சொல்ல வேண்டுமானால், "சரி அதற்கும் நான் சொல்கிற கதைக்கும் என்ன சம்பந்தம்? சக நிகழ்வுகளின் கோர்வை தான் உலக சரித்திரமே. மேற்கத்திய சிந்தனையில் Chaos Theory என்று ஓன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சக நிகழ்வுகள். - ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை படபடப்பில் தோன்றும் அதிர்விற்கும், ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம். என் கதை பூகம்பத்தில் தொடங்கி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பில் முடிந்தது."

படத்தில் வரும் பத்து கதாபாத்திரங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கேள்வி கேட்பவர்களுக்காக, இந்த பதிலை முன் கூட்டியே தெரிவித்துவிட்டார். தொடர்பிருக்க வேண்டும் என்று அவசிய மில்லை என்றாலும் திரைக்கதையில் அனைவரையும் இணைத்திருக்கிறார் உறுத்தாமல்.

கதையோட்டம், திரைக்கதை வேகம், புதுப்புது தொழில்நுட்ப முயற்சிகள், வியக்கவைக்கும் சுனாமி காட்சிகள், பிரம்மாண்டம், ஹாலிவுட் வணிகப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, ஒவ்வொரு கதாபத்திரத் திற்கும் தனித்தனி உடல்மொழி, பார்வை, குரல், இவர் கமல்தானா என மிரட்டும் ஒப்பனை, நேர்த்தியான இயக்கம், இத்தனைக்கும் மேலாக கமலின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு..! ஒரு நேர்த்தியான வணிகத் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களுடன் பாராட்ட, வியக்க, பிரமிக்க, மிரள... படத்தில் இன்னும் ஏராளம் உண்டு. எனவே படத்தின் சிறப்பு பார்த்து வியக்க வேண்டியது. அதை எடுத்துச் சொல்வது அவசியமற்றது. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் விசயத்துக்கு வருவோம்.

12-ஆம் நூற்றாண்டில் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் ஆணைக்கிணங்க தில்லையில் நடராஜருடன் ஒண்டுக் குடித்தனம் நடத்திய கோவிந்தராஜரைப் பெயர்த்தெடுத்து கடலில் கொண்டு வீச முயற்சி நடக்கிறது. பள்ளி கொண்ட பெருமாள் படுத்திருக்க வேண்டிய பாற்கடலுக்குத் தானே கொண்டு போகிறார்கள் என்று மகிழ்ச்சியடைய வேண்டிய விஷ்ணுபக்தர்களோ என்ன செய்வதெனத் தவிக்க, வீராவேசமாக வெகுண்டெழுந்து மன்னனின் ஆணைக்கு தலை வணங்க மறுத்து, ஓம் நமோ நாராயணா என்று எட்டெழுத்து மந்திரம் சொல்லி, கடவுளோடு கடலுக்குள் வீசப்படுகிறார் ரங்கராஜ நம்பி(கமல் 1).

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தன்னை உயிரியல் ஆயுதத்திற்குத் தயார்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முன்னேறிக் கொண்டிருக்க, அதில் பணியாற்றுகிறார் தமிழ்நாட்டு விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி(கமல் 2). 2004 டிசம்பர் 20-ஆம் நாள் அமெரிக்க அதிபர் புஷ்(கமல் 3) இந்த ஆய்விற்குக் கோடிக்கணக்கான டாலர் நிதி அறிவிக்கும் நேரத்தில், ஆய்விற்கு வைக்கப்பட்டிருக்கும் குரங்கு 'ஹனு' அந்த உயிரியல் ஆயுதத்தைக் கடித்துத் துடிதுடித்துச் சாவதைப் பார்த்த பிறகு இதைக் கொடியவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்று அரசிற்கு சொல்வதற்கான முயற்சியில் கோவிந்த் இருக்க, அதை தடுத்து அவரிடமிருந்து வயலைப் பிடுங்குவதற்காக முன்னாள் சி.அய்.ஏ உளவாளி கிரிஸ் பிளச்சரை அனுப்புகிறார்கள் வில்லன் கூட்டத்தினர். ஏதோ அர்னால்டு போன்ற இங்கிலீஷ்காரர் என்று நினைத்துவிடாதீர்கள் அவரும் கமலே(கமல் 4)!

