Thursday, June 11, 2009

ஸ்லம்டாக் மில்லியனர்


ஊர் உலகமெல்லாம் பேசப்படும் பெயராகியிருக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர். கோல்டன் க்ளோப், பாஃப்டா என்று விருதுகளை அள்ளிக் குவித்த ரஹ்மான் அமெரிக்-காவின் உச்ச விருதான ஆஸ்கார் விருதுகளையும் இரு கைகளில் சுமந்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் ஆஸ்கார் கனவு ஒரு தமிழனால் நனவாகியிருக்கிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இருந்த அதே நேரத்தில் எதிர்ப்புகளும் இருந்தன. அவை இப்படத்தின் புகழை வைத்து தாங்கள் புகழடைய நினைத்தவர்களின் செயலாகவும், புகழ் பெற்ற நகரின் பெருமையைக் குலைக்கிறது என்ற புலம்பலாகவும் இருந்தது.
படத்தின் பெயரை மட்டும் கேட்டுவிட்டு, படம் என்ன சொல்ல வருகிறது என்றே தெரிந்து கொள்ளாமல் கூச்சலிடும் சிலரை நாம் கண்டிருக்கிறோம். ஹேராம் படத்துக்கு காந்தி எதிர்ப்பு என்றும், சண்டியர் படத்துக்கு ஜாதியப் பார்வை என்றும் படப்பிடிப்பு நடக்கும்போதே எழுந்த எதிர்ப்புகளைப் போலத்தான் இப்படத்துக்கும் தலைப்பினால் எதிர்ப்பு வந்தது. ஸ்லம்டாக் - சேரி நாய் என்று இழிவுபடுத்தியிருப்பதாக எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்லம் டாக் என்று இழிவாய்ப் பேசுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவது இழிவாகாது.

சற்சூத்ராய நமஹ என்று பார்ப்பனர்கள் சொன்னதற்கும், சூத்திர மக்களே சுரணை பெறுங்கள்! என்று நாம் சொல்வதற்கும் வேறுபாடு உண்டு.

கதை இதுதான்! விமான நிலையத்தின் ஓடுதளத்தில் விளையாடும்போது சேரி நாய்களே என்று போலீசாரால் விரட்டப்படும் சேரிச் சிறுவர்களில் ஒருவன், வளர்ந்து இளைஞனானபின் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலைச் சொல்லி வெற்றியின் விளம்பில் கோடீஸ்வரனாக நிற்கும்போதும், உனக்கெப்படி பதில் தெரியும்? என்று அடித்து நைத்து விசாரிக்கப்-படுகிற நிலையைத்தான் படம் பிடிக்கிறது ஸ்லம்டாக் மில்லியனர்.

கால் சென்டரில் தேநீர் கொடுக்கும் இளைஞனான ஜமால் எப்படி பலரும் வெல்லமுடியாத க்ரோர்பதி நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியும்? அவன் ஏதோ சூது செய்கிறான் என்று சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையிடம் அவனை ஒப்படைத்து முறைப்படி(!) விசாரணை நடக்கிறது. இந்தியாவின் ஆயிரம் ரூபாய் நோட்டு எந்த வண்ணத்திலிருக்கும் என்பது கூடத் தெரியாத ஓர் இளைஞன், எப்படி அமெரிக்காவின் 100 டாலர் நோட்டில் இருக்கும் படம் பெஞ்சமின் பிராங்க்ளின் என்று சரியாகச் சொல்ல முடியும்? இப்படி எழும் கேள்விகளோடு விசாரிக்கும் காவல் அதிகாரியிடம், தனது ஒவ்வொரு பதிலுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் தன் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறான் ஜமால். இதனூடாகப் பயணிக்கும் திரைக்கதை, ஜமாலின் சிறுவயது தொடங்கி, நிகழ்காலம் வரையிலான அவனது வாழ்வின் வழியாக முன்பின்னாக மாறி மாறிக் குழப்பமின்றி நுழைந்து செல்கிறது. விகாஸ் ஸ்வரூப் எழுதிய க்யூ அண்ட் ஏ என்ற நாவலைத் திரைக்கதையாக்கிய சிமன், படத்தை இயக்கிய டேனி போய்ல் இருவரும் மும்பை மாநகரத்தின் சேரிப் பகுதிகளையும், அம்மக்களின் வாழ்க்கையையும், ஆர்ப்பாட்ட-மின்றியும் வலிந்து திணிக்காமலும் எடுத்துக்-காட்டியிருக்கிறார்கள். (இருவருக்கும் ஆஸ்கர் கிடைத்திருப்பது கூடுதல் செய்தி).

