Tuesday, February 27, 2007

கார்ப்பரேட் (CORPORATE)

முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழிக்கும் “கார்ப்பரேட்”

“மாற்று சினிமாவுக்கான முயற்சிகளும், சமூக சிந்தனையுள்ள படங்களும் இந்தித் திரையுலகிலும் உண்டு என்றால் நம்ப மறுப்பவரா நீங்கள்! நானிருக்கும் வரை அந்த முடிவை ஒத்தி வையுங்கள்” என்கிறார் இயக்குநர் மதூர் பண்டார்கர். ஏற்கெனவே தான் எடுத்த ‘மூன்றாம் பக்கத்’தின் (Page 3) மூலம் இந்தியத் திரையுலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். கடந்த ஆண்டு அவர் இயக்கி வெளியிட்ட படம் ‘கார்ப்பரேட்’ (Corporate). 2006 கோவா திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது.

2005ஆம் ஆண்டு திரைப்பட விழாவின் விவாத அரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது பண்டார்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “ஏன் எதையெடுத்தாலும் பிரச்சினைகளை நோக்கியே கொண்டு செல்கிறீர்கள். வணிக சினிமாவுக்கு வரும் எண்ணம் இல்லையா?” என்று “வணிக சினிமா என்றில்லை, நல்ல படங்கள் சமூக சிந்தனையுடையவை வெற்றி பெற்றால் அவையும் வணிகப் படங்கள்தான். அந்த வகையில் அய்ட்டம் நம்பர் வைக்காத, ஹீரோக்களை நம்பாத, கதையம்சத்தோடு கூடிய வணிகப் படங்களாக என் படங்கள் இருக்கும். கார்ப்பரேட்டும் அப்படித்தான். ‘கார்ப்பரேட்’ உலக மறு பக்கத்தைக் காட்டும்” என்று தெளிவாக பதில் தந்தார் மதூர்.

சீகல் குரூப் மற்றும் மார்வா குரூப் இரண்டுக்கும் இடையிலான தொழில் போட்டியில் நகர்ந்து செல்கிறது கதை. பாரம்பரிய பணக்காரரான மார்வா குரூப் முதலாளி தர்மேஷ் மார்வாவாக ராஜ் பாப்பரும், சீகல் முதலாளி வினய்சீகலாக ரஜத் கபூரும், தொழிலில் தோல்வியடைந்து லண்டனில் இருந்த இருந்து திரும்பிவரும் சீகலின் மைத்துனர் ரித்தேஷாக கே.கே.-மேனனும் நடித்துள்ளனர். கவர்ச்சிக்காவும், அய்ட்டம் நம்பராகவும் பயன்படுத்தப்பட்ட ‘பிபாஷா பாசு’ இப்படத்தின் அடித்தளமான கதாபாத்திரத்தில் ‘நிஷி கந்தா தாஸ்குப்தா’வாக பொருத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.

சீகல் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நிஷிகந்தாவும், ரித்தேஷும் முன்னாள் காதலர்கள்.மகாராஷ்டிராவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த குளிர்பான தொழிற்சாலை ஒன்றை விலைக்கு வாங்குவதில் சீகல் மற்றும் மார்வா நிறுவனங்கள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில், மாநில நிதியமைச்சருக்கு ரொம்பப் பிடித்தமான பாலிவுட் அய்ட்டம் நடிகையை ‘ஏற்பாடு’ செய்வித்து அத்தொழிற் சாலையை கைப்பற்றுகிறது ‘மார்வா’ நிறுவனம்.

இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து வணிகத்தில் தோற்றுத் திரும்பும் ரித்தேஷ் தன்னை நிரூபிக்க வேண்டியவராகிறார். அவருக்கு உதவவும், வணிகத்தை நிலை நிறுத்தவும் களமிறங்கும் நிஷி கந்தா, மார்வா நிறுவனத்தின் முக்கிய அலுவலர் ஒருவரை ஏமாற்றி,(அவரை மயக்க ஒரு பெண்ணை அனுப்பி) அவரிடமிருந்து ரகசியம் ஒன்றை திருடுகிறார். மாநில அரசிடமிருந்து வாங்கிய குளிர்பான தொழிற்சாலையில் ‘மின்ட்’ சுவையிலான கோலா பானம் ஒன்றினைத் தயார் செய்ய மார்வா நிறுவனம் தீட்டிய திட்டத்தை அதன்மூலம் தெரிந்து கொண்ட சீகல் நிறுவனம் வெகு விரைவில் அவர்களுக்கு முன்னதாகவே கோலா வகை பானத்தை ‘Just Chill’ என்ற பெயரில் வெளியிட முடிவு செய்து செயலாற்றுகிறது. அந்தப்பணி, ரித்தேஷ் மற்றும் நிஷி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் வென்று காட்டுவது என்ற முடிவோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வாண்டின் ‘சிறந்த தொழிலதிபர்’ விருதுக்காக பட்டியலிலும் மார்வாவும் சீகலும் மோதுகிறார்கள். பெரிய இடத்துக்கு ‘ஏற்பாடு’ செய்பவரின் மூலம் தனக்கு அந்த விருது கிடைக்க வழி பார்க்கிறார் சீகல். தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்க சத்தமில்லாமல் விருது பெறுகிறார் மார்வா. இதனால் கோபமடையும் சீகல், மறுநாளே தாங்கள் தயாரிக்கப்போகும் பானம் வெளியிடப்படும் தேதியை அறிவிக்கிறார்.

தங்களின் ரகசியத் திட்டம் அம்பலமானதை அறிந்து அதற்குக் காரணம் நிஷியின் சூழ்ச்சி வலையில் விழுந்த தம் குழும அதிகாரிதான் என்பதையறிந்து அவரை பணியிலிருந்து விரட்டுகிறது மார்வா குழுமம்.தன் நிறுமப் பங்குகளை வளைக்கவும், விரைவில் நிலையற்ற தன்மையை உண்டாக்கவும், சீகல் குழுமம் மேற்கொண்ட குறுக்கு வழிகளை திருப்பியடிக்கிறது மார்வா. பாரம்பரிய தொழிலதிபர் மார்வா ‘குருஜி’ எனப்படும் சாமியாரின் தீவிர பக்தர். சாமியார் சொல்லும் நிறத்தில் கல் மோதிரம் அணிவதிலிருந்து, தேதி குறிப்பது வரை அனைத்தும் செய்பவர் மார்வா. அதே குருஜியின் சீடர்களில் ஒருவர்தான் பங்கு வணிகச் சூதாடியாக ஏற்கனவே சீகலுக்காக உழைத்தவர். சாமியாரின் உதவியுடன் அவரை அணுகி தங்களுக்கு ‘உழைக்க’ வைக்கிறார். பொருளை வெளியிடும் காலம் நெருங்குகிறது. புதிய குளிர்பானத்தின் தரத்தை சோதனை செய்வதற்காக வரும் தரச்சான்று குழுவினர், குளிர்பானத்தில் பூச்சி மருந்துகளின் விகிதம் அதிகம் இருப்பதாக, அறிக்கை தருகின்றனர். இதனைக் கருவிலேயே அழிக்கிறார் சீகல். மக்களுக்குக் கேடான இந்த பானத்தை வெளிக் கொண்டுவருவது ஆபத்து என்று கூறி சீகல் நிறுவனத்தின் ஆலோசகர் பதவி விலகுகிறார். அதுபற்றிக் கவலைப்படாமல் புதிய பானம் அறிமுகமாகிறது.

பூச்சிக்கொல்லி கலந்திருப்பது மார்வா நிறுவனத்திற்குத் தெரியவர, அது மாநில அமைச்சர் மூலம் அதிரடி ரெய்டையும், தொண்டு நிறுவனங்களுக்குக் காசு கொடுத்து போராட்டத்தையும் ஊக்குவிக்கிறது. தங்களின் புதிய பானத்திற்கு ஏற்பட்ட சிக்கலை கவலையுடன் எதிர்நோக்குகிறார்கள் நிஷியும் ரிதேஷூம். சிக்கல் தீவிரமாகி அதற்காக சீகல் நிறுவன அதிபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலை வர, தலைமைப் பொறுப்பில் ‘நிஷி’யை நிறுத்தி ‘பலிகடா’வாக அவளை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதற்கு ரிதேஷ் ‘தன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள் நிஷி’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான்.