தவறுதலாக அந்த வயல், பேக்கு நண்பன் ஷிட்ராம்.. இல்லை... சாய்ராம் அனுப்பும் கூரியர் பைகளோடு சிதம்பரத்தில் இருக்கும் கிருஷ்ண வேணி என்ற பார்ப்பனப் பாட்டி(கமல் 5)க்கு அனுப்பப்படுகிறது. அதைத் துரத்தி இந்தியா வரும் நாயகனை விசாரிக்க வரும் ரா உளவு அதிகாரி பல்ராம் நாயுடு(கமல் 6)விடமிருந்து, பாடகர் அவதார் சிங்கைப்(கமல் 7) பார்க்கப் போகும் சிங் காவலாளியின் அலட்சியத்தால் கிரிஸ் கமல் கடத்திக் கொண்டு போய் விடுகிறார். பாட்டிக்கு வந்து சேர்ந்த வயலை அவர் கோவிந்த ராஜ பெருமாள் சிலைக்குள் போட்டுவிட, குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டிய வயல் பெருமாளிடம் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என அதைத் தூக்கிக் கொண்டு அலைகிறார் கோவிந்த். பெருமாளை மீட்க அவரோடு ஒட்டிக் கொண்டு ஒடுகிறார் ஆண்டாள்(அசின்).

வழியில் அவர்கள் சந்திக்கும் வின்சென்ட் பூவராகன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்(கமல் 8), விபத்தில் மாட்டிக்கொள்ளும் உயரமான கலிபுல்லா(கமல் 9) மற்றும் வில்லன் கமலால் கொல்லப்பட்ட யூகாவின் அண்ணனாக வரும் ஜப்பானிய வீரக்கலைஞர்(கமல் 10), இவர்களின் துணையோடு அந்தக் கிருமி பரவாமல் தடுக்கத் தேவையான சோடியம் குளோரைடு(உப்பு) கொட்டிக்கிடக்கும் கடலை நோக்கி ஓடும் நாயகனை விடாமல் துரத்தும் வில்லன் கிரிஸ், உயிரியல் ஆயுதத்தைக்(வயலை) கடித்து, அது பரவத் தொடங்கும் நேரம் சுனாமி அலை எழுந்து, கடல் புகுந்து கடல்நீரில் மிகுந்திருக்கும் சோடியம் குளோரைடு காரணமாக செயலிழக்கிறது உயிரியல் ஆயுதம். மூன்றரை மணி நேரத் திரைக்கதையை இதற்கு மேல் சுருக்க முடியாது.

இன்று இந்துமதம் என்று ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் சைவ, வைணவ மதங்கள் தங்களுக்கிடையே எப்படி அடித்துக் கொண்டன என்பதை உரிய வரலாற்று ஆதாரத்தோடு விளக்குகிறபோது கமல் சொல்கிறார்: "ஏசுவும், அல்லாவும் இந்தியாவுக்குள், அதன் அரசியலுக்குள் புகாத நூற்றாண்டு. சிவனும்,விஷ்ணுவும் மோதி விளையாட வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுளரும் பக்தர்கள் வாயிலாக தமக்குள் மோதி கொண்ட நூற்றாண்டு. யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடித்து போனால் தொல்லை தான். இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு சைவ மதம் ரொம்பவும் பிடித்து போனது. மத நெறி, மத வெறி ஆனது."

அன்று மட்டுமல்ல இன்றும்கூட உலக சண்டைக்கு காரணம் மதவெறிதான் என்பதை செப்-11 தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா தயாரிக்கும் உயிரியல் ஆயுதத்திற்கு கோடி கோடியாக பணம் ஒதுக்கும் புஷ்-சைக் காட்டுகிறார் கமல். காட்டுவது மட்டுமல்ல... கடைசிக் காட்சியில் வசனமாக சொல்லவும் செய்கிறார்.(எல்லோர்க்கும் புரிய வேண்டாமா?) வரப் போகும் உயிரியல் ஆயுதம் மட்டுமல்ல. உலகெங்கும் பரவிக்கிடக்கும் எய்ட்ஸ் என்பதே இப்படி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்பதை யாரும் மறுக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்புகிறார்.