ராமனின் வலதுகையில் என்ன ஆயுதம் இருக்கும்? - இஸ்லாமியனான ஜமாலிடம் இக்கேள்வி கேட்கப்படுகிறது. அவனது நினைவலைகள் அழைத்துச் செல்லும் இடம் - அவன் வாழ்ந்த சேரிப்பகுதி. தன்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த தன் அம்மா, இந்து பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு தன்னையும், அண்ண-னையும் விரைந்து செல்லுமாறு அனுப்பிய காட்சி அவன் முன் விரிகிறது. ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தாயை விட்டுவிட்டு, தப்பியோடும்போது, சேரியின் சந்து ஒன்றில் ராமன் வேடம் தரித்து நிற்கும் ஒரு குழந்தையின் கையில் வில்லும் அம்பும் இருந்ததைக் கண்ட நினைவு வருகிறது. அந்தக் கேள்விக்கான சரியான பதிலாக அது இருக்கிறது.

சூர்தாஸின் தர்ஷன் தோ கன்ஸ்யாம் பாடல் குறித்த கேள்வி சேரிச் சிறுவர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் கூட்டம் பற்றிய நினைவையும், முதல் வணிகத் துப்பாக்கி குறித்த கேள்வி- தன் தோழி லதிகாவை விபச்சார விடுதியிலிருந்து மீட்கும் காட்சியையும், 100 டாலர் நோட்டு பற்றிய கேள்வி- குருடாக்கப்பட்டு பிச்சைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பற்றிய காட்சியையும் நினைவூட்டுகிறது.


இப்படியே போட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் விவரிக்கும் காட்சிகள் காவல் அதிகாரியைக் கரைத்துவிடுகிறது. கடைசிக் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ள அவன் எடுக்கும் முயற்சி தொலைபேசியைப் பயன்படுத்துவது தன் அண்ணனுக்காக அவன் விடுக்கும் அழைப்பு, காதலி லதிகாவை அவன் சேர வழியமைத்துத் தருகிறது. வெற்றியைப் பற்றி கவலையில்-லாமல், மனப்போக்கில் அவன் சொல்லும் பதிலே வெற்றியைத் தந்து 2 கோடி பரிசை வெல்லச் செய்கிறது.இதே வேளையில் தமிழில் வந்திருக்கும் நான் கடவுள் படத்தின் மய்யக் கருத்தும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மக்கள் திரளைப் பற்றியதாக இருப்பதையும், சமூகத்தின் இருண்ட பக்கங்களின் மேல் கொஞ்சம் வெளிச்-சமிட்டுக் காட்டுவதையும் ஒரு தற்செயலான ஒற்றுமையாகக் காண முடிகிறது.

படிப்பறிவு அற்றவனாக இருந்தாலும், அவன் வாழ்வில் கண்டதும், கேட்டதும்தான் அவனுக்கு பதில்தர உதவுகின்றன. கேள்வி அறிவுதான் அவனை வெற்றிபெற வைக்கிறது. இதை அனைவர் மதியிலும் பதிய வைக்கிறார் இயக்குநர்.

அனல் பறக்கும் ஒரு திரைக்கதையில் இந்தியாவின் அவலத்தைப் பதிவு செய்ததுதான் ஸ்லம் டாக் மில்லியனரின் வெற்றி. இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கும் படத்திற்கும் நிறைய தொடர்பு.