மார்வா நிறுவனத்துடன் சமரசத்துக்கு வருமாறு சீகல் நிறுவனத்தை அழைக்கிறார்கள் மத்திய + மாநில நிதி அமைச்சர்கள். சமரசத்தில் இனி ஒருவர் வியாபாரத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் ‘நிஷி’யின் வழக்கை அப்படியே விட்டுவிடுகிறோம். இப்போது கவலையில்லை. தேர்தல் நேரத்தில் வழக்கை வாபஸ் பெற முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள் இதில் கோபமடையும் ரித்தேஷ் தனது மைத்துனரான வினய்-யிடம் “விரைவில் நிஷி வெளிவரவில்லையானால் ரகசியங்களை வெளியிட்டு விடுவேன்” என்று சீற, மறுநாள் காலை தனது வீட்டு மாடியிலிருந்து குடிபோதையில் விழுந்து ரிதேஷ் இறந்துவிட்டதாக, ரிதேஷ் கணக்கு வழக்கை ‘முடித்து’ விடுகிறார் சீகல்.

இப்படியாக சிக்கல் நிறைவுபெற, சீகல் தன் தொழிலும், மார்வா தன் தொழில் மற்றும் சாமியார் பக்தியிலும் மூழ்க, சீகலில் இருந்து விலகிய ஆலோசகர், தனது துறையில் முன்னேற, பலிகடாவாக்கப்பட்ட ‘நிஷி’ மட்டும் ‘பூச்சி மருந்து கலக்கப்பட்ட கோலாபானம்’ வழக்கில் தொடர்ந்து கோர்ட் படியேறிவருகிறார் தனது குழந்தையுடன்!

முதலாளித்துவம் தனது நோக்கத்தில் தெளிவாகவே இருக்கிறது. லாபம் ஒன்றே அதன் குறிக்கோள். அதற்காகப் பயன்படும் யாரையும் பயன்படுத்திக் கொள்ளும். பின்னர் ஏறி மிதித்துக் கொல்லவும் தயாராகிவிடும். இன்றைய, கார்ப்பரேட் உலகம் என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகளின் மறுபக்கத்தை படம் பிடித்த மதூர் பண்டார்கரை என்ன பாராட்டினாலும் தகும். அதற்குள் பன்னாட்டு நிறுவனம், பொருளாதார வளம் என்னும் பெயரில் பஞ்சாயத்து பண்ணும் அரசு, பெப்சி, கோகோகோலா மனித அழிப்பு நடவடிக்கைகள் என அத்தனையையும் தோலுரிக்-கின்றது. நீ வளர வேண்டுமா, உனக்குப் பணம் வேண்டுமா, செய்யத் தயங்கக் கூடாதவை மூன்று என்கிறது முதலாளித்துவம்.

1. காட்டிக் கொடு
2. போட்டுக் கொடு
3. கூட்டிக் கொடு

உன் நிறுவன பணியாளனை தொடர்ந்து உறிஞ்ச வேண்டுமா? அவன் மனம் குளிரும்படி “ஊத்திக் கொடு, ஆடவிடு, கோர்த்துவிடு” என்று தன் லாபவெறியால் அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவம் என்னும் நவீன ‘கார்ப்பரேட்’.அத்தகைய புகழ் வெளிச்ச, பண உலகின் கரும் பக்கத்தை புரட்டிக் காட்டிய மதூர் பண்டார்கரின் ‘கார்ப்பரேட்’, இன்றைய இளைஞர்களால் அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, மேலாண்துறை, நிர்வாகத் துறைகளில் நல்ல சம்பளம் என்ற போதையில் தன்னிலை மறக்கத் துவங்கியிருக்கும் இளைய தலைமுறை கற்கவேண்டிய பாடம்!
நன்றி: உண்மை