பகுத்தறிவாளர்களுக்கு மனிதநேயம்தான் இலக்கு என்பதை நாயகன் கோவிந்த் மூலம் காட்சிக்குக் காட்சி நிரூபிக்கிறார். நாயகன் பகுத்தறிவாளனாக இருப்பது கமல் படங்களில் இயல்பு. இவ்வளவு தீவிரமாக பேசுவது இப்படத்தின் சிறப்பு.ஜாதிப் பெயரோடு கேட்பதால் தன்னை ராம சாமி நாயக்கரின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் கமலைக் கண்டு அஞ்சி, அந்த ஈ.வெ.ராம சாமி நாயக்கரா? (சென்ஸார் தயவால் வசனம் கட்) என்று மிரண்டுபோகும் அசினிடம், எங்கப்பா பெரியார்லாம் கிடையாதுங்க.. சிறியார்... (இசைக்)கலைஞர் என்று பார்வையாளர்களுக்கு பெரியாரை நினைவூட்டுகிறார். (பெரியாரென்றால் பெருமாளுக்கும் பயம்தானோ?) நீங்க தொடப் பிடாது.. தீட்டு என்று பெருமாளைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்குள் நுழையும் அசினிடம், சரி, உங்க பெருமாளுக்கு மனுசங்களைவிட, அந்த இடம்தான் பிடிக்கும்னா போங்க என்று நக்கலடிக்கும் கமலிடம், அய்யோ.. சவ்ச்சாலயம் என்று கழிவறையை சமஸ்கிருதத்தில் சொல்லி ஒதுங்கு கிறார் அசின். சரி அதுவும் ஆலயம்தானே விடுங்க!என்று எள்ளிநகையாடுகிறார்- இதுதான் கமல்.

கடவுள்தான் முக்கியம் என்று காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ ஏன் விபத்தில் அடிபட்டவர்களைப் பற்றிக்கூட கவலைப்படாத பக்தை ஆண்டாளையும், எனக்கு மனிதன் தான் முக்கியம் என்று ஆபத்துதவிக்கு செல்லும் பகுத்தறி வாளர் கோவிந்த் கமலையும் வேறுபடுத்திக்காட்டி கடவுளை மற, மனிதனை நினை என்று பெரியார் சொன்னதை மக்கள் மனதில் பதிய வைக்கிறார். கடைசி வரை கடவுள் சிலையயத் தூக்கிக் கொண்டு திரியும் ஆண்டாளால்தான் பிரச்சினை முடியாமல் வலுக்கிறது என்று உணரும் மக்களுக்கு அந்த கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பு ஏற்பட்டு, அந்த சிலையை தூக்கி போட்டுத்தான் தொலையேன் என்று நினைக்க வைப்பதுதான் திரைக்கதை ஆசிரியர் கமல், இயக்குநர் ரவிக்குமார், நடிகை அசின் ஆகியோரின் வெற்றி.

மடம்னா தப்பு நடக்காதா? என்று கேட்கும் அதிகாரி பல்ராமிடம் சார், உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா? என்று மட நிர்வாகி கேட்க, மடோனா தானே! என்று வசனம் பேச வைத்த துணிச்சலுக்கு வசனஎழுத்தாளர் கமலைப் பாராட்ட வேண்டும்.எத்தனை.. எத்தனை... வசனங்கள்.. சொல்லி மாளாது. நுணுக்கமாக, மிக நுணுக்கமாக... என்று வழக்கமான தனது பாணியில் மட்டுமல்லாமல் மிகவும் வெளிப்படையாக வந்திருக்கும் கமலுக்கு வரவேற்பும் நன்றியும்.தீவிரவாதி என்றதுமே அல்-கொயிதாவா? லஷ்கர்-ஈ-- தொய்பாவா? என்று கேள்வி கேட்கும் நமது உளவு அதிகாரிகளையும் விட்டுவைக்கவில்லை. மெக்கா பாத்து நமாஸ் பண்ற எல்லாரையும் தீவிரவாதியா நினைக்காதீங்க சார் என்று செவிட்டிலும் அறைகிறார். அப்படி பல்ராம்நாயுடு அனைவரையும் விசாரிப்பதற்காக, பள்ளிவாசலுக்குள் ஒன்று சேர்க்க, அதுவே அவர்கள் சுனாமி யிலிருந்து தப்பவும் வாய்ப்பாகிறது. எல்லாம் அல்லா கருணை என்று அவர்கள் மேலே பார்க்க, ஹெலிகாப்டரில் பறக்கிறார் அனைவரையும் மசூதிக்குள் அடைத்த பல்ராம் நாயுடு.