அவரையொத்த கதாபாத்திரம் தான் அனில்கபூர் ஏற்றிருப்பது. அது மட்டுமல்லாமல் ஷன்ஷீர் படத்தின் நாயகன் யாரென்ற கேள்விக்குப் பதிலும் அவரே! அதைப்பற்றி ஜமால் யோசிக்கும் போது அமிதாப்பிடம் கையொப்பம் வாங்கிய நினைவு வருகிறது. மலம் கழித்துக் கொண்டிருக்கும் போது சேரிப் பகுதியில் நடக்கும் படப்-பிடிப்புக்கு வந்திருக்கும் அமிதாப்பைப் பார்ப்பதற்காக அவசர அவசரமாக மலக் குவியலுக்குள் விழுந்து எழுந்து, அதனுடனே ஓடிச்சென்று அமிதாப்பச்சனிடம் கையொப்பம் வாங்கும் காட்சி, அம்மக்களின் வாழ்க்கை எத்தகையது என்பதைக் கொஞ்சமும் மறைவின்றி நமக்குப் புரிய வைக்கிறது.

அமிதாப்பின் தொடர்பு அத்தோடு முடியவில்லை. மும்பையில் காட்டுவதற்கு இவர்களுக்கு இடமாயில்லை. முன்னேறிய நாடுகளுடன் நாம் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவை ஏழ்மை தலைவிரித்தாடும் ஒரு மூன்றாம்தர நாடாகக் காட்டியிருக்கிறார்கள் என்று படம் குறித்த தன் அதிருப்தியை வெளியிட்டியிருக்கிறார். அதுவும் ஒரு வெள்ளைக்காரரல்லவா உரித்துக் காட்டிவிட்டார் - என்ன செய்வது? இது அமிதாப்பின் கருத்து மட்டுமல்ல. பளபளப்புச் சாலைகள், பளிங்குக் கட்டடங்கள் என பன்னாட்டு மக்கள் உலவும் வீதிகளையே உலகுக்குக் காட்டி பெருமை கொள்ள நினைக்கும் உலகம் இருட்டானதென்று கண்ணை மூடிக் கொண்டு பூனைகளாய்த் திரியும் மக்களின் கருத்தாகும்.

இந்நிலையில்தான் நமக்கும் ஜமாலைப் போல பழைய நினைவு ஒன்று வருகிறது. இதே குரல் சரியாக 82 ஆண்டுகளுக்கு முன்பும் ஒலித்தது. இது சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை என்று காந்தியார் உள்ளிட்ட அனைத்து தேசியவாதிகளாலும் முத்திரை குத்தப்பட்ட மிஸ்மேயோவின் மதர் இந்தியா வுக்கெதிரான குரல்தான் அது.

ஜாதிக் கொடுமை, பெண்ணடிமை, கோயில்களின் இழிநிலை, குழந்தைத் திருமணம் என உண்மை இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டிய மேயோமீது பாய்ந்தவர்களைக் கடிந்து கொண்ட பெரியார், சாக்கடை இருப்பதால் தானே சாக்கடை ஆய்வாளரின் அறிக்கை வருகிறது. சாக்கடையைச் சரி செய்யாமல் ஆய்வாளரை நொந்து கொள்வதா? என எள்ளி நகையாடினார். கோவை அய்யாமுத்து எழுதி உண்மை விளக்கப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மேயோ கூற்று மெய்யா? பொய்யா? நூலில் இடம் பெற்றிருக்கும் தந்தை பெரியாரின் முகவுரை - ஸ்லம் டாக் மில்லியனருக்கும் எப்படிப் பொருந்துகிறது பாருங்கள். அன்றைய அமிதாப்களின் ஆதங்கத்திற்கு பதில் இதோ பெரியார் தருகிறார்:

சாதாரணமாக ஒரு இந்திய மனிதன் மிஸ் மேயோ புத்தகத்தில் இந்தியர்களைப்பற்றிக் கூறியிருக்கும் குறைகளை அடியோடு மறைத்தும், மறுத்துப் பேசியும், அவ்வம்மையை சில இழிமொழிகளால் வைதும்விட்டு சும்மா இருந்து விடுவதினால் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்த வீரனாகிவிடுவானா? அல்லது அப்புத்தகத்தில் உள்ள குறைகளில் உண்மையானவற்றைத் தைரியமாய் ஒப்புக் கொண்டு அவைகளை இந்திய மக்களுக்கு நன்றாய் விளக்கிக் காட்டி, அக்குறைகளை ஒழிக்க முற்படுபவன் உண்மையாகத் தனது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டைச் செய்த வீரனாவானா? என்பதே இப்பொழுது ஒவ்வொருவரும் யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.

- நன்றி: உண்மை மார்ச் 1-15, 2009