பெருமாளுக்கு சிதம்பரம்தான் தோதுப்படும் என்று சண்டித்தனம் செய்யும் ஆண்டாளிடம் தூணிலயும் துரும்பிலயும் இருக்கிற உன் கடவுள் பாண்டிச்சேரியில இருக்க மாட்டாரா?என்பதில் ஒரு நறுக்.மெய்ஞ்ஞானமோ குற்றமற்றது என்பதே ஆன்மீக குற்றவாளிகளின் முதல் வாதம் என்று ஆரம்பத்திலேயே அறைந்து விடுகிறார். நான் எப்ப ரத்தத்தின் ரத்தம் ஆனேன்? என்று புரியாமல் கமல் விழிக்கும் காட்சி, அ.தி.மு.க.வில் கமல் கரைந்துவிட்டார் என்று 2006 தேர்தல் சமயத்தில் எழுப்பப்பட்ட பொய்த் தகவல்களைப் பார்த்தும் சிரிக்கிறார். (ஒருவேளை வசனம் எழுதியபோது வந்த பிரச்சினையாக இருக்கும்போல!)

மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு முக்கிய வேடம், வின்சென்ட் பூவராகன். என்ன உடல்மொழி? அப்பப்பா.. அவர் மூலம் சொல்லப்படும் கருத்தும் எத்தகையது? ஜாதியால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துத் தலைவனின் உலக அக்கறையை எடுத்துக் காட்டிய விதம் எத்தனை அருமை.. இந்தக் கதாபாத்திரம் வியப்பதற்கல்ல... விழிகள் கனக்க..! உங்கள்ல எவனுக்குடா படிக்கத் தெரியும்? என்று ஜாதித் திமிரெடுத்த மணல் கொள்ளையன் கேட்கும் போது, எங்கடா படிக்க விட்டீங்க.. ஆனா இன்றைக்கு எங்கள்ல தேடினாலும் படிக்காதவன் கிடைக்கமாட்டான்னு சொல்லும்போது நமக்கு வரலாற்றின் மாற்றமும், அதற்குக் காரணமான இயக்கங்களும் நினைவுக்கு வராமல் போகுமா? அப்போது அப்ப நான்.. என்று பூவராகன் சொல்ல, பதில் சொல்ல முடியாமல் விம்மி, அண்ணே.. நீங்க படிக்காத மேதைண்ணே! என்று சொல்கையில் நமக்கு கண்களில் நீர் முட்டுகிறது. கடைசி சுனாமியில், தன்னைக் கொல்ல நினைத்தவனின் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மடியும் அவரின் மனிதநேயமும், அவரை மடியில் போட்டுக் கொண்டு கதறும் மனநிலை சரியில்லாத கிருஷ்ணவேணி பாட்டியிடம், நீங்க தீட்டுப் பட்டுக்காதீங்கோ என்று ஒரு பார்ப்பனர் சொல்ல, போடா, ஜாதிப் பிசாசே!... இவன்வெளியில தாண்டா கருப்பு. உள்ள வெள்ளைடா என்று அழும் காட்சி ஜாதி வெறியர்களுக்கு சரியான சவுக்கடி!

சுனாமி வந்து விஷக் கிருமி பரவாமல் தடுத்து விட்டார் கடவுள் என்று அசின் பெருமைப்படும் போது, கேமரா பின்னால் செத்துக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பிணங்களைக் காட்டுகிறது. (அம்பாளோட கருணையில ஒரு கண்ணு மாத் திரம் போயி...எம்புள்ள பொழைச்சுக்கிட்டான் என்று பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது) அந்த சப்பைக்கட்டுக்கு கமல் தரும் பதில் தான் கடைசியில் மக்கள் மத்தியில் சிந்தனையை எழுப்புகிறது. எந்த ஒரு பேரழிவின் போதும், கடவுள் ஏதாவதொரு காரணத்திற்காகத்தான் இதைச் செய்கிறார் என்று பக்தர்களின் வாதத்திற்கு பகுத்தறிவாளரான வாதம் கமல் வைத்திருப்பது.
"இப்ப நாங்க கண்டுபிடிக்கப்போற கிருமிக்காகத் தான் உன் கடவுள் 80 லட்சம் வருசத்துக்கு முன்னாடி கடலுக்கு அடியில உள்ள டெக்டானிக் பிளேட்டை சரியா அடுக்காம விட்டடரா? 2004-ல சுனாமி வந்து எங்களைக் காப்பாத்துறதுக்காக? அப்படி யோசிக்கிர கடவுள் எங்களுக்கு இந்த மாதிரி கொடூரமான அய்டியாவே வராமத் தடுத்திருக்கலாமே! இல்லை புஷ் மாதிரி ஆளுங்க இந்த மாதிரி ஆய்வுக்கு பணம் கொடுக்காமத் தடுத்திருக்கலாமே.. உன் பாட்டியும் சரி, கடவுளும் சரி, Just not there."
"கடவுள் இல்லைன்னு நான் எங்க சொல்றேன்.. இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்" என்றும் பதில் தந்து வாயடைக்கிறார் கமல்.

இறுதியில், உலகெங்கும் பகுத்தறிவாளர்களாக மாறும் வரையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் விவாதங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கும். அதுவரையில் எந்தக் கட்சி மக்களுக்கு நன்மைதருகிறதோ அதை ஏற்கும் பகுத்தறிவே தனக்குண்டு என்று தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்திவிடுகிறார்.கடலில் போட்டால் மூழ்கும், சுனாமி வந்து வந்து திருப்பிப் போட்டால் தரையில் கிடக்கும், தூக்கிய இடத்துக்கெல்லாம் தொற்றிக் கொள்ளும், மண்ணில் புதைத்தால் புதையும், மணலோடு சேர்த்து அள்ளும்போது சேர்ந்துகொள்ளூம் அதே போல் மேடையில் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துவைத்தால் அதுபாட்டுக்கு அடைபட்டுக் கிடக்கும் சிலைதாண்டா அது! என்பதை இத்தனை களேபரத்துக்கும் நடுவில் காட்டிக் கொண்டே வருகிறார்கள். காட்சியும் வசனங்களும் நிரூபிப்பது இதையே! ரங்கராஜ நம்பி, அத்தனை பக்தியோடு இருக்க வேண்டியதும், பெருமாளை புகழ்ந்தேத் தும் பாடல்களும், பெருமாளுக்காக உருகும் அசினின் பக்தியும்(பக்தி என்பதை விட ஈகோவும்) அந்தந்த கதாபாத்திரங்களுக்கு செய்ய வேண்டிய நியாயங்கள். அவை சரியாக சொல்லப்பட்டதால் தான் கருத்து சரியாக சென்றிருக்கிறது. பாத்திரங்களுக்கு கூடிய மட்டும் விஷ்ணு அவதாரங்களின் பெயர்களை வைத்திருக்கும் கமல், விஷ்ணுவே எடுக்காத தாழ்த்தப்பட்ட அவதாரத்தையும் எடுக்க வைத்திருக்கிறார். அவருக்கும்வைத்திருக்கும் பெயரும் பூவராகன் என்றிருக்கிறது. வராகம் (வராக அவதாரம்)என்றால் பன்றி; எனவே இழிவுபடுத்திவிட்டார் என்று சிலர் சொல்லும் வாதம் ஏற்பதாயில்லை. ஏனெனில் இழிவான பெயர்களைச் சுமக்கச் சொல்லிதானே ஆரியம் நம்மைக் கட்டாயப்படுத்தியது. அதை வெளிக்காட்டுவதுதான் படிக்காத இக்கதா பாத்திரமும்!

12-ஆம் நூற்றாண்டில் காட்டப்படும் ரங்கராஜ நம்பியின் மனைவியாக வரும் அசினும், அவரின் தந்தையாக வருபவரும், 21-ஆம் நூற்றாண்டில் நடக்கும் நிகழ் காலக் கதையிலும் கமலின் ஜோடியாகவும், ஜோடியின் தந்தையாகவும் வருவதும், கடைசியில் எந்த பெருமாள் சிலையால் பிரிந்தார்களோ, அதே கோவிந்தராஜ பெருமாள் சிலை அருகில் இணைவதும் திரைக்கதையின் சுவைக்காக சேர்க்கப்பட்டிருப்பினும் மறுபிறப்பு போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதே... இது முரணாகத் தோன்றவில்லையா? மேலும் நம்மை உறுத்துவது, பெருமாளுக்கு கொடுக்கப்படும் பில்ட்-அப்பும், வில்லனிடமிருந்து நாயகன் தப்பிச் செல்ல உதவும் வாகனத்தில் உள்ள ஸ்ரீராமஜெயம் அவ்வளவு வலிந்து காட்டப்படுதும்தான்.

ஆனாலும் ஆனந்த விகடனின் அடிமன உருட்டலும், கல்கியின் குமுறலுமே படம் சொல்வதும் சென்று சேர்த்திருப்பதும் பகுத்தறிவு சிந்தனையைத் தான் என்பதை பறைசாற்றும். நான் சொல்வதை சொல்கிறேன்.. உங்களுக்கு சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை போலவே கமலும் கூறியிருக்கிறார். அவர் எண்ணிய படி பகுத்தறிவு சரியாகவே சென்று சேர்ந்திருக்கிறது என்பதே கண்கூடு.கோடிக் கணக்கில் பணத்தைப் போடுகிறோம், அதில் கருத்தையா சொல்லிக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கும் வியாபாரிகளுக்கு மத்தியில், வியாபார நுணுக்கமும், கலை நேர்த்தியும், சமூகம் மீதான அக்கறையும் கொண்ட தசாவதாரம் போன்ற படங்களை கமல் மட்டுமல்ல... இன்னும் நிறைய பேர் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உந்து சக்திதான் இப்படத்தின் வெற்றி!
- இளையமகன்
நன்றி: உண்மை ஜூலை1-15, 2008

17 comments:

andygarcia said...

great analysis!!!!!!

ஜோ/Joe said...

அருமை..அருமை!

புருனோ Bruno said...

அருமையாண விமர்சணம்

லக்கிலுக் said...

நல்ல விமர்சனத்துக்கும், விமர்சனத்தை மீறிய விளக்கங்களுக்கும் நன்றி தோழர்.

சமா.இளவரசன் said...

நன்றி தோழர் 007, ஜோ, புருனோ, லக்கிலுக் ஆகியோருக்கு!

முரளிகண்ணன் said...

அருமை இளவரசரே

வந்தியத்தேவன் said...

அருமையான விமர்சனம். எனக்கு அழகிய சிங்கர் மட்டும் இன்னமும் புரியவில்லை யாராவது விளக்கம் கொடுங்கள். அத்துடன் கல்கி இந்தப்படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதியிருக்கிறது என்பதையும் அறியத்தாருங்கள். மைலாப்பூரைத்தாண்டாத கல்கி, துக்ளக் போன்றவற்றை நான் படிப்பதில்லை.

வெங்கட்ராமன் said...

சிறப்பான ஒரு படத்திற்கு, சிறப்பான விமர்சனம்.

பிச்சைப்பாத்திரம் said...

உங்களுக்கு தேவையானதை மாத்திரம் எடுத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது. :-)

puduvaisiva said...

great analysis!!!!!!


puduvai siva

மருதநாயகம் said...

கலக்கல்...

Anonymous said...

Excellent Review.

சமா.இளவரசன் said...

நன்றி தோழர் முரளி கண்ணன், வந்தியத் தேவன், சுரேஷ் கண்ணன்,வெங்அட்ராமன், மருதநாயகம், சிவா, கிரி!

Anonymous said...

சுரேஷ் கண்ணன் சொன்னது போல் "உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது" என்றே சொல்லத் தோன்றுகிறது.

"கடவுள் இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது. ஆனால் மறுமுனையில் நம்மை சுற்றி நிகழும் சம்பவங்கள் அனைத்தும் 'கடவுள் இருக்கிறார்' என்பதை நமக்கு நம்பவைக்கவே முயலுகின்றன;" என்பதையே கமல் சூசகமாக சொல்ல வருகிறார் போலும்.

மேலெழுந்தவாரியாக வரும் ("பகுத்தறிவு") வசனங்களை விட திரைக்கதை, சம்பவத்தொகுதி மற்றும் கதையோட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை வைணவ புராணவோட்டம் மற்றும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவை புலப்படும்.

சனாதன தத்துவங்களைப் போல் இப்படத்திலும் சொல்லப்பட்டவைகளைவிட, சொல்லாமல் சொல்லப்பட்டவைகள் நிறைய சொல்கின்றன!!!

இது படத்தின் நிலைபாடு.

ஆனால் விஞ்ஞானி ராமசாமி (கதாநாயகன்) நாத்தீகனாகவே சித்தரிக்கப்படுகிறார் போலும்! சூசகமாக தப்பிவிட்டார் கமல்!!

அவரின் சிந்தனைகளுக்கு நன்றி.

butterfly Surya said...

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.
சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்

10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..

butterfly Surya said...

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.
வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.
சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்

10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..

Anonymous said...

parpanap paatti nnu sonnathu mathiri paraya samugath thalaivar nnu solli irukkallame